அ. தாமோதரன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
அ. தாமோதரன் |
---|---|
பிறப்புபெயர் | அ. தாமோதரன் |
பிறந்ததிகதி | 1935 |
பிறந்தஇடம் | திருமூலத்தானம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | சூன் 14, 2019 (அகவை 83–84) |
பணி | பேராசிரியர் |
கல்வி | முனைவர் (கேரளப் பல்கலைக்கழகம்) இளங்கலை (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) |
பணியகம் | ஐடெல்பர்கு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | தமிழியல், இந்தியவியல் அறிஞர் |
பேராசிரியர் அ. தாமோதரன் (Ayyadurai Dhamotharan, 1935 - சூன் 14, 2019) ஒரு தமிழியல், இந்தியவியல் அறிஞர். தமிழ் மரபிலக்கணத்தில் சிறந்து விளங்கிய அறிஞர்களில் ஒருவர்.[1] கேரளப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற இவர், செருமனிய ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிறுவனத்தில் தலைவராகப் பணியாற்றினார். இவர் வெளியிட்ட தமிழ் அகராதிகளின் நூற்பட்டியல் என்ற நூல் 600 பதிவுகளுடன் விரிவான ஒரு படைப்பாகும்.[2] தமிழின் இடைக்கால இலக்கண நூலாகிய நன்னூல் ஆய்வில் புகழ்பெற்றவர்.
இளமைக்காலம்
அ. தாமோதரன் தமிழ்நாடு, கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள திருமூலத்தானம் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர்.[3] இவரது தந்தை பெயர் அய்யாதுரை ஆவார்.
கல்வி
அ. தமோதரன், தான் பிறந்த ஊரிலும் அருகிருந்த ஊர்களிலும் பள்ளிக்கல்வியை முடித்த பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு இவர் 1956-59 காலப்பகுதியில் தமிழிலக்கியத்தில் இளங்கலைப் (சிறப்புநிலை) பட்டம் பெற்றார்.[3] பின்னர் ஒரு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இரண்டாண்டுகள் பணி புரிந்தார். அதன் பின் கேரளப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியம் அவர்களின் நெறியாள்கையில் முனைவர் பட்டப்படிப்புக்குப் பதிவு செய்துகொண்டார். இவரின் ஆய்வுத்தலைப்பு "திருக்குறளின் மொழி" என்பதாக இருந்தது. சொற்றொடர் ஆய்வுக் கருத்துகளையும் அமெரிக்க மொழியியலாளர் கென்னத் பைக்கின் இலக்கண உருபனியல் (tagmemics) ஆய்வுக்கூறுகளையும் இவர்தம் ஆய்வில் பயன்படுத்தினார். கென்னத் பைக்கு இவருக்கு உதவியாக இலக்கண உருபனியல் ஆய்வு தொடர்பான கருத்தியல், பயன்முக ஆய்வுத் தரவுகளை அனுப்பினார். தாமோதரன் 1966 இல் முனைவர்ப் பட்ட ஆய்வுரையைச் செலுத்தினார். இவருடைய ஆய்வுரையின் புறநிறுவன மதிப்பீட்டுத் தேர்வாளர் பேராசிரியர் கமில் சுவெலபில் இவரின் ஆய்வுரையைப் பெரிதும் போற்றினார்.[3] 1967-68 காலப்பகுதியில் தாமோதரன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் உயராய்வு நடுவத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் இடாய்ச்சுலாந்தில் உள்ள ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கழகத்திலிருந்து மொழித்துறை ஆசிரியராகப் பதவியேற்க அழைப்பு வந்தது.[3]
இடாய்ச்சுலாந்தில் உள்ள ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கழகத்தில் இந்தியவியல் துறைத்தலைவர் பேராசிரியர் எர்மன் பெர்கரால் 1969 இல் தாமோதரன் தமிழில் விரிவுரையாளராகப் பதவியில் அமர்த்தப்பெற்றார். இப்பதவி அமர்வுக்குக் பேராசிரியர் கமில் சுவெலபில் பரிந்துரைத்திருந்தார். தாமோதரன் அவர்களின் பதவியேற்போடு இடாய்ச்சுலாந்தின் கொலோன் பல்கலைக்கழகத்தின் பா. ரா. சுப்பிரமணியனின் விரிவுரையாளர் பதவியேற்பும் சேர்ந்து தமிழாய்வில் இடாய்ச்சுலாந்து சிறந்து முன்னேறியது.[3]
