அமரநீதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அமரநீதி என்பது 1979 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு நீதி நூலாகும். இது குறள் வெண்பா இலக்கண முறைப்படி இயற்றப்பெற்றது. மொத்தம் ஈராயிரம் குறட்பாக்களைக் கொண்டுள்ளது. திருக்குறளை ஒட்டி அறநிலை, பொருள் நிலை, காதல் நிலை ஆகிய மூன்று நிலைகளையும் கூடுதலாக ஆன்ம நிலைபேற்று நிலை என்னும் ஒரு நிலையையும் கொண்டுள்ளது. அறநிலையில் 64 அதிகாரங்கள், பொருள் நிலையில் 88 அதிகாரங்கள், காதல் நிலையில் 12 அதிகாரங்கள், ஆன்ம நிலை பெற்று நிலையில் 36 அதிகாரங்கள் என மொத்தமாக 200 அதிகாரங்களை இந்நூல் கொண்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்து குறட்பாக்கள் உள்ளன.
இறையருள் வேட்டல் என்னும் தலைப்பில் முதல் அதிகாரம் உள்ளது. இதில் முதலாக,
அறிதற்(கு) அரிய அறிவுருவே! நின்னை
அறியும் அறிவை அருள்
என்னும் குறட்பா உள்ளது.
பொருள்: அறிவதற்கு அரிதாக விளங்கும் அறிவின் உருவமான தெய்வமே, உன்னை அறியும் மெய்ஞ்ஞானஅறிவை எனக்குக் அருள்வாயாக! இந்நூலில் உள்ள மேலும் சில குறள்கள்:
அன்புப் பணியாலுன் அன்பைப் பெறவிழைந்தேன்; அன்புருவே! அன்பை அருள். 2 உயிர்களிடத்து அன்பு காட்டும் செயலைக் கொண்டு உன்னுடைய அன்பினைப் பெற விருப்பமுற்றேன். அன்பின் வடிவமாக விளங்கும் இறைவா, உன்னுடைய அன்பை எனக்குக் கொடு.
இல்லாளும் இல்லாளே இல்லாளாம்; இல்லாளா இல்லாளோ இல்லாளே ஆம். 38 இல்லத்தை ஆட்சி புரியும் மனைவியே நல்ல இல்லாள் எனப்படுவாள். இல்லத்தைப் பேணா மனைவியோ இல்லத்தில் இல்லாதவளுக்கு ஒப்பாவாள்.
உலகமே கோயில்; உயிரெல்லாம் தெய்வங்கள்; அன்பே அறவோர் மதம். 41 உலகமே ஒரு கோவில்; ஒவ்வோர் உயிரும் தெய்வம்; அன்பே அறவழி நடப்போர் மதம்.
மணந்தாரை அன்றி, மனத்தாலும் மாற்றாரை எண்ணாமை கற்பு நெறி. 91 மணந்தவரைத்தவிர வேறு யாரையும் மனத்தாலும் எண்ணாமல் இருப்பதே கற்பு நெறியாகும்.
அனைத்துருவில் தெய்வ அருளுருவைக் காண்பார் அருள்நிலையே மேலாம் நிலை. 190 எல்லா உருவத்திலும் தெய்வத்தின் அருளுருவத்தைக் காண்பவர்களின் அருள்நிலையே மேன்மையான நிலையாகும்.
அமர நீதியை இயற்றியவர் புலவர் அமரன். இவர் வேலூர் சத்துவாச்சாரியில் வாழ்ந்து வந்தார். கடந்த பிப்ரவரி 19, 2023 அன்று இயற்கை எய்தினார்.