அருந்ததி (1943 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அருந்ததி
அருந்ததி பாட்டுப் புத்தக முகப்பு
இயக்கம்எம். எல். டாண்டன்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மாடர்ன் தியேட்டர்ஸ்
எம். எல். டாண்டன்
வசனம்டி. வி. சாரி
இசைஎம். டி. பார்த்தசாரதி
எஸ். ராஜேசுவரராவ்
நடிப்புஹொன்னப்பா பாகவதர்
என். எஸ். கிருஷ்ணன்
செருகளத்தூர் சாமா
எஸ். டி. சுப்பையா
யு. ஆர். ஜீவரத்னம்
டி. ஏ. மதுரம்
எம். ஆர். சந்தானலட்சுமி
பி. எஸ். சிவபாக்கியம்
பாடலாசிரியர்பாபநாசம் சிவன், எஸ். வேல்சாமி கவி
வெளியீடுசூலை 2, 1943
நீளம்11000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அருந்ததி 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எல். டாண்டனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்பா பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கதைச் சுருக்கம்

அருந்ததி முந்தைய பிறப்பில் சண்டிகை (எம். எம். ராதாபாய்) என்ற பெயருடன் வசிட்டரின் (செருகளத்தூர் சாமா) மனைவியாக இருந்து வரும் நாளில், ஒருநாள் வழக்கம்போல் அட்சதை செய்வதை மறந்து சமையல் வேலையில் முனைந்திருந்தாள். வசிட்டர் அட்சதை கேட்டதும் துடித்து அவசரமாக அங்கு தங்கியிருந்த அசுத்த நீரில் அட்சதை தயாரிக்கிறாள். இதையறிந்த வசிட்டர் சண்டிகையை வெறுத்து வெளிக்கிளம்ப, கணவரைப் பிரிந்த வருத்தத்தில் சண்டிகை தற்கொலை செய்து கொள்ள முயன்றாள். அப்போது சிவன் தோன்றி, சண்டிகையை சக்கிலிய குலத்தில் பிறந்து வந்து மீண்டும் வசிட்டரை மணந்து கொள்ளும்படி வரம் கொடுக்கிறார்.[1]

சிவபக்தனான சக்கிலி வீரசாம்பானின் (கே. கே. பெருமாள்) மகளாக சண்டிகை பிறந்து அருந்ததி (யூ. ஆர். ஜீவரத்தினம்) என்ற பெயருடன் வளர்கிறாள். ஒரு நாள் அருந்ததியின் தாய் வாசுகி (பி. எஸ். சிவபாக்கியம்) தன் தம்பிக்கு அருந்ததியை மணம் முடிக்க, வள்ளுவனைக் (காளி என். ரத்தினம்) குறி கேட்கிறாள். அருந்ததியை மூன்று நாள் வீட்டை விட்டு விலக்கிவைத்து பிறகு திருமணம் செய்யும்படி வள்ளுவன் குறி சொல்கிறான். அதன்படி தனிக் குடிசையில் அருந்ததி வைக்கப்படுகிறாள். அந்த மூன்று நாளைக்குள் ஒரு நாள், ஈசுவரஜோதி வழிகாட்ட அருந்ததி, காட்டிலுள்ள ஒரு குடிசைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். கானகக் குடிசையில் தங்கியிருக்கும் அருந்ததிக்கு, சிவன் கனவிற் தோன்றி காலையில் வரும் விருந்தாளியை கணவனாக ஏற்றுக்கொள்ளும்படிச் சொல்லி மறைகிறார். மறுநாள் காலை, சிவன் வசிட்டர் உருவத்தில் வந்து அருந்ததியை உணவு கேட்க, அவள் பரிமாறுகிறாள். "கன்னிப் பெண் கையில் பிச்சை ஏற்பதில்லை" என்று ஈசுவர வசிட்டர் எழுந்து போக, அருந்ததி பின் தொடர்ந்து செல்லுகிறாள். ஈசுவர வசிட்டர் உண்மை வசிட்டரின் ஆச்சிரமத்துள் புகுந்து மறைகிறார். வசிட்டர் சமையல் செய்து கொண்டிருக்க, உள்நுழைந்து பார்த்த அருந்ததி, பிச்சை கேட்க வந்தவர் இவரே தானென்று நினைத்து வசிட்டரை ஈசுவரன் உத்தரவுப்படி தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறாள். வசிட்டர் பல சோதனைகள் புரிந்து, இறுதியில் மணந்து கொள்கிறார்.[1]

