அல்வழி
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை தமிழர்விக்கி நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், தமிழர்விக்கி:நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை தயவுகொண்டு துப்புரவு செய்து உதவலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழில் காணப்படும் ஒன்பது தொடர்களுள், வேற்றுமைத் தொடர் அல்லாத மூன்று தொடர்களே அல்வழித் தொடர்கள் ஆகும். அல்வழி என்பதை வேற்றுமை அல்வழி என்று தொல்காப்பியர் விளக்குவார் (தொல்காப்பியம்,112).
வேற்றுமை இன்னதென்பது
பெயர் வினை உறவு நிலையே வேற்றுமை (cases) எனப்படும். அவ் வேற்றுமைகள் உறவு நிலை அடிப்படையில் 7 வகைப்படும். அவையாவன:
1. எழுவாய்ப் பயனிலை உறவு நிலை
2. செயப்படுபொருள் பயனிலை உறவு நிலை
3. கருவிப் பயனிலை உறவு நிலை
4. பயன் பயனிலை உறவு நிலை
5. பண்பு, தொழில் சார் இடன் பயனிலை உறவு நிலை
6. கிழமைப் பயனிலை உறவு நிலை
7. பொருள், நிலம், காலம் சார் இடன் பயனிலை உறவு நிலை
”வேற்றுமை தாமே ஏழென மொழிப” (தொல்காப்பியம்,546) என்பார் தொல்காப்பியர்.
வேற்றுமைத் தொடர் இன்னதென்பது
எழுவாய்ப் பயனிலை உறவு நிலையில் வேற்றுமை உருபின் பயன்பாடு இல்லை. செயப்படுபொருள் பயனிலை உறவு நிலை முதலாகப் பொருள், நிலம், காலம் சார் இடன் பயனிலை உறவு நிலை ஈறாக அமையும் உறவு நிலைகளில் வேற்றுமை உருபின் பயன்பாடு உண்டு. இவ் ஆறும் புணரியல் நோக்கில் – தொடரியல் நோக்கில் - பெரிதொத்துச் செல்கின்றன. எனவே, வேற்றுமைகள் ஏழாக அமைந்தாலும் வேற்றுமைத் தொடர்களை ஆறெனவே தொல்காப்பியர் கொண்டுள்ளார்.
“வேற்றுமை குறித்த புணர்மொழி நிலை” (தொல்காப்பியம்,112:1)
என்று தொல்காப்பியர் குறிப்பிடுவதால், இதனை உணரலாம்.
அல்வழித் தொடர் இன்னதென்பது
வாக்கிய உருவாக்கத்திற்குப் பயன்படுவதே அல்வழித் தொடர் ஆகும். எழுவாய் பயனிலை இணைந்ததே வாக்கியம் ஆகும்.
எழுவாய் என்பது வாக்கியத்தில் பேச எடுத்துக்கொண்ட பொருள் ஆகும். பயனிலை என்பது எழுவாய் புரியும் செயல் அல்லது தொழிலையோ எழுவாயின் இயல்பு அல்லது பண்பையோ சுட்டுவது ஆகும்.
எழுவாயைச் சார்ந்த பகுதியோடு வரும் எழுவாயே எழுவாய்த் தொடர் ஆகும். பயனிலையைச் சார்ந்த பகுதியோடு வரும் பயனிலையே பயனிலைத் தொடர் ஆகும். பெயரடையோடு கூடிய பெயர்த்தொடர் எழுவாய்த் தொடராக அமையக் கூடியதாகும். எழுவாய்த் தொடரினுள் ஒரு வாக்கியம் உள் பொதிந்து இருக்கும்.
வாக்கியம்(Sentence-S) எழுவாய்த் தொடர்(Noun Phrase-NP), பயனிலைத் தொடர்(Verb Phrase-VP) என இருவகைப்படும்.
எ.டு. சிரித்த மருதன் மகிழ்ச்சியாக விளையாடினான்.
வா(S)-இல் சிரித்த மருதன் (எழு.தொ.NP), மகிழ்ச்சியாக விளையாடினான் (பய.தொ.VP) ஆகியவை அடங்கியுள்ளன. சிரித்த மருதன் என்னும் எழுவாய்த் தொடர், மருதன் சிரித்தான் (வா-S1) என வாக்கியமாகும்.
எழுவாய் பயனிலை:
எழுவாய்த் தொடரில் பெயரடைத் தொடரும் பயனிலைத் தொடரில் வினையடைத் தொடரும் அமைந்துள்ளன. எழுவாயாக அமையும் பெயரும் பயனிலையாக அமையும் வினையும் முறையே பெயரடையையும் வினையடையையும் விளக்குகின்ற நிலையில் ஏற்று வரக் கூடியன. எனவே அடைத்தொடரும் அல்வழியைச் சார்ந்ததாகிறது. வெளிப்படைப் பொருளுக்குரிய பெயர், வினை, பெயரடை, வினையடை ஆகிய நான்கு சொற்களும் திரும்பத் திரும்ப அடுக்கி வருவதால் அடுக்குத் தொடரும் அல்வழி சார்ந்ததாகிறது.
எழுவாய் பயனிலை உறவு நிலைத் தொடர்
எழுவாயும் பயனிலையும் சுட்டப்பட்ட ஓர் உறவு நிலையில் இணைந்து எழுவாய்ப்பயனிலை உறவு நிலைத் தொடர் உருவாகிறது. இத் தொடர் முதல் வேற்றுமைத் தொடர் என்றும் எட்டாம் வேற்றுமைத் தொடர் என்றும் இரண்டு வகைப்படுவதாகும்.
