விநாயகர் நான்மணிமாலை

விநாயகர் நான்மணிமாலை சுப்பிரமணிய பாரதியாரால் பாடப்பட்டது. புதுவை மணக்குள விநாயகரை வேண்டிப் பாடப்பட்ட இந்நூல், நான்மணிமாலை எனப்படும் பிரபந்த வகையைச் சார்ந்தது. மேற்படி கோயிலின் உள் வீதியில் இப் பாடல்கள் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நூல் பாரதியார் இறந்த பின்னர் 1929-ஆம் ஆண்டில் முதல் பதிப்பைக் கண்டது[1].

1919-ஆம் ஆண்டில் பாரதியார் இருக்கும்போதே "விநாயகர் தோத்திரம்" என்னும் நூலொன்றை அச்சிடும் முயற்சியைப்பற்றிப் பாரதியார் சி. விசுவநாத ஐயர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே விநாயகர் நான்மணிமாலை என்னும் தலைப்பிட்டுப் பின்னர் அச்சிடப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. இந்நூலின் கையெழுத்துப் பிரதியில் சில இடங்கள் பாரதியாரால் நிரப்பப் படாமல் இருந்தன என்றும் அவற்றைப் பின்னாளில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சுத்தானந்த பாரதியார் ஆகியோர் பூர்த்தி செய்தனர் என்றும் சொல்லப்படுகிறது[2]

இந்நூல் வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், அகவல் என்னும் நான்கு பாடல் வகைகளின் கோர்வையாக அமைந்து அந்தாதிச் செய்யுள் அமைப்பைக் கொண்டு விளங்குகிறது. இதில் 40 பாடல்கள் உள்ளன.


பிற்காலத்தில் சினிமாப் பாடல்கள் மூலம் மக்களுக்குப் பழக்கமான வரிகள் பல இந்த நூலில் காணப்படுகின்றன. பாடல் ஒன்றில் வரும் கீழ்க்கண்ட,

எனக்கு வேண்டும் வரங்களை யிசைப்பேன் கேளாய் கணபதி,
மனத்திற் சலன மில்லாமல், மதியிலிருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும்.
கனக்குஞ் செல்வம் நூறு வய திவையுந்தர நீகடவாயே.[3]


என்னும் வரிகளும், பாரதியின் ஆளுமையை வெளிப்படுத்துவதற்காகச் சினிமாவொன்றில் பயன்படுத்திய,

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்[4]


ஆகிய வரிகளும் இதற்கு எடுத்துக்காட்டுகள்.


உனக்கே யென்னாவியு முள்ளமுந் தந்தேன்
மனக்கேதம் யாவினையும் மாற்றி - எனக்கே
நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து.[5]

என்று தனக்காகவும் விநாயகரிடம் வரம் கேட்கும் பாரதியார்,


பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்.
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட நிணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகா சத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி
அங்ஙனே யாகுக' என்பாய், ஐயனே!
இந்நாள், இப்பொழு தெனக் கிவ்வரத்தினை
அருள்வாய்;.....[6]

என்னும் வரிகள் மூலம் உலகில் உள்ள உயிரினங்கள் யாவும் இன்புற்று வாழச் செய்வதற்கான சக்தியைத் தனக்கு அருளுமாறும் இறைவனை வேண்டுகிறார்.

குறிப்புகள்

  1. அதியமான், பழ., 2006
  2. பாரதியார் புனைந்த விநாயகர் நான்மணிமாலையில் வே. சுப்பிரமணியனின் குறிப்பு
  3. விநாயகர் நான்மணிமாலை, பாடல் 7
  4. விநாயகர் நான்மணிமாலை, பாடல் 25
  5. விநாயகர் நான்மணிமாலை, பாடல் 33
  6. விநாயகர் நான்மணிமாலை, பாடல் 32

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=விநாயகர்_நான்மணிமாலை&oldid=14677" இருந்து மீள்விக்கப்பட்டது