அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி
Kumbakonam arignarannagovt school1.jpg
அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம்
அமைவிடம்
கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்
தகவல்
நிறுவல்10 நவம்பர் 1919
தலைமை ஆசிரியர்வை. சாரதி

அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியாகும்.

தொடக்கம்

10 நவம்பர் 1919 நாளிட்ட கல்வெட்டு
31 அக்டோபர் 1955 நாளிட்ட கல்வெட்டு

10 நவம்பர் 1919இல் அப்போது நகராட்சி கவுன்சிலராக இருந்த முகமது ஹபிபுல்லா சாகிப் பகதூர் என்பவரால் பள்ளி திறந்துவைக்கப்பட்டது. [1] [கு 1]

சிறப்பு

பள்ளிக்கட்டடம் திறப்பதற்கு முன்பாக கும்பகோணம் கம்பட்ட விசுவநாதர் கீழவீதியில் நடராசப்பிள்ளை என்பவரது இல்லத்தில் இப்பள்ளி இயங்கியது. அப்போது பள்ளிக்குத் தேவையாக இருந்த 3 ஏக்கர் நிலத்தை எதிர்வீட்டிலிருந்த குருநாதபிள்ளை வழங்கியதால், இப்பள்ளியை குருநாதப்பிள்ளை பள்ளி என்று அழைத்தனர். [1] 20 மாணவர்களோடு தொடங்கப்பட்ட பள்ளி, இன்று 600 மாணவர்களையும், 32 ஆசிரியர்களையும் கொண்டு திகழ்கிறது. தறித்தொழிலாளர்கள், பாத்திரத் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு வித்திடும் பெருமையை இப்பள்ளி கொண்டுள்ளது. தடகளம், வாள்வீச்சு, கபடி எனத் தஞ்சை மாவட்ட அளவில் விளையாட்டில் இப்பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது. போட்டோகிராபி கிளப், படைப்பாற்றல் குழு, உரையாடல் குழு, நாடகக்குழு எனக் கலை, இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் மாணவர்களை ஆக்கபூர்வமாக உருவாக்கி வருகிறது. [2]

வரலாறு

கும்பகோணம் நகராட்சித்தலைவராக குஞ்சிதபாதம் செட்டியார் இருந்த காலத்தில் ஒரு புதிய கட்டடம் 31 அக்டோபர் 1955இல் திறந்துவைக்கப்பட்டது. 1973ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா நகராட்சி உயர்நிலைப்பள்ளி எனப் பெயர் பெற்றது. 1977-78இல் மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டு, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியானது. [1]

நூற்றாண்டு விழா

இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுவது தொடர்பாக 16 சூன் 2019, 14 சூலை 2019 [3] [4] மற்றும் 15 மார்ச் 2020 [5]நடைபெற்ற சந்திப்புக்கூட்டங்களில் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். அக்கூட்டங்களில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • ஸ்மார்ட் வகுப்புகளை உருவாக்குதல், பள்ளிக்குத் தேவையான பர்னிச்சர்களை வாங்கித்தருதல், சுற்றுச்சுவரை உயர்த்துதல் மற்றும் அடிப்படைத் தேவைகளைச் செய்துதரல் [6]
  • ஆண்டுதோறும் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை ஊக்குவித்தல், ஏழை மாணவர்களுக்கு கல்விக்குத் தேவையான செலவுகளை ஏற்றுக்கொள்ளல் [6]
  • மாணவர்கள் மதிப்பெண் பெற காரணமான ஆசிரியர்களையும், ஓய்வு பெறும் ஆசிரியர்களையும் ஆண்டுதோறும் கௌரவித்தல் [6]
  • புதிதாக நூலகம் அமைத்து, தேவையான நூல்கள் வாங்கித்தருதல் [3]
  • பள்ளி நூற்றாண்டு விழாவுடன் முன்னாள் மாணவர் சங்கத்தின் 50ஆவது ஆண்டு விழாவினைக் கொண்டாடுதல் [3]
  • பள்ளிக்கு நிலம் வழங்கிய குருநாதன் பிள்ளை படத்திறப்புக்கு ஏற்பாடு செய்தல் [7]
  • விழா நினைவாக மலர் வெளியிடல் [7]
  • நூற்றாண்டு விழாவினை மே 2020 இறுதியில் கொண்டாடுதல் [5]

நிர்வாகம்

இப்பள்ளியின் தற்போதைய தலைமையாசிரியர் வை.சாரதி ஆவார்.[6]

தூய்மைப்பணியாளர் கௌரவிப்பு

இப்பள்ளியில் 15 ஆகஸ்டு 2020 அன்று நடைபெற்ற சுதந்திர விழாவின்போது, கொரோனோவை எதிர்த்துப் போராடுகின்ற தூய்மைப் பணியாளர்களைக் கௌரவப்படுத்தும் வகையில், அவர்களைக் கொண்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது.[8] [9] [10]

குறிப்புகள்

  1. நூற்றாண்டு விழா தொடர்பாகவும், அதற்கு முன்பாகவும் வந்த சில நாளிதழ் செய்திகளில் இப்பள்ளி 11 நவம்பர் 1919இல் திறந்துவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அண்மையில் முன்னாள் மாணவர் மூலமாகப் பெறப்பட்ட தினமலர் நாளிதழின் செய்தி மூலமாக அப்பள்ளி முதன் முதலாக 10 நவம்பர் 1919இல் திறந்துவைக்கப்பட்ட செய்தியும், பிற கூடுதல் செய்திகளும் உள்ளன. மேலும் பள்ளியில் உள்ள, 10 NOV 19 என்று நாளிடப்பட்ட ஆங்கிலத்தில் உள்ள கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது.

மேற்கோள்

  1. 1.0 1.1 1.2 தஞ்சை நாகை திருவாரூர் மாவட்ட வரலாற்று டைரி, கும்பகோணம் அரசு மேல்நிலைப்பள்ளி, தினமலர், தஞ்சை பதிப்பு, நாள் விவரம் இல்லை
  2. அறம் செய விரும்பு - கனவுகள் நனவாகும் காலம்!, விகடன், 23 நவம்பர் 2017
  3. 3.0 3.1 3.2 முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கூட்டம், தினத்தந்தி, 17 சூலை 2019
  4. அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கக்கூட்டம், நவம்பர் 11இல் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு, தினகரன், 16 சூலை 2019
  5. 5.0 5.1 பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, தினமலர், 16 மார்ச் 2020
  6. 6.0 6.1 6.2 6.3 குடந்தை அரசுப் பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு, தினமணி, 17 சூன் 2019
  7. 7.0 7.1 பழைய மாணவர் சங்கக்கூட்டம், தினமலர், 17 சூலை 2019
  8. தஞ்சாவூர்: `என்றுமே போற்றப்பட வேண்டியவர்கள்!’ தூய்மைப் பணியாளர்களை நெகிழ வைத்த அரசுப் பள்ளி, விகடன், 16 ஆகஸ்டு 2020
  9. தேசியக் கொடியை ஏற்றவைத்து தூய்மைப் பணியாளருக்கு கவுரவம்: பள்ளித் தலைமையாசிரியருக்கு பாராட்டு, இந்து தமிழ் திசை, 16 ஆகஸ்டு 2020
  10. தூய்மைப் பணியாளரைத் தேசியக் கொடி ஏற்ற வைத்து கௌரவிப்பு, தினமணி, 16 ஆகஸ்டு 2020

வெளியிணைப்புகள்

புகைப்படத்தொகுப்பு