அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அம்பாறை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் என்று இங்கே குறிப்பிடப்படுபவை, வெள்ளிக்கிழமைகளில் குத்பா (பிரசங்கம்) நடத்தப்படுகின்றவைகள் மட்டுமே. அவற்றின் வரலாறுகளை முஸ்லிம் ஊர்கள் வாரியாக விபரிக்கலாம். ஏனைய பள்ளிவாசல்கள் சிறியவையாகவும், 'தக்கியா', 'தைக்காப்பள்ளி' அல்லது 'தர்ஹா' என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன.

மருதமுனை

மஸ்ஜிதுன் நூர் ஜும்மா பள்ளிவாசல்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல், சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து இங்கே வருகை புரிந்த அபூபக்கர் ஒலியுல்லாஹ் (பெரிய ராசாப்பா) மற்றும் அவரது மைத்துனர் முகம்மது ஹாஜி ஆகியோர்களினால் அமைக்கப்பட்டது. இப்பள்ளிவாசலின் புனர்நிர்மாணம் 1855, 1926, 1988 ஆகிய ஆண்டுகளில் செய்யப்பட்டது. இறுதியாகச் செய்யப்பட்ட புனர்நிர்மாணத்தின்போது மாடிக்கட்டடமாக அமைக்கப்பட்ட இதில் 3000 பேர் தொழுகை நடாத்தக்கூடிய இடவசதியுள்ளது.

மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசல்

1851, 1976 ஆகிய ஆண்டுகளில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இப்பள்ளிவாசல் அலியார் போடியார், பக்கீர்த்தம்பி மரைக்கார் ஆகியோரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்குச் சொந்தமாக ஒரு சந்தைத் தொகுதியும், கடைகளும் உள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் பள்ளிவாசலை நிர்வாகிப்பதற்குப் பயன்படுகிறது. இதிலும் 3000 பேர் தொழுகை நடாத்தக்கூடிய இடவசதியுள்ளது.

மருதமுனையிலுள்ள ஏனைய பள்ளிவாசல்கள்.
  • மத்திய தைக்கா,
  • பாக்கியதுஸ் ஸாலிஹாத்,
  • மஸ்ஜிதுல் ஹிதாயா,
  • மஸ்ஜிதுல் மக்பூலியா,
  • அக்பர் ஜும்மா பள்ளிவாசல்,
  • மஸ்ஜிதுல் மினன்,
  • மஸ்ஜிதுல் நூறானியா,
  • மஸ்ஜிதுல் ஹுதா ஆகியவையாகும்.

அக்கரைப்பற்று

அக்கரைப்பற்று ஜும்மா பள்ளிவாசல் (கருங்கொடித்தீவு பட்டினப் பள்ளிவாசல்)

300 ஆண்டுகளுக்கு முன்னர் யெமன் நாட்டிலிருந்து வருகை தந்த இஸ்மாயில் யெமெனி அவர்களாலும், அவர்களது மகன் அப்துஸ்ஸமது மெளலானா அவர்களாலும் இப்பள்ளிவாசல் தாபிக்கப்பட்டது. 1916, 1971 ஆகிய ஆண்டுகளில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்று இரு மாடிகளைக் கொண்ட அழகிய பள்ளிவாசலாகக் காட்சியளிக்கின்றது.

அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல்

தற்போது இரு மாடிகளைக் கொண்ட பள்ளிவாசலாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இப்பள்ளிவாசலில் பீஸபில் ஒளலியா என்னும் பெரியாரின் சமாதி உள்ளது. இது 400 வருடங்கள் பழைமையானது என்று கூறப்படுகிறது.

அக்கரைப்பற்று புதுப்பள்ளிவாசல் (ஜும்மா பள்ளிவாசல்)

1901 ம் வருடம் ஆதம்லெப்பை ஹாஜியார் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளிவாசல் 1950, 1970, 1980, 1990 ஆகிய ஆண்டுகளில் புனருத்தானம் செய்யப்பட்டது.

