அசாம் தேயிலை
அசாம் தேயிலை | |
---|---|
வகை | கருப்புத் தேயிலை |
தோற்றம் | அசாம், இந்தியா |
சிறு குறிப்பு | உற்சாகம், கசப்புச்சுவை, பிரகாசமான நிறம் |
அஸ்ஸாம் தேயிலை என்பது அதன் உற்பத்திப் பிரதேசமான இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தேயிலை ஆகும். அசாம் தேயிலை ஒரு கருப்பு தேயிலை ஆகும். அசாம் தேநீர் குறிப்பாக கேமல்லியா சினன்சிஸ் என்ற சீனத் தேயிலைச் செடியிலிருது பெறப்படுகிறது.[1][2] இதே தேயிலைச் செடி பாரம்பரியமாக சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் பயன்படுத்தப்படுகிறது.[3] அஸ்ஸாம் தேநீர் பெரும்பாலும் கடல் மட்டத்திற்கு நிகரான உயரட்திலோ அல்லது அதற்கருகிலோ வளர்க்கப்படுகிறது. மேலும் அதன் வடிவம், அதன் உற்சாகம், தீஞ்சுவை, அடர்வு, பிரகாசமான நிறம் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது. அசாம் தேயிலை மற்றும் அசாம் தேயிலைக் கலவைகள் கொண்ட தேயிலைகள் காலைத் தேநீர் ‘ என விற்கப்படுகின்றன. உதாரணமாக, ஐரிஷ் காலை உணவு தேநீர், ஒரு சுவையான மற்றும் வலுவான காலைத் தேநீர் ஆகும். இத்தேயிலை சிறிய அளவிலான அசாம் தேயிலை இலைகளைக் கொண்டுள்ளது.
அசாம் மாநிலம் உலகின் தேயிலை வளரும் பகுதியில் மிகப்பெரியது ஆகும்.[4] பிரம்மபுத்ரா ஆற்றின் இருபுறமும், பங்களாதேஷ் மற்றும் மியான்மரின் எல்லையிலும் அசாம் உள்ளது. இந்தியாவின் இந்த பகுதி அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது. மழைக்காலத்தில், ஒரு நாளைக்கு 10 முதல் 12 அங்குலங்கள் வரை (250–300 மிமீ) மழைப் பொழிவு இருக்கும். பகல்நேர வெப்பநிலை சுமார் 96.8 பாரன்ஹீட் (36° C) ஆக உயர்கிறது. தீவிர ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் காரணமாக பைங்குடில் விளைவு போன்ற நிலைமைகளை உருவாக்குகிறது. இந்த வெப்பமண்டல காலநிலை அசாமின் தனித்துவமான உலர் தேயிலைச் சுவையில் பங்களிக்கிறது, இந்த அம்சத்தால் இந்தத் தேநீர் நன்கு அறியப்பட்டதாகத் திகழ்கிறது.
அசாம் தேயிலை பொதுவாக அதன் தனித்துவமான கருப்பு தேயிலைகளைக் குறிக்கிறது என்றாலும், இப்பகுதி சிறிய அளவிலான பச்சை மற்றும் வெள்ளை தேயிலைகளையும் அவற்றின் தனித்துவமான குணாதிசயங்களையும் உற்பத்தி செய்கிறது. வரலாற்று ரீதியாக, உலகின் சொந்த தேயிலைச் செடிகள் உள்ள இரண்டு பகுதிகளில் அசாம் தெற்கு சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது வணிகத் தேயிலை உற்பத்தி பிராந்தியம் என அழைக்கப்படுகிறது.
ஐரோப்பாவிற்கு அஸ்ஸாம் தேயிலைச் செடி ஸ்காட்லாந்து சாகசக்காரரான ராபர்ட் புரூஸ் என்பவரால் அறிமுகமானது.[5] அவர் 1823 ஆம் ஆண்டில் இதை அறிந்தார். இப்பிராந்தியத்தில் அவர் வணிகம் செய்யும் போது அசாமில் "காட்டுச் செடிகளாக" தேயிலைச் செடிகள் வளர்ந்து வருவதை புரூஸ் கண்டதாகக் கூறப்படுகிறது மனிராம் திவான் என்பவர் இதுகுறித்து வழிகாட்டியதோடு அவரை உள்ளுர் பழங்குடியினத் தலைவரான பெஸா காம் என்பவரிடம் அழைத்துச் சென்றார்.[6] உள்ளூர் பழங்குடியினர் (சிங்போஸ் மக்கள்) இச்செடியின் இலைகளில் இருந்து தேநீர் காய்ச்சுவதைக் கவனித்த புரூஸ், பழங்குடித் தலைவர்களுடன் இலைகள் மற்றும் விதைகளின் மாதிரிகளைச் சேகரித்து வழங்க ஏற்பாடு செய்தார், அதை அவர் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யத் திட்டமிட்டார். ராபர்ட் ப்ரூஸ் சிறிது காலங்களில் இறந்து போனதால் இச்செடி சரியாக வகைப்படுத்தப்படவில்லை. 1830 களின் முற்பகுதியில் ராபர்ட்டின் சகோதரர் சார்லஸ், அசாம் தேயிலைச் செடிகளிலிருந்து சில இலைகளை கல்கத்தாவில் உள்ள தாவரவியல் பூங்காக்களுக்கு முறையான பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். அங்கு, இச்செடியானது இறுதியாக பலவிதமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இது தேயிலைச்செடி அல்லது கேமல்லியா சினென்சிஸ் வர் அசாமிகா என அடையாளம் காணப்பட்டது, ஆனால் சீனத் தேயிலையிலிருந்து ( கேமல்லியா சினென்சிஸ் வர். சினென்சிஸ் ) வேறுபட்டதாகும்.
மேற்கோள்கள்
- ↑ Tea Classification from Tea Research Association, Toklai (retrieved 2009/03/25)
- ↑ ITI Standard Report Page for Camellia sinensis var. assamica retrieved on 2009-03-28.
- ↑ Chen, Jin, Pingsheng Wang, Yongmei Xia, Mei Xu & Shengji Pei. 2005. Genetic diversity and differentiation of Camellia sinensis L. (cultivated tea) and its wild relatives in Yunnan province of China, revealed by morphology, biochemistry and allozyme studies. Genetic Resources and Crop Evolution, 52 (1), 41–52.
- ↑ https://www.indiatea.org/tea_growing_regions
- ↑ https://krishijagran.com/health-lifestyle/assam-tea-a-glimpse-of-its-forbidden-history-and-incredible-health-benefits/
- ↑ Nitin Aant Gokhale (1998). The hot brew: the Assam tea industry's most turbulent decade, 1987–1997. Spectrum Publications. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-85319-82-7.