அனந்தலட்சுமி சடகோபன்
அனந்தலட்சுமி சடகோபன் (Ananthalakshmi Sadagopan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக்கலைஞர் ஆவார். 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதியன்று பிறந்தார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை
தமிழ்நாட்டின் மதுரை நகரில் ஏ.ஆர்.நாராயணன் மற்றும் அலமேலு தம்பதியருக்கு இவர் மகளாகப் பிறந்தார். சாத்தூர் ஏ.க.சுப்ரமணியத்தின் வழிகாட்டுதலின் கீழ் கருநாடக இசையில் ஆரம்பப் பயிற்சி பெற்றார். பின்னர் கணேச பாகவதர், செம்மங்குடி சீனிவாச ஐயர், நெடுநூரி கிருட்டிணணமூர்த்தி மற்றும் வி.வி.சடகோபன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். வாமன்ராவ் சடோலிகரிடம் இந்துசுதானி இசையையும் கற்றார். தனது 10 வயதில் மதுரையில் அரியக்குடி ராமானுச ஐயங்கார் முன்னிலையில் கர்நாடக இசைக் கச்சேரியை முதன்முதலில் வழங்கினார்.[1][2]
இசைப் பயணம்
கிராமபோன் ஒலிப்பதிவுகளுக்காக அனந்தலட்சுமி பல பாடல்களைப் பாடியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு புது தில்லிக்குச் சென்றார். அங்கு தில்லி அனைத்திந்திய வானொலியில் கச்சேரிகளை வழங்கத் தொடங்கினார். வானொலி நிலையத்துடன் இவரது தொடர்பு 6 தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தது. ஒரு நடிப்பு கலைஞராக மட்டுமல்லாமல், இசை நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்தார்.
1960, 1970 ஆம் ஆண்டுகளில் சென்னையில் வசித்தபோது, வானொலி நிகழ்ச்சிகளுக்கு கூடுதலாக மேடைக் கச்சேரிகளையும் வழங்கத் தொடங்கினார்.[2]
மீனாட்சி அம்மை பிள்ளை தமிழ், வில்லி பாரதம் மற்றும் கிருட்டிண லீலா தரங்கிணி மற்றும் குற்றால குறவஞ்சி உள்ளிட்ட நாட்டிய நாடகங்களுக்கு அனந்தலட்சுமி இசையமைத்துள்ளார்.[1]
விருது
நாரத கான சபா இவருக்கு மூத்த இசைக்கலைஞர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
குடும்ப வாழ்க்கை
இவருக்கும் வருமான வரித்துறையின் முன்னாள் ஆணையராக இருந்த பி.சடகோபனுக்கும் திருமணம் நடந்தது. இவரது மகள் சுஜாதா விஜயராகவனும் ஓர் இசைக்கலைஞராகவும், நடனக் கலைஞராகவும், எழுத்தாளராகவும் செயல்படுகிறார். ச. சீனிவாசன் மற்றும் ச. நாராயணன் என்று இவர்களுக்கு இரண்டு மகன்கள்.[1]
இறப்பு
அனந்தலட்சுமி சடகோபன் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதியன்று இறந்தார்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Carnatic musician Ananthalaksmi Sadagopan no more". தி இந்து. 17 May 2013 இம் மூலத்தில் இருந்து 9 மார்ச் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210309153827/https://www.thehindu.com/news/cities/chennai/carnatic-musician-ananthalaksmi-sadagopan-no-more/article4721647.ece. பார்த்த நாள்: 14 March 2022.
- ↑ 2.0 2.1 Arunn Narasimhan and T. T. Narendran. "Tribute: Ananthalakshmi Sadagopan" இம் மூலத்தில் இருந்து 13 நவம்பர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211113184858/https://dhvaniohio.org/wp-content/uploads/2013/09/tribute-ananthalakshmi.pdf. பார்த்த நாள்: 14 March 2022.
புற இணைப்புகள்
- Ananthalakshmi Sadagopan songs on YouTube