அக்கரைப்பற்றில் உள்ள ஏனைய பள்ளிவாசல்கள்
  • மஹ்ழறதுல் காதிரிய்யா பள்ளிவாசல்
  • நூறானிய்யா பள்ளிவாசல்
  • பத்ர் பள்ளிவாசல்

அட்டாளைச்சேனை

அட்டாளைச்சேனை ஜும்மா பள்ளிவாசல்

1915 ம் ஆண்டு பதுளை (பிபிலை) பிரதேசத்திலுள்ள 'கொட்டபோவ' பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் இப்பகுதியில் குடியேறி அட்டாளை (சேனைப்பயிர் செய்வோர் சேனையில் தங்கியிருக்க கட்டிக்கொள்ளும் பரண் போன்ற அமைப்பு) கட்டி சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டதனால் இந்த ஊருக்கு அட்டாளைச்சேனை என்ற பெயர் ஏற்பட்டது. அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளிவாசல் சின்னகமது முல்லைக்காரர், கோழியன் ஆராய்ச்சி, குப்பையன் பொலிஸ் விதானை ஆகியோரால் புதுப்பிக்கப்பட்டு, மெத்தைப் பள்ளிவாசல் என அழைக்கப்பட்டது. 1910, 1970 ம் ஆண்டுகளில் புதப்பிக்கப்பட்டு இன்று நவீன பள்ளிவாசலாகக் காட்சியளிக்கின்றது.

அட்டாளைச்சேனையிலுள்ள ஏனைய பள்ளிவாசல்கள்
  • மஸ்ஜிதுல் பலாஹ் (சின்னப்பள்ளி)
  • மஸ்ஜிதுல் நூர்
  • மஸ்ஜிதுல் ஜென்னாஹ்
  • மஸ்ஜிதுல் நிழாம்
  • மஸ்ஜிதுல் ஸலாம்
  • மஸ்ஜிதுல் ஸரீப்
  • மஸ்ஜிதுல் ஸறப்
  • மஸ்ஜிதுர் றஹ்மான்
  • மஸ்ஜிதுல் மினன்
  • மஸ்ஜிதுல் கைறாத்
  • முல்லைத்தீவுப் பள்ளிவாசல்
  • பத்றுப் பள்ளிவாசல்
  • உமர் பள்ளிவாசல்
  • தைக்காநகர் ஜும்மா பள்ளிவாசல்
  • கோணாவத்தை அந்நூர் ஜும்மா பள்ளிவாசல்
  • மீனோடைக்கட்டு மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாசல்
  • கரடிக்குளம் (ஆலங்குளம்) ஜும்மா பள்ளிவாசல்

இறக்காமம்

இறக்காமம் ஜும்மா பள்ளிவாசல்

தென்கிழக்கின் புராதன ஊர்களில் ஒன்றான இறக்காமம் கிராமத்தில் கட்டப்பட்டிருக்கும் இப்பள்ளிவாசலின் முதலாவது புனருத்தானம் 1803 ம் ஆண்டு நடைபெற்றதாகவும், அங்கு சமாதி கொண்டிருக்கும் பெரியார் 1740 ம் ஆண்டு இப்பகுதிக்கு வந்ததாகவும் அவரின் சமாதியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. காலத்துக்குக் காலம் சிறு சிறு மாற்றங்களைப் பெற்ற இது இப்பிரதேசத்திலுள்ள மிகப் பழைமை வாய்ந்த பள்ளிவாசல்களுள் ஒன்றாகக் காட்சியளிக்கின்றது.

இறக்காமம் கிராமத்திலுள்ள ஏனைய பள்ளிவாசல்கள்.
  • மஸ்ஜிதுல் ஜாமிஉல் அன்வார்
  • மஸ்ஜிதுல் இக்ராம்
  • மஸ்ஜிதுல் அக்பர்
  • மஸ்ஜிதுல் ஸலாம்
  • மஸ்ஜிதுல் ஹுதா
  • நகரப் பள்ளிவாசல்
  • நல்லதண்ணிமலை தைக்கா
  • குடுவில் பள்ளிவாசல்
  • 10ம் கிராமம் பள்ளிவாசல்
  • 11ம் கிராமம் (வாங்காமம்) பள்ளிவாசல்

ஒலுவில்

ஒலுவில் ஜும்மா பள்ளிவாசல்

18 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இப்பள்ளிவாசலில் இடையிடையே சிறுசிறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் உள்அமைப்பில் மாற்றமேதும் செய்யப்படவில்லை.

