விஜயராகவ நாயக்கர்
விஜயராகவ நாயக்கர் (கி.பி.1633 - 1673) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த தஞ்சாவூர் நாயக்கவம்சத்தின் நான்காவது மன்னன்.[1]
விஜயராகவ நாயக்கர் | |
---|---|
சோழமண்டல மன்னன் | |
ஆட்சி | 1633–1673 |
முடிசூட்டு விழா | 1633 |
முன்னிருந்தவர் | இரகுநாத நாயக்கர் |
மரபு | நாயக்கவம்சம் |
அரச குலம் | தஞ்சாவூர் நாயக்கர் |
பிறப்பு | தஞ்சாவூர் |
இறப்பு | தஞ்சாவூர் |
வம்சம்
விஜயராகவ நாயக்கரின் தந்தை இரகுநாத நாயக்கர் (1600 - 1632). இவர் தம் தந்தையாரின் ஆட்சிக் காலத்திலேயே கி.பி.1631இல் இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்று, அரசு பொறுப்புகளைத் தந்தையாருடன் இணைந்து கவனித்து வந்தார். இரகுநாத நாயக்கர் கி.பி. 1645இல் மறைந்ததும் அதே ஆண்டில் விசயராகவ நாயக்கர் முறைப்படி தஞ்சை நாயக்கர் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.
ஆட்சி
மதுரைக்கும் தஞ்சைக்கும் இடையே இவர் காலத்திலும் மோதல் தொடர்ந்தது.மதுரையை ஆண்ட மன்னன் சொக்கநாத நாயக்கருக்கு விஜயராகவ நாயக்கர் தன் மகளைக்கொடுக்க மறுத்துத்ததால்,சொக்கநாத நாயக்கர் இவர் மீது கி.பி.1673இல் போர் தொடுத்தார். சொக்கநாத நாயக்கரின் படை தஞ்சைப் பகுதியில் உள்ள வல்லம் என்னும் ஊரைக் கைப்பற்றியது. சொக்கநாத நாயக்கரின் தளவாய் கிருஷ்ணப்ப நாயக்கர், விசயராகவ நாயக்கரை அணுகி, இந்நிலையிலேனும் மகளைக் கொடுத்துச் சமாதானம் செய்து கொள்ளுமாறு அவரிடம் வேண்டினார். ஆனால் விசயராகவ நாயக்கர் அந்தபுரத்தை வெடிவைத்து அழிக்குமாறு சொல்லி விட்டுப் போரைத் தொடர்ந்தார். இறுதிவரை பணியவில்லை. இறுதியில் அவர் தம் மகளுடன் உயிர் நீத்தார்.
விசயராகவ நாயக்கர் மறைவுக்குப் பின்னர்த் தஞ்சை நாயக்கர் ஆட்சி மறைந்தது. தஞ்சையைக் கைப்பற்றிய சொக்கநாத நாயக்கர் தன் சிற்றன்னையின் மகனும், தன் தம்பியுமாகிய அழகிரி நாயக்கரைத் தஞ்சையின் அரசபிரதிநிதியாக்கினார். விசயராகவ நாயக்கரோடு தஞ்சை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது.[2]
வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி
கணபதிப்பெருமானை வெள்ளை விநாயகராக ஆவாகித்து வழிபடுவது ஒரு மரபாகும். இதனைச் சுவேத விநாயகர் எனக் குறிப்பர். ‘சுவேத விநாயகர் கல்பம்‘ என்றொரு நூலும் உண்டு. தஞ்சாவூர்க் கோட்டையின் கிழக்கு வாசலுக்கு எதிரில், அகழியின் வெளிப்புறம் இரண்டு கோயில்கள் உள்ளன. வடபுறம் உள்ள கோயில் வெள்ளை விநாயகர் கோயிலாகும். மன்னர் விஜயராகவ நாயக்கர் காலத்தில் இந்த விநாயகப் பெருமானைப் போற்றும் வகையில் ‘வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி‘ என்ற சிறுநூல் ஒன்று எழுந்துள்ளது. இந்நூலின் இறுதிப்பாடலில் ‘விஜயராகவ நாயக்கர் வாழி, ‘தளவாய் வேங்டந்திரன் வாழி‘ என்ற வரிகள் உள்ளன. [3]
நாடகங்கள்
இவர் 32க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை எழுதி, அவற்றில் பெரும்பாலான நாடகங்களை மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடிக்கவும் செய்துள்ளார். குறிப்பாக பாகவதமேளா என்ற நாட்டிய நாடக மரபில் பிரதான நாடகமாகப் போற்றப்பெறுகின்ற பிரகலாத நாடகம் ஒன்றை விஜயராகவனே எழுதி மன்னார்குடி கோயிலில் அரங்கேற்றியுள்ளார் என்பதை சுவடிகள் வாயிலாக அறியும்போது, குச்சுப்புடி நாட்டிய மரபின் பல அம்சங்கள் மன்னார்குடியிலிருந்துதான் சென்றுள்ளது என்பதை நம்ப முடிகிறது. [4]
மேற்கோள்கள்
- ↑ தஞ்சை நாயக்கர்கள்
- ↑ சிற்றரசுகள்
- ↑ குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, 1997
- ↑ என்.விஸ்வநாதன், செங்கமலவல்லி திருமண வைபவம், மன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 8.9.95
இவற்றையும் காண்க
வெளி இணைப்பு
- Coins Of Tanjore Nayaks பரணிடப்பட்டது 2016-03-13 at the வந்தவழி இயந்திரம்