அன்புத்தோழி ஜெயஸ்ரீ
இயற்பெயர்/ அறியும் பெயர் |
அன்புத்தோழி ஜெயஸ்ரீ |
---|---|
பிறப்புபெயர் | ஜெயஸ்ரீ |
பிறந்தஇடம் | கூடலூர், நீலகிரி மாவட்டம் |
பணி | கவிஞர் |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | திருப்பூர் படைப்பிலக்கிய 'சக்தி' விருது, சிறந்த மகளிர் இலக்கியம் 2019 விருது, தமிழ் வளர்ச்சித் துறை |
பெற்றோர் | கொ.பா. சுப்ரமணியன் மகாலட்சுமி |
அன்புத்தோழி ஜெயஸ்ரீ (Anbuthozhi Jayasree) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த கவிஞர் ஆவார். ஐந்து கவிதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டு உள்ளார். ஒரு கவிஞராகவும், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும், மனநல ஆலோசகராகவும் பல்துறைகளில் இயங்கி வருகிறார். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த மகளிர் இலக்கியம் விருது உட்பட பலவிருதுகளைப் பெற்றுள்ளார். தமிழகமெங்கும் அழைப்பின் பெயரில் பல்வேறு கல்லூரிகளுக்குச் சிறப்பு விரிவுரையாளராகச் சென்று தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும், மனநல ஆலோசகராகவும் இயங்கிவருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பும் கல்வியும்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கொ.பா. சுப்ரமணியன், மகாலட்சுமி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை மரபுக்கவிஞரும், தமிழாசிரியரும், வீணை இசை வல்லுநரும் ஆவார். ஐந்தாம் படிவம் வரையிலான ஆரம்பக் கல்வியினை கூடலூர் அரசு ஆரம்பப்பள்ளியில் படித்துவிட்டு அதன்பின் கூடலூர் பாத்திமா மகளிர் மேனிலைப்பள்ளியில் தனது கல்வியினை பத்தாம் வகுப்புவரை தொடர்ந்தார். தந்தையின் பணி ஓய்விற்குப் பின் இவரது குடும்பம் கோயம்புத்தூருக்கு குடிபெயர்ந்தது.
கோவை பூ. சா. கோ. கன்யா குருகுலம் பெண்கள் பள்ளியில் சிறப்புத் தமிழ்ப்பாடப்பிரிவில் சேர்ந்து மேல்நிலைப் படிப்பை முடித்த பின்னர் கோவை சங்கரா அறிவியல் வணிகவியல் கல்லூரியில் இளங்கலை வணிக மேலாண்மையியல் பட்டம் பெற்றார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிக நிர்வாகவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். 2021 ஆம் ஆண்டு ஆலோசனை உளவியலிலும் முதுநிலை அறிவியல் கல்வியைத் தொடர்ந்தார்.
தொழில்
கல்லூரிக் கல்வி முடித்தவுடன் கணிப்பொறி பயிற்சிமையம், கணிப்பொறி உதிரிபாக நிறுவனம், மென்பொருள் நிறுவனம், உடல் சீரமைப்பு ஆலோசனைமையம், தனியார் கூரியர் அலுவலகம் என சிறுசிறு பணிகளைச் செய்து பல்துறை அனுபவங்களைப் பெற்றார். கோவையில் பிரபலமான தனியார் நூற்பாலை உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்றுமதி இறக்குமதி நிர்வாகியாகவும் சிலஆண்டுகள் பணியாற்றினார். 2013 ஆம் ஆண்டு கோவை அகில இந்திய வானொலியில் தொகுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலைய செய்தி வாசிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செய்தி வாசிப்பாளர் அனுபவமும் பெற்றுள்ளார்.
சமூக செயல்பாடுகள்
பெண்ணியம், கல்வியின் முக்கியத்துவம், இயற்கையைப் பேணுதல் போன்ற சமூக விழிப்புணர்வுப் பாடல்கள், நாடகங்கள் இயற்றி நீலகிரி மாவட்டத்தின் பழங்குடிகள், மலைவாழ் மக்களைச் சந்தித்து பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அறிவொளி இயக்கம் வாயிலாக கல்விச் சேவைப் பணிகளையும், விழிப்புணர்வு உரைகளையும் பொதுமேடைகளில் வழங்கியுள்ளார். பெருந்தொற்றுக் காலத்தில் தன்னார்வலராக இணைந்து மனநல ஆலோசனைகள், தற்கொலைத் தடுப்பு வழிகாட்டல்கள், கவிதைகள் என மாணவர்களுக்கும், தோழமைகளுக்கும் தன்னம்பிக்கை உரைகள் வழங்கினார்.