ஒலுவிலில் உள்ள ஏனைய பள்ளிவாசல்கள்
  • அன்சாரி தைக்கா
  • ஜென்னத்துல் மின்னா பள்ளிவாசல் (அக்கரை)

கல்முனைக்குடி

கல்முனைக்குடி முகையதீன் ஜும்மா பள்ளிவாசல்

1806 ம் ஆண்டு வைக்கோலினால் கூரை வேயப்பட்ட சிறு குடிசையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளிவாசல், 1859, 1933 ம் ஆண்டுகளில் புனருத்தானம் செய்யப்பட்டு 2000 பேர் தொழுகை நடாத்தக் கூடியதாகியது. இப்புனருத்தானங்கள் அக்காலத்தில் கல்முனைக்குடியில் பிரபலமாக இருந்த தச்சர் அ.நெய்னா முகம்மது ஹாஜியார் (ராசா ஓடாவியார்) அவர்களின் மேற்பார்வையிலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 1976, 1985 ம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட புனர்நிர்மாண வேலைகள் 2015 ல் மிகச் சிறப்பாக முடிவுற்றது. மாடிக்கட்டடமாக இருக்கும் இப்பள்ளிவாசலில் தற்போது 5000 க்கு மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் தொழுகை நடாத்தக்கூடிய வசதிகள் உள்ளன.

கல்முனைக்குடி மஸ்ஜிதுல் முகம்மதியா ஜும்மா பள்ளிவாசல்

குருநாகல், பரகஹதெனியாைவச் சேர்ந்த அல்ஹமீத் அல்பக்ரி என்னும் பெரியாரால் 1949 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1951 ம் ஆண்டு வரை ஓலைக்குடிசையாக இருந்த இப்பள்ளிவாசல் 1991 ல் மாடிக் கட்டடமாக மாற்றம் பெற்றது. இங்கு குர்ஆன் பாடசாலையும் இயங்குகின்றது.

கல்முனைக்குடியிலுள்ள ஏனைய பள்ளிவாசல்கள்
  • மஸ்ஜிதுன் நூறானியா
  • மஸ்ஜிதுல் புர்கானிய்யா
  • மஸ்ஜிதுல் ஸபூரிய்யா
  • மஸ்ஜிதுல் அக்ஸா
  • மஸ்ஜிதுல் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்
  • கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்ஹா
  • மஷ்ஹூறா தைக்கா
  • முஸ்தபா ஆலிம் தைக்கா
  • மஸ்ஜிதுல் பத்ரிய்யா
  • மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாசல் ஆகியவைகளாகும்.

கல்முனை

கல்முனை ஜும்மாப் பள்ளிவாசல்

இப் பள்ளிவாசல் கல்முனை நகரில் 1950 ம் ஆண்டு காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் செய்யது முகம்மது மற்றும் அப்போது கல்முனை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் ஆகியோரின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறியதாக இருந்து, 1965, 1993 மற்றும் 2012 ம் ஆண்டுகளில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு தற்போது மாடிக்கட்டடமாக அழகிய தோற்றத்தில் மிளிர்கிறது. இப்பள்ளிவாசலுக்குச் சொந்தமாக ஆறு கடைகள் கல்முைன நகரில் உள்ளன. இவற்றின் வருமானத்தைக் கொண்டும், நகர வர்த்தகர்களின் நன்கொடைகளைக் கொண்டும் நிர்வாகம் நடைபெறுகின்றது.

கல்முனை நகரின் அருகாமையிலுள்ள இஸ்லாமாபாத் கிராமத்திலும் ஒரு ஜும்மா பள்ளிவாசல் இயங்கி வருகின்றது.

சம்மாந்துறை

சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல்

18 ம் நூற்றாண்டில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வட இந்தியாவிலிருந்து பாய்க்கப்பல் மூலம் மட்டக்களப்பு வாவியினூடாக கோசப்பா, காரியப்பா ஆகிய இரண்டு பெரியார்கள் வீரமுனைக்கு அருகில் தரையிறங்கினார்கள். அவர்கள் அங்கிருந்து கொண்டே அருகாமையில் வாழ்ந்த தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய இரண்டு இனத்தாருக்கும் நல்லுபதேசங்கள் புரிந்து வந்தார்கள். அவர்களிருவரும் ஒருவர்பின் ஒருவராக மரணமடைந்ததும், அவ்விடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டனர். காலப்போக்கில் அவ்விடம் பள்ளிவாசலாக மாற்றம் பெற்றது.

