அமிர்த கவிராயர்
அமிர்தகவிராயர் , கி.பி. 17ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்தவரும் ,இராமநாதபுர அரசரான சேதுபதியின் அவைப் புலவருமாவார் .
பிறப்பு
இராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை வட்டத்தில் பொன்னங்கால் என்னும் ஊரில் பிறந்தவர்.[1] சைவ சமயத்தைச் சார்ந்த இவர் வேளாண் மரபினர்.
பாடல்கள்
கி.பி. 1646 முதல் கி.பி.1672 வரை இராமநாதபுரத்தை ஆண்டவர் திருமலை சேதுபதி.திருமலை சேதுபதி பெருங் கல்வியாளர். இசை தமிழில் ஈடுபாடு உள்ளவர். பூங்கா ஒன்றில் ஒருநாள் மாலைப் பொழுதில் தம் புலவர் பெருமக்களோடு உலவிக்கொண்டிருந்தார். அப்போது சேதுபதி மன்னர் புலவர் பெருமக்களைப் பார்த்து அகப்பொருள் துறையுள் ஏதேனும் ஒன்று பற்றி பாடல்கள் பல பாட இயலுமா? எனக் கேட்டார். அதற்கு ஒவ்வோரு புலவரும் பத்து, இருபது, முப்பது பாடல்கள் எனக் கூற, தன்னால் நூறு பாடல்கள் பாட முடியும் என அமிர்த கவிராயர் கூறினார். அதனைக் கேட்ட அவைக்களப் புலவர்கள் நானூறு பாடல்கள் பாடுமாறு கூறினர். அதனை ஏற்றுக்கொண்ட அமிர்த கவிராயர், “நாணிக் கண்புதைத்தல்”[2] என்னும் துறையில் பதினைந்து நாட்களில் நானூறு பாடல்களைப் பாடினார் எனக் கூறுவர்.[3]
பாடலின் சிறப்புகள்
தலைவன் தன்னைப் பார்த்ததை அறிந்த தலைவி நாணித், தன் கண்களைக் கைகளால் மூடிக்கொண்டாள் என்பதே இத்துறையின் பொருளாகும். இப்பாடல்கள் அனைத்திலும் சிலேடைநயம் பொருந்தியுள்ளன. இவரியற்றிய பாடல் ஒன்றில் “ஐந்தாங்குலத்தவர் பார்ப்பாரை சேர்தல் அதிசயமே” என்று ஒரு பாடல் அடி வருகிறது. இதில் ஐந்தாங்குலம் என்பது கையையும் ஆறாம் குலம் என்பது கண்ணையும் குறிக்கும். இத்தகு சுவையுடைய நாநூறு பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பொன் தேங்காயும் பொன்னங்கால் என்னும் ஊரையும் சேதுபதி மன்னர் கவிராயருக்கு அளித்தார் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு பாடலின் முதல் இரண்டடிகளில் அரசனுடைய பெருமைகளையும் பின்னிரண்டடிகளில் துறைப்பொருளும் அமையுமாறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இந்நூல் “நாணிக் கண்புதைத்தல் என்னும் ஒரு துறைக் கோவை” [4] எனவும் “இரகுநாத சேதுபதி ஒரு துறைக்கோவை” எனவும் வழங்கப்படுகிறது. இந்நூலின்கண் 311 பாடல்கள் தற்பொழுது காணப்படுகின்றன. சொக்கலிங்கம்பிள்ளை என்பார் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ [நூல்: தமிழ் இலக்கிய அகராதி, ஆசிரியர்: பாலூர் கண்ணப்பமுதலியார், பதிப்பகம்: சென்ட்ரல் பதிப்பகம், பக்கம்:554
- ↑ "முக்கூடற் பள்ளு பொருளுரை, விளக்கவுரையுடன்". பார்க்கப்பட்ட நாள் 28 ஏப்ரல் 2017.
- ↑ Amaresh Datta (1987). Encyclopaedia of Indian Literature. Sahitya academy. p. 307.
- ↑ Amirta Kavirāyar; Irāmacāmi Nāyuṭu (1942). Amirta Kavirāyariyar̲r̲iya Nāṇikkaṇ putaittal, en̲n̲um, Orutur̲aik kōvai. Cen̲n̲ai : Ē. Cokkaliṅkam Piḷḷai,.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
உசாத்துணை நூல்கள்
- வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று - தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
- புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு - தமிழண்ணல், பாரி நிலையம், சென்னை.