ஆய்வும் பணி வரலாறும்
முனைவர் தாமோதரன் ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தில் அடுத்த 30 ஆண்டுகள் பணியாற்றினார். மிக விரைவாக இடாய்ச்சு மொழியில் நற்தேர்ச்சி பெற்றார். முப்பது ஆண்டுகளாக இடாய்ச்சுலாந்து மாணவர்களுக்குத் தமிழ்மொழியை இடாய்ச்சு மொழியிலேயே பயிற்றுவித்தார். இப்பயிற்றுவிப்பு இந்தியவியல் துறையில் முதுகலைப் படிப்பில் எல்லா நிலைகளிலும் நடைபெற்றது. பல ஆண்டுகளாகத் தமிழ்மொழியை இடாய்ச்சுச் சூழலில் பயிற்றுவித்ததின் பயனாக முனைவர் தாமோதரன் இடாய்ச்சுமொழி, தமிழ்மொழி ஆகிய இரண்டிலும் நுணுக்கமான மொழிநுண்ணறிவு பெற்றிருந்தார். இவ்வறிவையும் திறனனையும் தமிழ்-இடாய்ச்சு மொழிபெயர்பெயர்ப்பு வகுப்புகளில் தாமோதரன் தன் விருப்ப எழுத்தாளரான செயகாந்தன் அவர்களின் எழுத்துகளைப் பயனுற மாணவர்களுக்குப் பயிற்றுவித்தார்.[3]
இவர் இடாய்ச்சு-தமிழ் அகராதி ஒன்றையும் உருவாக்க உழைத்தார். ஆனால் இது நிறைவு பெறவில்லை.[3]
ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பொழுது அங்கு நடந்த அனைத்து தமிழ் முனைவர்ப்பட்ட ஆய்வுகளுக்கும் இவர் இணை நெறியாளராக இருந்தார். எடுத்துக்காட்டாக எவலின் மேயரின் காவல் தெய்வங்கள் பற்றிய ஆய்வு, தாமசு மால்ட்டனின் அடுக்குத்தொடர் பற்றிய ஆய்வு, தாமசு இலேமனின் பழந்தமிழ் இலக்கணம் பற்றிய ஆய்வு, சாக் இடைனரின் தமிழ் வினைச்சொற்கள் பற்றிய ஆய்வு ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.[3]
தாமோதரனின் முதன்மையான ஆர்வம் இலக்கண நூலாகிய நன்னூலைப் பற்றியும் அதன் பல்வேறு உரைகளைப் பற்றியுமான திருத்தப் பதிப்பு பற்றியதாக இருந்தது. முதலில் பல்வேறு உரையாசிரியர்கள் மேற்கோளாகக் காட்டிய திருக்குறள்களை அக்கறையுடன் தொகுத்தார். இம்மேற்கோள்கள் எப்பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்டன என்பதை வகைப்படுத்தி அதனை திருக்குறள் மேற்கோள் விளக்கம் என்ற நூலாக 1970 இல் வெளியிட்டார். 1972 இல் திருக்குறளின் இலக்கணத்தையும் (தெற்காசிய ஆய்வுகள் பதிப்பெண் 5, ஐடெல்பர்கு பல்கலைக்கழகம், 1972) அதன் பின் தமிழ் அகரமுதலிகளின் நூற்குறிப்புத் தொகுதி ஒன்றை 1978 இலும் வெளியிட்டார். முனைவர் தாமோதரன் 1980 இல் நன்னூல் இலக்கணத்திற்கு, அதுவரை கிடைக்காதிருந்த கூழங்கைத் தம்பிரானின் உரையை இலண்டனில் உள்ள பிரித்தானிய நூலகத்தில் கண்டுபிடித்து, அதைக் கைப்பட எழுதிக்கொண்டுவந்து, பதிப்பித்தார். 1999 இல் சங்கர நமச்சிவாயரின் உரையையுமாகச் சேர்த்து (சிவஞான முனிவரின் உரையோடும்) இரண்டு நுண்சிறப்பான பதிப்புகளை வெளியிட்டார். இவர் தன்னுடைய பதிப்பாசிரியர் பணியில் மிகவும் துல்லியமாகவும், நுண்ணிய அக்கறையுடனும் அறிவுப்புல நேர்மெய்த்தன்மையுடனும் தொழிற்பட்டார். 1999 ஆம் ஆண்டு நன்னூல் பதிப்பில், புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தினார். இப்பதிப்பு வடிவம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது.[3]
பணி ஓய்வும் அதன் பின் ஆய்வுப் பங்களிப்பும்