பள்ளிவாசலின் முதலாவது புனர்நிர்மாணம் 1805 ல் இடம்பெற்றதென அறியப்படுகின்றது. பின்னர் 1935 ல் ஆரம்பித்து 1950 வரையிலும் இடம்பெற்ற புனர்நிர்மாணத்தில் கிழக்கிலங்கையின் மிக அழகான பெரிய பள்ளிவாசல் எனற பெயரைப் பெற்றது.

மத்தியமுகாம் (Central Camp) மஸ்ஜிதுல் கைரிய்யா ஜும்மா பள்ளிவாசல்

1953 ம் ஆண்டு இப்பள்ளிவாசல் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஓலைக்குடிசையாகக் கட்டப்பட்டு 1965, 1980 ஆகிய வருடங்களில் புனருத்தானம் செய்யப்பட்டது. இங்கு குர்ஆன் பாடசாைலயும் நடைபெறுகின்றது.

மத்தியமுகாம் நூறானியா ஜும்மா பள்ளிவாசல்

இப்பள்ளிவாசலும் 1953 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1970, 1977 ஆகிய ஆண்டுகளில் புனருத்தானம் செய்யப்பட்டாலும் இன்னும் கட்டிடம் பூர்த்தியாகவில்லை. இங்கும் குர்ஆன் பாடசாலை நடைபெறுகின்றது.

பெரியகுளம் ஜும்மா பள்ளிவாசல்

சொறிக்கல்முைன கிராமத்திற்கு அப்பால் 8 ம் கிராமத்தில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல் 1954 ல் ஆரம்பிக்கப்பட்டு 1976 ல் திருத்தம் செய்யப்பட்டது.

சம்மாந்துறையிலுள்ள ஏனைய பள்ளிவாசல்கள்
  • முகையதீன் பள்ளிவாசல் (சின்னப்பள்ளி)
  • மஸ்ஜிதுல் தைக்கியா (தைக்காப்பள்ளி)
  • மஸ்ஜிதுல் உம்மாஹ்
  • கைர் பள்ளிவாசல்
  • மஸ்ஜிதுந் நூர்
  • ஜலாலிய்யா பள்ளிவாசல்
  • மஸ்ஜிதுல் ஜாரியா
  • மஸ்ஜிதுல் மபாஸா
  • மஸ்ஜிதுல் மனார்
  • மஸ்ஜிதுல் ஹுதா
  • மஸ்ஜிதுல் நஹ்ர்
  • மஸ்ஜிதுல் ஜபல்
  • மஸ்ஜிதுல் முஅல்லா
  • மஸ்ஜிதுல் புஸ்றா
  • மஸ்ஜிதுல் பத்ஹ்
  • மஸ்ஜிதுல் ஸபூர்
  • மஸ்ஜிதுல் பத்ர்
  • மஸ்ஜிதுல் ஜமாலிய்யா
  • மஸ்ஜிதுல் ஸலாம் ஜும்மா பள்ளிவாசல்
  • ஏத்தாளைக்குளம் ஜும்மா பள்ளிவாசல்
  • 8ம் கிராமம் மேட்டுத் தைக்கா
  • மஸ்ஜிதுல் ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசல்
  • மஸ்ஜிதுல் முகம்மதியா ஜும்மா பள்ளிவாசல்
  • 5ம் கிராமம் ஸபூரியா ஜும்மா பள்ளிவாசல்
  • மத்திய ஜும்மா பள்ளிவாசல்

சாய்ந்தமருது

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல்

கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்திருக்கும் இப்பள்ளிவாசல் 1691 ம் ஆண்டு சதக்குலெவ்வை என்பவரினால் ஆரம்பிக்கப்பட்டது என்று செப்பேடு (05 மாசி 1691) ஒன்று உறுதிப்படுத்துகிறது. தம்பிநெய்ந்தை என்பவர் பள்ளிவாசலுக்கு நெற்காணிகளை வழங்கி அதை அபிவிருத்தியடையச் செய்தார். இதன் புனர்நிர்மாணம் 1881, 1961, 1985 ஆகிய காலப்பகுதிகளில் இடம்பெற்றது. இரு மாடிகளைக் கொண்ட இந்தப் பள்ளிவாசலில் சுமார் 5000 பேர் தொழுகை நிறைவேற்ற முடியும். தற்போது இங்குள்ள இரண்டு பள்ளிவாசல்களில் ஜும்மா நடைபெற்று வருகின்றது.