முதல் வேற்றுமைத் தொடர்
பேச எடுத்துக்கொண்ட பொருள் புரியும் செயலையோ அதன் இயல்பையோ எடுத்துரைப்பதாக அமைவது முதல் வேற்றுமைத் தொடர் ஆகும்.
எ.டு.
1. சாத்தன் பாடினான்.
2. சாத்தன் நல்லவன்.
எட்டாம் வேற்றுமைத் தொடர்
பேச எடுத்துக்கொண்ட பொருள் என்ன செயல் புரிய வேண்டும் என விரும்புவதை வியங்கோள் நிலையிலோ கட்டளை நிலையிலோ எடுத்துரைப்பதாக அமைவது எட்டாம் வேற்றுமைத் தொடர் ஆகும்.
எ.டு.
1. சாத்தன் பாடுக (வியங்கோள் நிலை)
2. சாத்தன் பாடு (கட்டளை நிலை)
அடைத் தொடர்
பெயரை விளக்குகின்ற நிலையில் அமையும் அடையோடு கூடிய பெயரோ அல்லது வினையை விளக்குகின்ற நிலையில் அமையும் அடையோடு கூடிய வினையோ, அடைத் தொடர் எனப்படும்.
அடைத் தொடர் இரண்டு வகைப்படும். அவையாவன:
1. பெயரடைத் தொடர்
2. வினையடைத் தொடர்
பெயரடைத் தொடர்
பெயரை விளக்குகின்ற அடை பெயரடை ஆகும். அது வினையை விளக்காது. பெயடையோடு கூடிய பெயர் பெயரடைத் தொடர் எனப்படும்.
எ.டு. நல்ல நாய்
பெயரடைத் தொடரின் வகைகள்
பெயரடைத் தொடர் நான்கு வகைப்படும். அவையாவன:
1. பெயரடித் தொடர்
2. வினையடித் தொடர்
3. பெயரெச்சத் தொடர்
4. தனியடைத் தொடர்
பெயரடித் தொடர்
பெயரடியை அடையாகக் கொண்டுவரும் பெயராகும்.
எ.டு. மாண் புகழ்
வினையடித் தொடர்
வினையடியை அடையாகக் கொண்டுவரும் பெயராகும்.
எ.டு. செய் தொழில்
பெயரெச்சத் தொடர்
பெயரெச்சத்தை அடையாகக் கொண்டுவரும் பெயராகும்.
எ.டு. ஓடிய குதிரை
தனியடைத் தொடர்
பெயரடி, வினையடி, பெயரெச்சம் அல்லாத வேறு அடையே தனியடை ஆகும். அத்தகைய தனியடையை அடையாகக் கொண்டுவரும் பெயரே தனியடைத் தொடர் ஆகும்.
எ.டு. தீம் பழம்
வினையடைத் தொடர்
வினையை விளக்குகின்ற அடை வினையடை ஆகும். அது பெயரை விளக்காது. ஆனால், அது வினையடையையோ பெயரடையையோ விளக்குவதுண்டு.
வினையை விளக்குதல்
எ.டு. விரைவாக நடந்தார்
வினையடையை விளக்குதல்
எ.டு. மிக விரைவாக நடந்தார்
பெயரடையை விளக்குதல்
எ.டு. இன்னும் தீய செயல்
வினையடைத் தொடரின் வகைகள்
வினையடைத் தொடர் இரண்டு வகைப்படும். அவையாவன:
1. வினையெச்சத் தொடர்
2. தனியடைத் தொடர்
வினையெச்சத் தொடர்
வினையெச்சத்தை அடையாகக் கொண்டுவரும் வினை வினையெச்சத் தொடர் ஆகும்.
எ.டு. நாடி வந்தான்
தனியடைத் தொடர்
வினையெச்சம் அல்லாத வேறு அடையே தனியடை ஆகும். அத்தகைய தனியடையை அடையாகக் கொண்டுவரும் வினையே தனியடைத் தொடர் ஆகும்.
எ.டு. இனிக் கொண்டான்
அடுக்குத் தொடர்
பெயரோ வினையோ பெயரடையோ வினையடையோ திரும்பத் திரும்ப அடுக்கி வந்தால் அது அடுக்குத் தொடர் ஆகும். வந்த அதே சொல்லே திரும்பத் திரும்ப வரும்போது அது தன்னடுக்குத் தொடர் ஆகும். வேறு சொல் திரும்பத் திரும்ப வந்தால், அது பல்லடுக்குத் தொடர் ஆகும்.
பெயர் அடுக்குத் தொடர்
பெயர் திரும்பத் திரும்ப அடுக்கி வந்தால் அது பெயர் அடுக்குத் தொடர் ஆகும்.
எ.டு. நாயே நாயே வந்தாயா?
வினை அடுக்குத் தொடர்
வினை திரும்பத் திரும்ப அடுக்கி வந்தால் அது வினை அடுக்குத் தொடர் ஆகும்.
எ.டு.கந்தன் வந்தான் வந்தான்
பெயரடை அடுக்குத் தொடர்
பெயரடை திரும்பத் திரும்ப அடுக்கி வந்தால் அது பெயரடை அடுக்குத் தொடர் ஆகும்.
எ.டு. நல்ல நல்ல பிள்ளை
வினையடை அடுக்குத் தொடர்
வினையடை திரும்பத் திரும்ப அடுக்கி வந்தால் அது வினையடை அடுக்குத் தொடர் ஆகும்.
எ.டு. விரைய விரையப் பறந்து வா
நிறைவுரை
இக் கட்டுரையில் வேற்றுமைத் தொடர் இன்னது என்பதும் அல்வழித் தொடர் இன்னது என்பதும் அல்வழியின் வகைகள் இன்னவை என்பதும் விளக்கப்பட்டுள்ளன.