வீர சந்தானம்
வீர சந்தானம் (10 ஆகத்து 1947 -13 சூலை 2017) என்பவர் ஓவியர், நடிகர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.[1] மொழி, இனம், நாடு பண்பாடு தொடர்பான விதயங்களில் உணர்வுடனும் முனைப்புடனும் இயங்கி வந்தவர். தமிழ் பற்றாளரும் ஓவியருமான வீரசந்தானம், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத் தமிழர்களின் நினைவகத்தை தனது ஓவிய திறனால் உருவாக்கித் தந்தவர்.[2][3]
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வீர சந்தானம் |
---|---|
இறப்பு | 13 சூலை 2017 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் |
பெற்றோர் | வீரமுத்து - பொன்னம்மாள் |
முகில்களின் மீது நெருப்பு என்றொரு ஓவியப் புத்தகத்தை வெளியிட்டார். இந்நூல் இராசகிளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தமிழில் வெளிவந்த முதல் ஓவிய நூல் என குறிப்பிடப்படுகிறது. [4]
வாழ்க்கை வரலாறு
வீர சந்தானம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயில் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை வீரமுத்து ஒரு கூலித் தொழிலாளி. தாயார் பொன்னம்மாள்.
கல்வி
கல்லூரிப் படிப்பினைக் கும்பக்கோணம் அரசு கலைக் கல்லூரியிலும், அதைத் தொடர்ந்து மேல் படிப்பு சென்னையிலும் கற்றார். சந்தானத்தின் இளமைக் காலம் பெரும்பாலும் கோயில்களில் கழிந்தது. கோயில்களில் காணப்படும் சிற்பங்களைக் கண்டு கோடுகளையும், சுவர் ஓவியங்களையும் பார்த்து நகல் எடுத்து தம் ஓவியத் திறமையை வளர்த்துக் கொண்டார். இராசத்தானில் பனசுதலி வித்யா பீடம் பல்கலைக்கழகத்தில் பிரசுகோ என்னும் சிறப்பு சுவரோவியக் கலையில் பயிற்சி பெற்றார். அவ்வமயம் இத்தாலி, செய்ப்பூர் அசந்தா வகை ஓவியங்களின் செய்முறையை தேவன்கி சர்மா என்பவரிடம் கற்றுக்கொண்டார். புகழ் பெற்ற சிற்பக் கலைஞர் தனபால் (ஓவியர்) இவர் படிக்கும்போது பொருளியல் சூழலைச் சரி செய்தார். இளம் அகவையில் பள்ளி நாடகத்தில் நடித்தும் உள்ளார்.
இறப்பு
வீரசந்தானம் சென்னையில் மனைவி, இரு மகள்களுடன் வசித்தார். இவரது மனைவின் பெயர் சாந்தி. இவர் 13 சூலை 2017 இல் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். [5]
அலுவலகப் பணி
நெசவாளர் சேவை மையத்தில் பணியில் சேர்ந்தார் சென்னை, பெங்களூரு, காஞ்சிபுரம், திரிபுரா, நாக்பூர், மிசோரம் என இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்திருக்கிறார். 25 ஆண்டுகள் அங்கு பணி செய்த பின்னர் விருப்ப ஒய்வு பெற்றார்.
கலைப் பணி
கல்தூண்களில் இடம்பெற்றுள்ள 108 பறவைகளை ஒன்று சேர்த்து ஒரு வடிவமைப்பை உருவாக்கினார். திசு நெசவு முறையில் அச்சுக் கலையைப் பயன்படுத்தி அந்த வடிவமைப்பைப் பதித்து ஓர் அழகான விரிப்பைச் செய்தார். கன்னனூர் கோவில்களில் இருந்த வீரன், குட்டிச்சாத்தான், குளிகன் போன்ற வடிவங்களை உள்வாங்கி 108 தையம் உருவங்களை தொகுத்து வடிவமைத்து திரைச் சீலைகளை உருவாக்கினார். தோல் பாவைக் கூத்து இவருக்குப் பிடித்த ஒன்று. தோல் பாவைக் கூத்து பற்றிய ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உண்டு. திரிபுரா மாநில பழங்குடியினரின் மரபு கலை வடிவங்களை ஆடைகளில் அறிமுகம் செய்தார். புதிய உத்திகளைக் கையாண்டு பீங்கான், மெட்டல் ரிலீப் போன்ற பல வகையான பொருள்களைப் பயன்படுத்தி புடைப்புச் சிற்பங்களைச் செதுக்கி வருகிறார். சகட யாழ், மகர யாழ், காமதேனு எனத் தமிழர்களின் அடையாளங்களை ஓவியங்களாக எழுதியுள்ளார்.[6]
தஞ்சைக்கு அண்மையில் உள்ள விளாரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்னும் கூடத்தில் இவர் படைத்த கருங்கல் சிற்பங்கள் 2009 இல் நிகழ்ந்த ஈழப் போரின் அவலங்களைச் சித்திரித்துக் காட்டுகின்றன.
திரைப்பட நடிப்பு
திரை இயக்குநர் பாலு மகேந்திராவின் சந்தியா ராகம் என்னும் படத்தில் நடித்தார். தம்பியுடையான், மகிழ்ச்சி, அரவான், பீட்சா, வில்லா, கத்தி, அனேகன், அவள் பெயர் தமிழரசி ஆகியவை வீர சந்தானம் நடித்த பிற படங்கள் ஆகும்.
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1989 | சந்தியா ராகம் | வாசு | |
2010 | அவள் பெயர் தமிழரசி (திரைப்படம்) | சிவா ராவ் | |
மகிழ்ச்சி | கண்ணுப்பிள்ளை | ||
2011 | வேலாயுதம் (திரைப்படம்) | ||
2012 | பீட்சா | ||
2013 | பீட்சா II: வில்லா | ஜமின்தார் | |
ஜன்னல் ஓரம் | |||
2014 | கத்தி (திரைப்படம்) | வயதான கிராமத்தான் | |
2015 | அனேகன் | குருஜி | |
உறுமீன் | |||
2020 | ஞானச்செருக்கு |
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ நடிகர் வீரசந்தானம் மாரடைப்பால் மரணம் பரணிடப்பட்டது 2017-07-14 at the வந்தவழி இயந்திரம், தினகரன் (இந்தியா)
- ↑ ஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார்!, ஒன் இந்தியா
- ↑ ஓவியர் வீரசந்தானம் காலமானார், தினமணி
- ↑ ஊஞ்சல் தேனீர் - யுகபாரதி -41 - குங்குமம் - 08 செப்டம்பர் 2017
- ↑ ஓவியர் வீர சந்தானம் - கார்த்திகா வாசுதேவன் - தினமணி நாளிதழ் 17 சூலை 2017
- ↑ மரபை மீட்டெடுக்கும் தூரிகை, தி இந்து