சாய்ந்தமருதில் உள்ள ஏனைய பள்ளிவாசல்கள்
  • மஸ்ஜிதுல் பதாஹ்
  • மஸ்ஜிதுஸ் ஸலாம்
  • மஸ்ஜிது தகியதுல் அக்பர்
  • மஸ்ஜிதுல் ஹுதா
  • மஸ்ஜிதுல் தக்வா
  • மஸ்ஜிதுல் பலாஹ்
  • மஸ்ஜிதுல் ஸாலிஹீன்
  • மஸ்ஜிதுன் நூர்
  • மஸ்ஜிதுல் ஆரிபீன்
  • மஸ்ஜிதுல் ஸபா

நற்பிட்டிமுனை

அல்மஸ்ஜிதுல் ஜாமிஉல் கபீர்

அபூபக்கர் மரைக்கார் மற்றும் அவரது குடும்பத்தினராலும் 1882 ல் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்பள்ளிவாசல், 1907 மற்றும் 1978 ஆண்டுகளில் கிழக்கில் வீசிய சூறாவளியினால் கடுமையாகச் சேதமுற்றது. தற்போது அதை நவீன மாடிக்கட்டடமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு இன்னும் பூரணமாக முடிக்கப்படாத நிலையில் உள்ளது.

நற்பிட்டிமுனையிலுள்ள ஏனைய பள்ளிவாசல்கள்
  • மஸ்ஜிதுல் ஸலாம்
  • மஸ்ஜிதுல் ஹுதா

நிந்தவூர்

நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல்

இந்த ஊரின் புராதன பெயர் பனிச்சவட்டுவான் என்பதாகும். 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளிவாசலின் முதலாவது புனருத்தானத்தை மூத்தாச்சி மரைக்காரும் குழுவினரும் செய்துள்ளதாக அறியக் கிடைக்கிறது. பின்னர் 1942, 1950, ம் ஆண்டுகளில் புனருத்தானம் செய்யப்பட்ட இது, 1986 ம் ஆண்டு அமீர் மேர்சாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட புனர்நிர்மாணத்தின் பின்னர் பிரமாண்டமானதொரு பள்ளிவாசலாகத் திகழ்கின்றது.

நிந்தவூரிலுள்ள ஏனைய பள்ளிவாசல்கள்
  • மஸ்ஜிதுல் முஜாஹிதீன்
  • சாலிமிய்யா தைக்கா
  • மஸ்ஜிதுல் மினன்
  • மஸ்ஜிதுல் ஹக்
  • மஸ்ஜிதுல் பலாஹ்
  • தஃஹியதுல் ஹிதாயா பள்ளிவாசல்
  • மஸ்ஜிதுல் ஜன்னாஹ்
  • றஹ்மானியா தைக்கா
  • மஸ்ஜிதுல் றவாஹா
  • மத்திய தைக்கா
  • அட்டப்பள்ளம் பள்ளிவாசல்
  • மஸ்ஜிதுல் ஜலாலியா
  • மஸ்ஜிதுல் அப்றார்
  • மஸ்ஜிதுல் ஜென்னத்துல் பிர்தெளஸ்
  • மஸ்ஜிதுல் நூர்
  • றகுமானியாபுரம் தைக்கா
  • மஸ்ஜிதுல் றஹ்மத்துல்லாஹ்
  • அல்-மர்ஜா பள்ளிவாசல் (அரசடி)
  • 40 முழ ஒளலியா கபுரடி தைக்கா

நெய்னாகாடு

நெய்னாகாடு ஜும்மா பள்ளிவாசல்

நெய்னாகாடு கிராமம் தற்பொழுது ஹயாத்துநபிகுடி என்று அழைக்கப்படுகின்றது. இது சம்மாந்துறையிலிருந்து தெற்கே எட்டு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. 1958 ம் ஆண்டில் கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பரினால் இப்பள்ளிவாசல் ஆரம்பிக்கப்பட்டது.

மல்வத்தை மஜீத்புரம் அல் மஸ்ஜிதுல் மஜீத் ஜும்மா பள்ளிவாசல்

1962 ல் ஆரம்பிக்கப்பட்ட இது மீண்டும் 1968 ல் திருத்தம் செய்யப்பட்டது.

அம்பாறை ஜும்மா பள்ளிவாசல்

1957ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளிவாசல் 1958, 1963, 1987, 1990 ஆகிய ஆண்டுகளில் புனருத்தானம் செய்யப்பட்டது. தற்போது அம்பாறை நகரத்தில் வசிக்கும் 150 முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் வேலைபுரியும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் ஐந்து வேளை தொழுகையையும், ஜும்மா தொழுகையையும் நிறைவேற்றுகின்றனர்.