இலக்கியப் பங்களிப்பு
சிறுவயதிலிருந்தே மேடைப்பேச்சு , கவிதை, கட்டுரை, ஓவியம், பாடல், நடனம், நாடகம் என பல் திறன்களை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வமிக்கவராகத் திகழ்ந்தார். 1996 ஆம் ஆண்டு ஒரு கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்காக கவிஞர். அறிவுமதி அவர்களின் கடைசி மழைத்துளி நூல் பரிசாகப் பெற்றதனால் ஊக்கம் பெற்று கவிஞராக உருவானார். ஒன்பதாவது வகுப்பில் படிக்கும்போது இவர் எழுதிய கவிதை இளைய சூரியன் என்ற சிற்றிதழில் வெளியானது. பின்னாளில், கலைமாமணி ஆண்டாள் பிரியதர்சனி அவர்கள் தொகுத்த "உள்ளங்கையில் ஐம்பது வானம்" 50 பெண் கவிகளின் கவித்தொகுப்பில் இடம் பிடித்தார். மகாகவி பாரதிக்கான அர்ப்பணிப்பாக 'சொல் பாரதி சொல்' என்ற பன்னாட்டு கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு, தமிழ்நாடு கலை இலக்கிய மன்றம் தொகுத்த கவிதை நூலான 'நெய் மணக்கும் நெசவுக் கவிதைகள் பெண் படைப்பாளிகளின் லிமரைக்கூ தொகுப்பான 'இமையம் தொடும் இயைபுகள் ஆகியவற்றில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கோவை விஜயா பதிப்பக வெளியீடான 'சன்றோர்களின் பொன்மொழிகள்' நூலின் தொகுப்பாசிரியாராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.
கணையாழி, ஆவநாழி, கவிதை உறவு, தூண்டில், இனிய நந்தவனம், பீப்பிள் டுடே, வளரி, நிகழ்காலம், நுட்பம்,, நமது மண் வாசம், ஏழைதாசன், முக்கனி என பல்வேறு இலக்கிய இதழ்கள், சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. 2023 ஆம் ஆண்டு அந்தமானில் நடைபெற்ற இரண்டாவது உலக ஐக்கூ மாநாட்டில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.
நூல்கள்
- எமக்கும் தொழில்'2019- சுயவெளியீடு, புதுக்கவிதை
- இடை -வெளியில் உடையும் பூ -புதுக்கவிதை, குறுங்கவிதை, 2020 இடையன் இடைச்சி நூலக வெளியீடு
- நிலாக்கள் மிதக்கும் தேநீர் - இருமொழிஹைக்கூ வகைமை நூல் -2021 அகநி வெளியீடு
- தழும்பின் மீதான வருடல் - நவீனகவிதைகள்- 2022 ஆகஸ்ட் -கடல் பதிப்பகம்
- பாஷோவும் ஷீபாவும் ஹைக்கூவகைமைநூல்-2022 அகநி வெளியீடு
- சான்றோர்களின் பொன்மொழிகள்
விருதுகள்
- தமிழக அரசு -தமிழ் வளர்ச்சித் துறை -சிறந்த மகளிர் இலக்கியம் 2019 விருது.
- பொதிகைத்தமிழ்ச்சங்கம், நெல்லை ழகரம் அமைப்பின் படைப்பிலக்கிய விருது 2019
- திருப்பூர் படைப்பிலக்கிய 'சக்தி' விருது 2021
- தருமபுரி எவர் கிரீன் அமைப்பின் 'சிங்கப்பெண் விருது' 2021
- புதுச்சேரி படைப்பாளர் இயக்கத்தின் படைப்பூக்க விருது 2021
- தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை - அசோகமித்ரன் நினைவு படைப்பூக்க விருது 2021
- நேர்படப்பேசு இதழின் பாரதி விருது-2021
- தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை- பாலுமகேந்திரா நினைவு'கலை இலக்கியச் சுடர்' விருது 2022
- உலக திருக்குறள் நான்காவது மாநாடு, மைசூரு பல்கலைக்கழகம்- திருக்குறள் பேராளர் மற்றும் திருக்குறள் ஆய்வுச் செம்மல் விருது 2022
- பாரதிகண்ணா செம்மொழித் தமிழ்ச்சங்கம் வழங்கிய சிறந்த செய்தி வாசிப்பாளர் விருது 2022
- அந்தமான் இரண்டாவது உலக ஐக்கூ மாநாடு - ஐக்கூ சுடரொளி விருது 2023
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
[1]எமக்கும் தொழில்" புத்தக வெளியீட்டுவிழா