ஹெர்பர்ட் ஆர்தர் பாப்லி

ஹெர்பர்ட் ஆர்தர் பாப்லி (பிறப்பு c. 1879) ஈரோடு லண்டன் மிஷனின் ஒரு கிறிஸ்தவ மதபோதகர் ஆவார். இவர் திருக்குறள் மொழிபெயர்ப்பாளராகவும், கர்நாடக இசை பாணியில் தமிழ்க் கிறிஸ்தவ இசையை வழங்கும் அவரது திறமைக்காகவும் அறியப்படுகிறார். இவர் அகில இந்திய ஒய்.எம்.சி.ஏ., செயலாளராக பணியாற்றியவர். இவர் இறக்கும் போது, உள்ளூர் ஒய்.எம்.சி.ஏ., தலைவராகவும் குன்னூர் கூட்டுறவு அர்பன் வங்கியின் இயக்குநராகவும் இருந்தார். இவர் 9 மே 1960 அன்று தனது 81-வது வயதில் குன்னூரில் காலமானார்.[1]

ஹெர்பர்ட் ஆர்தர் பாப்லி
பிறப்பு1879
இறப்பு9 மே 1960
பணிகிறிஸ்தவ மதபோதகர்
அறியப்படுவதுதிருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

படைப்புகள்

கல்கத்தாவிலுள்ள ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா தொடரின் அப்போதைய பொது ஆசிரியர் ஜே. என். ஃபர்குஹரின் ஆலோசனையின் பேரில், பாப்லி திருக்குறளின் தேர்ந்தெடுத்த சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். 1931-ஆம் ஆண்டில் ஒய்.எம்.சி.ஏ. பதிப்பகத்தில் தனது இந்தப் படைப்பை வெளியிட்டார். செய்யுள் நடையில் செய்யப்பட்ட தனது மொழிபெயர்ப்பினை "திருவள்ளுவரின் புனிதக் குறள் அல்லது தமிழ் வேதம்" என்ற தலைப்பில் வெளியிட்டார். அறத்துப்பாலிலிருந்து 194 குறள்களும், பொருட்பாலிலிருந்து 135 குறள்களும், இன்பத்துப்பாலிலிருந்து 17 குறள்களுமாக மொத்தம் இந்நூலில் 346 குறட்பாக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார் பாப்லி. 1958-ஆம் ஆண்டு இந்நூலின் திருத்தப்பட்ட இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது. இதில் 511 குறட்பாக்கள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இதில் அறத்துப்பாலிலிருந்து 299 குறள்களும், பொருட்பாலிலிருந்து 190 குறள்களும், இன்பத்துப்பாலிலிருந்து 22 குறள்களும் அடங்கும். இந்த இரண்டாவது பதிப்பு விரிவான அறிமுகப் பகுதியையும், வில்லியம் ஹென்றி ட்ரூ, ஜி. யு. போப், வ. வே. சு. ஐயர், ஆ. சக்கரவர்த்தி ஆகிய மொழிபெயர்ப்பாளர்களை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட விளக்கக் குறிப்புகளையும், குறளின் பல்வேறு ஐரோப்பிய மொழிபெயர்ப்பு நூல்களின் பட்டியலையும் கொண்டதாகும்.[2]

இவரது மற்ற வெளியீடுகளில் கல்கத்தாவின் ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா தொடரில் வெளியிடப்பட்ட "தி மியூசிக் ஆஃப் இந்தியா" என்ற படைப்பும் ஒன்றாகும்.[2]

மேற்கோள்கள்

  1. "dated May 12, 1960: Rev. H.A. Popley". The Hindu (Chennai: The Hindu). 12 May 2010. http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/dated-May-12-1960-Rev.-H.A.-Popley/article16033666.ece. 
  2. 2.0 2.1 Manavalan, A. A. (2014). A Compendium of Tirukkural Translations in English (First ). Chennai: Central Institute of Classical Tamil. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-908000-2-0. 

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/index.php?title=ஹெர்பர்ட்_ஆர்தர்_பாப்லி&oldid=16020" இருந்து மீள்விக்கப்பட்டது