வாஜபேய யாகம் நடைபெறுகிறது. சப்தரிசி பத்தினிகளைக் கண்டு அங்கு வந்திருந்த அக்கினி (ஹொன்னப்ப பாகவதர்) காமுறுகிறான். காமவேட்கையால் தவிக்கும் அக்கினி - தனது மனைவி சுவாகாவிடம் (எம். ஆர். சந்தானலட்சுமி) தனது எண்ணத்தைக் கூற, சுவாகா ஒவ்வொரு ரிசிபத்தினிபோல் வடிவெடுத்துச் சென்று அக்கினியைத் திருப்திப்படுத்துகிறாள். ஆனால் அருந்ததி போல் உருவெடுக்க முடியவில்லை. அதையறிந்த அக்கினி எப்படியும் அருந்ததியை அடைய எண்ணி பூலோகம் வந்து அருந்ததியை சந்தித்து பலாத்காரம் செய்கிறான். இதை நேரில் கண்ட வசிட்டர் அருந்ததியிடம் தப்பிதமாகக் கோபங் கொள்கிறார். அருந்ததி அக்கினி விரும்பி வர்ணித்த தன் கண்களைப் பிடுங்கி அவன் மீது வீசிவிட்டு அவனை சபிக்கிறாள். திரிலோகங்களிலும் அக்கினி மறைகிறது. அருந்ததியும் வசிட்டரால் வெறுக்கப்படுகிறாள். போக்கிடமின்றித் தவிக்கும் அருந்ததி கடைசியில் தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது, சிவன் தோன்றி "அருந்ததி மகா புனிதவதி" என்பதை நிரூபித்து சப்தரிசி மண்டலத்தில் ஒரு விண்மீனாக விளங்கும்படி திருவருள் செய்கிறார்.[1]

நடிகர்கள்

நடிகர் பாத்திரம்
செருகளத்தூர் சாமா வசிட்டர்
ஒன்னப்ப பாகவதர் அக்கினி
எஸ். டி. சுப்பையா நாரதர்
கே. கே. பெருமாள் வீரசாம்பான்
என். எஸ். கிருஷ்ணன் கண்ணன்
காளி என். ரத்னம் வள்ளுவன்
டி. பி. பொன்னுசாமி பிள்ளை மிராசுதார்
கே. பி. காமாட்சி மாப்பிள்ளை

நடிகைகள்

நடிகை பாத்திரம்
யு. ஆர். ஜீவரத்தினம் அருந்ததி
எம். ஆர். சந்தானலட்சுமி சுவாகா
டி. ஏ. மதுரம் கண்ணம்மா
பி. எஸ். சிவபாக்கியம் வாசுகி
எம். எம். ராதாபாய் சண்டிகை
ஜே. சுசீலா தேவி அனுசூயா
ஞானாம்பாள் பார்வதி
கே. கே. கிருஷ்ணவேணி மாலிகா

பாடல்கள்

இத்திரைப்படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன், எஸ். வேல்சாமி கவி ஆகியோர் எழுதியிருந்தனர். எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேசுவரராவ் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.[1]

பாடல் பாத்திரம் பாடியவர்கள் இராகம் - தாளம்
சந்ததமும் உனைப் பணிவேன் வசிட்டர் செருகளத்தூர் சாமா ஜெயமனோகரி - ஆதி
உன் முடிமேல் சேற்றில் வந்த அருந்ததி யு. ஆர். ஜீவரத்னம் இந்துத்தானி
கோபுரத்துமேலே கொத்தமல்லி போலே வாசுகி பி. எஸ். சிவபாக்கியம் -
வயிறு பசித்து தின்னாலன்றோ அருந்ததி யு. ஆர். ஜீவரத்தினம் தெம்மாங்கு
மாய்கையினால் நீ உனையே மறந்தே நாரதர் எஸ். டி. சுப்பையா தர்பார் - ஆதி
கைலாச பதே கருணை புரிவாய் நாரதர் எஸ். டி. சுப்பையா வாசஸ்பதி - ஆதி
ஈன குலந்தனில் ஏன் பிறந்தேன் அருந்ததி யு. ஆர். ஜீவரத்தினம் சிந்து பைரவி - ஆதி
இறைவனைக் கண்டேன் அமுதுண்டேன் அருந்ததி யு. ஆர். ஜீவரத்தினம் இந்துத்தானி
ஜக மாயை பெரிதே வசிட்டர் செருகளத்தூர் சாமா காப்பி - ரூபகம்
யாரே இவ்வுலகினில் எனையறிவார் வசிட்டர் செருகளத்தூர் சாமா சாவேரி - ஆதி
என் மோகன சுகுமாரன் சுவாகா எம். ஆர். சந்தானலட்சுமி -
அம்பா நீ வரம் தரவேண்டுமே சுவாகா எம். ஆர். சந்தானலட்சுமி கீரவாணி - ஆதி
ஈதல்லவோ தெள்ளமுதம் அக்கினி, ரிசிபத்தினிகள் ஹொன்னப்ப பாகவதர் இந்துத்தானி
ஓ ஜகதீசா உன் திருவுள்ளம் அருந்ததி யு. ஆர். ஜீவரத்தினம் ஹேமவதி - ஆதி
அருந்ததி மகா புனிதவதி நாரதர் எஸ். டி. சுப்பையா பிலகரி - ஆதி
மூளையே இல்லாட்டா முன்னேற்றம் வந்திடுமோ கண்ணன், கண்ணம்மா என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் -
கட்டுக் கடங்காத ஆசை கண்ணம்மா டி. ஏ. மதுரம் -

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 அருந்ததி பாட்டுப் புத்தகம். கூப்பர்ஸ் பிரின்டிங் வெர்க்ஸ், பெங்களூர். 1943.
"https://tamilar.wiki/index.php?title=அருந்ததி_(1943_திரைப்படம்)&oldid=30191" இருந்து மீள்விக்கப்பட்டது