பசறிச்சேனை

பசறிச்சேனை ஜும்மா பள்ளிவாசல் (பெரியஉல்லை)

இந்தியாவைச் சேர்ந்த அபூசாலி மெளலானா அவர்களின் முயற்சியால் 1950ம் ஆண்டு இப்பள்ளிவாசல் சிறுகொட்டிலாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1978 ல் நிரந்தர கட்டடமாக மாற்றம் பெற்றது.

பட்டியடிப்பிட்டி

பட்டியடிப்பிட்டி ஜும்மா பள்ளிவாசல்

அக்கரைப்பற்றின் மேற்கில் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் இவ்வூரில் 1930 ம் ஆண்டில் இப்பள்ளிவாசல் ஓலைக்கொட்டிலாக ஆரம்பிக்கப்பட்டது. 1957 ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் சேதமுற்று புனருத்தானம் செய்யப்பட்ட இது, 1978 ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியினால் மீண்டும் பழுதடைந்து, நிரந்தரக் கட்டிடமாகக் கட்டப்பட்டது. இங்கு முகம்மது மெளலானா அவர்களின் சமாதி உள்ளது.

பள்ளிக்குடியிருப்பு

பள்ளிக்குடியிருப்பு ஜும்மா பள்ளிவாசல்

அக்கரைப்பற்றுக்கு மேற்கே மூன்று கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இக் கிராமத்தில் 1939 ம் ஆண்டு இப்பள்ளிவாசல் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பததில் ஓலைக்குடிசையாக இருந்த இது 1950, 1957, 1967, 1983, 1990, 1995 ஆகிய வருடங்களில் சிறிது சிறிதாகப் புனரமைக்கப்பட்டு தற்போது அழகிய முகப்புடனும், மினாராக்களுடனும் உள்ள பள்ளிவாசலாகப் பரிணாமம் பெற்றுள்ளது.

பள்ளிக்குடியிருப்பிலுள்ள ஏனைய பள்ளிவாசல்கள்
  • அல் மஸ்ஜிதுல் அறூஸ்
  • அல் மஸ்ஜிதுல் ஜன்னாஹ்
  • இலுக்குச்சேனை ஜும்மா பள்ளிவாசல்
  • இசங்கணிச்சீமை ஜும்மா பள்ளிவாசல்
  • ஆலிம்நகர் ஜும்மா பள்ளிவாசல்
  • அம்பலத்தாறு (வேகாமத்து வெளி) ஜும்மா பள்ளிவாசல்
  • புட்டம்பை ஜலாலியா ஜும்மா பள்ளிவாசல்
  • முல்லைத்தீவு ஜும்மா பள்ளிவாசல்

பாலமுனை

பாலமுனை ஜும்மா பள்ளிவாசல்

19 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிறிய ஓலைக்குடிசையாக ஆரம்பிக்கப்பட்ட இது 1901, 1960, 1985, 1995 ம் ஆண்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று விசாலமான பள்ளிவாசலாகக் காணப்படுகின்றது.

பாலமுனைக் கிராமத்திலுள்ள ஏனைய பள்ளிவாசல்கள்
  • அல்ஹிதாயா மஸ்ஜித்
  • மஸ்ஜித் அல்தானாபுஸெய்றி தைக்கா
  • மஸ்ஜிதுல் கைமா
  • ஹுசைனிய்யா கிராமப் பள்ளிவாசல்
  • றிப்இ இப்னு ஆமிர் பள்ளிவாசல்
  • சின்னப்பாலமுனை றியாழுல் ஜென்னாஹ் ஜும்மா பள்ளிவாசல்
  • மஜ்மஉஸ்ஸாலிஹீன் புதிய ஜும்மா பள்ளிவாசல்