2000 ஆம் ஆண்டில் முனைவர் தாமோதரன், தன் 65 ஆம் அகவையில் ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்றார். ஓராண்டு கழித்து 2001 இல் தமிழ்நாட்டுக்குத் திரும்பினார். தமிழ் உரைப் பதிப்பாசிரியத் துறையில் இவருடைய பெரும் திறமையையும் புலமையையும் அறிந்து சென்னையில் உள்ள நடுவண் செம்மொழிக் கழகம் தன்னுடைய செம்மொழி இலக்கியங்களின் திருத்தமான் செம்பதிப்புப் பணியில் பங்குகொள்ள அழைப்பு விடுத்தது.[3]
8 ஆம் நூற்றாண்டு நூலான இறையனார் களவியலின் திருத்தமான செம்பதிப்பு ஒன்றை உருவாக்க இவரிடம் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதனை இவர் பொறுப்புடன் ஓலைச்சுவடிகளை ஒப்பிட்டு 2013 இல் பதிப்பித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதியின் திருத்திய அடுத்த பதிப்பை வெளிக்கொணர அறிவுரையாளராகப் பணியாற்றினார். 2008 இல் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் திருத்திய விரிவாக்கிய பதிப்பின் அறிவுரைஞராகவும் பணிபுரிந்தார். 2001 இல் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மதிப்புறு பேராசிரியராகவும் இருந்தார். மொழி நிறுவனத்தின் ஆளுநர் ஆயக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.[3]
முனைவர் தாமோதரன் கூழங்கைத் தம்பிரானின் நன்னூல் உரையின் இன்னொரு பதிப்பையும் கிரியா வெளியீடாக 2010 இல் வெளிக்கொணர்ந்தார்.[3]
வெளியிட்ட நூல்கள்
அ. தாமோதரன் எழுதியும், தொகுத்தும் வெளியிட்ட சில நூல்கள்:[4]
- Tamil dictionaries : a bibliogr. (Wiesbaden : Steiner, 1978., மூன்று மொழிகளில் 10 பதிப்புகள்)
- A grammar of Tirukkural (South Asia Institute, University of Heidelberg, Delhi Branch, 1972., 7 பதிப்புகள்)
- நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும் (Wiesbaden : Steiner, 1980., 7 பதிப்புகள், தமிழ், இடாய்ச்சு)
- அருணந்தியின் சிவஞானசித்தியார்: die Erlangung des Wissens um Śiva oder um die Erlösung (Wiesbaden : Steiner, 1981.)
- திருக்குறள் மேற்கோள் விளக்கம் (1970, 2 பதிப்புகள்)
- Word-borrowing and word-making in modern South Asian languages (Heidelberg : South Asia Institute, University of Heidelberg, 1978)
- பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் உரையும் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1999)
- இறையனார் களவியல் (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2013)
- சங்கர நமச்சிவாயர் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2003)
- பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்: ஒரு செம்பதிப்பு (க்ரியா, 2010)
இறுதி நாட்கள்
வாணாளின் கடைசி சில ஆண்டுகள் நோய்வாய்ப்பட்டு தமிழ்நாட்டில் தான் பிறந்து வளர்ந்த ஊரில் வாழ்ந்திருந்து 2019 சூன் 14 இல் இயற்கை எய்தினார்.[1] இவரின் மனைவி, இரு மகன்கள், பெயர்கள் பெயர்த்திகள் இருக்கின்றார்கள்.[3]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "360: தமிழறிஞர் அ.தாமோதரன் காலமானார்!". இந்து தமிழ் திசை.
- ↑ "Tamil studies in Germany".
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 Dr. Thomas Lehmann, Dr. P. R. Subramanian (26 சூன் 2019). "Obituary: Dr. Ayyadurai Dhamotharan (1935-2019)". வல்லமை (மின்னிதழ்). பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2019.
- ↑ "Dhamotharan, Ayyadurai 1935-". WorldCat Identities. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2019.