பொத்துவில்

பொத்துவில் ஜும்மா பள்ளிவாசல்

19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெயிலான் என்ற ஊரிலிருந்து இங்கு வருகை தந்த குஞ்சுமூஸா ஒளலியா அவர்களினால் இப்பள்ளிவாசல் ஓலைக்குடிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பதாக பரம்பரையாகக் கூறப்பட்டு வருகின்றது. 1904 ம் ஆண்டில் நீற்றுக் கொட்டகையாக இருந்த இப்பள்ளிவாசல் 1956 ல் அப்துல் றஸ்ஸாக் மெளலானா அவர்களின் முயற்சியால் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. தற்போது ஊரார்களின் முயற்சியால் தனவந்தர் ஒருவரின் அனுசரனையுடன் புதிய மாடிகளைக் கொண்ட பள்ளிவாசல் நிரமாணிக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவிலிலுள்ள ஏனைய பள்ளிவாசல்கள்
  • அந் நூறானிய்யா பள்ளிவாசல்
  • அந்நஜாத் பள்ளிவாசல்
  • மஸ்ஜிதுல் பலாஹ்
  • முகையதீன் மஸ்ஜித்
  • அல் றஹ்மானியா நகர பள்ளிவாசல்
  • அல் முனீறா பள்ளிவாசல்
  • ஹிஜ்றா நகர் பள்ளிவாசல்
  • அல் பத்தாஹ் பள்ளிவாசல்
  • அல் கைறாத் பள்ளிவாசல்
  • அல் பஹ்றியா பள்ளிவாசல்
  • அல் ஹுதா பள்ளிவாசல்
  • அல் முனவ்வறா பள்ளிவாசல்
  • அல் றஹ்மானியா பள்ளிவாசல்
  • ஹிதாயாபுரம் ஸாபி மஸ்ஜித்
  • அல் அக்ஸா பள்ளிவாசல்
  • அல் மஸ்ஜிதுர் றஹ்மானிய்யா, சவானை
  • அல் மஸ்ஜிதுர் றஹ்மானிய்யா, அறுகம்பை
  • அஸ்ரப்நகர் ஜும்மா பள்ளிவாசல், செங்காமம்
  • சின்னஉல்லை ஜும்மா பள்ளிவாசல், அறுகம்பை

மாவடிப்பள்ளி

மாவடிப்பள்ளி முகைதீன் ஜும்மா பள்ளிவாசல்

காரைதீவுக்கும் சம்மாந்துறைக்கும் இடையில் அமைந்திருக்கும் மாவடிப்பள்ளிக் கிராமத்தில் 17 ம் நூற்றாண்டில் புற்று மண்ணால் கட்டப்பட்ட இப்பள்ளிவாசல் 1925, 1975 ஆகிய வருடங்களில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

மாவடிப்பள்ளி மர்கஸ் பள்ளிவாசல்

1974 ம் ஆண்டு கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மற்றும் டொக்டர் மீராலெப்பை ஆகியோரின் முயற்சியால் இப்பள்ளிவாசலுக்கான நிலம் ஒதுக்கப்பட்டு 1975 ல் பள்ளிவாசலும், குர்ஆன் பாடசாைலயும் ஆரம்பிக்கப்பட்டது. 1985 ல் தப்லீக் ஜமாஅத்தாரினால் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது.

வரிப்பத்தான்சேனை

வரிப்பத்தான்சேனை ஜும்மா பள்ளிவாசல்

ஆரம்பத்தில் மண்குடிசையாக 1880ம் ஆண்டு கட்டப்பட்ட இப்பள்ளிவாசல் 1931, 1974 ம் ஆண்டுகளில் புனருத்தானம் செய்யப்பட்டது.

வரிப்பத்தான்சேனையிலுள்ள ஏனைய பள்ளிவாசல்கள்
  • மஸ்ஜிதுல் நூர்
  • மஸ்ஜிதுல் அன்வார் தக்கியா

உசாத்துணை

  • மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்மா பள்ளிவாசல் யாப்பு - 1989.09.01
  • கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசல் வரலாறு - ஹாஜி உஸ்மான் சாஹிப், ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.ஆதம்பாவா - 1993
  • சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் வரலாறு - எஸ்.எச்.எம்.ஜெமீல் - 1989
  • எம்.எம்.எம்.இப்றாஹிம். அப்துல் ஹமீத் அல் பக்றி வாழ்வும் பணியும், பரகஹதெனியா - 1996
  • வித்துவான் எஃப். எக்ஸ். சி. நடராசா (பதிப்பாசிரியர்), மட்டக்களப்பு மான்மியம் - 1962
  • Monograph of Batticaloa District of Eastern Province by Mudaliyar S.O.Kanagaratnam
  • 1921 and Phillips Baldaus True and Exact Description of the Grater Island of Ceylon - 1672