விசிறி சாமியார் (நூல்)

விசிறி சாமியார் என்னும் நூல் ஐந்து சிறுகதைகளும் 23 கவிதைகளும் கொண்ட தொகுப்பு நூல் ஆகும். இதில் உள்ள கதைகளையும் கவிதைகளையும் பாலகுமாரன் எழுதியிருக்கிறார். திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த யோகி ராம்சுரத்குமார் என்னும் விசிறி சாமியார் பக்தர்களுக்கு ஏற்படும் பட்டறிவாக கதைகளையும் அவரோடு தனக்கு தொடர்பு ஏற்பட்ட உணர்வுகளை கவிதைகளாகவும் பாலகுமாரன் படைத்திருக்கிறார்.

விசிறி சாமியார்
நூல் பெயர்:விசிறி சாமியார்
ஆசிரியர்(கள்):பாலகுமாரன்
வகை:கதைகளும் கவிதைகளும்
துறை:இலக்கியம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:152
பதிப்பகர்:விசா பப்ளிகேஷன்ஸ்
55 வெங்கட்நாராயணா சாலை,
தியாகராய நகர்
சென்னை 600 017
பதிப்பு:முதற்பதிப்பு திசம்பர் 1991
இரண்டாம் பதிப்பு நவம்பர் 1993
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

உள்ளடக்கம்

இந்நூல் யோகி ராம்சுரத் குமாருக்கு சமர்ப்பணம் என்னும் தலைப்பில் காணிக்கை ஆக்கப்பட்டு இருக்கிறது. அடுத்து யோகி ராம்சுரத் குமார் என்னும் தலைப்பில் இரண்டாம் பதிப்பிற்காக பாலகுமாரன் 1993 அக்டோபர் 14ஆம் நாள் எழுதிய முன்னுரை இடம்பெற்றிருக்கிறது. அதற்கு அடுத்து இசைஞர் இளையராசா எழுதிய முன்னுரை இருக்கிறது. தொடர்ந்து குருதரிசனம் என்னும் தலைப்பில் முதற்பதிப்பிற்காக 1991 நவம்பர் 15ஆம் நாள் பாலகுமாரன் எழுதிய முன்னுரை இடம்பெற்றிருக்கிறது. பின்னர் கதைகளும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

கதைகள்

ஒன்றுமில்லாதவர்கள்

திருவண்ணாமலை கோவிலுக்கு எதிரே வரிசையாக இருக்கும் பாத்திரக் கடை வரிசையின் முடிவில் தகரக்கூரைக்கு கீழே அமர்ந்து பாத்திரங்களுக்கு பெயர் வெட்டுபவர் நடேசன். தாயொருத்தி தான் கொணர்ந்த தவலையில் தவறுதலாகப் பெயர்வெட்டி தன் மகளிடமே வசவுவாங்க, நடேசன் தனது கூலியை விட்டுக்கொடுத்து அந்த தாயை அவள் மகள் கொடுக்கும் தண்டனையிலிருந்து காப்பாற்றுகிறார். அந்த அம்மா, நடராசனை “உன் ஆத்தாவிற்கு ஒரு குறையும் வராது” என வாழ்த்துகிறார். நடேசனுக்கு அந்த வாழ்த்தில், விசிறி சாமியார் சற்று முன்னர் “உன் அம்மா யார்?” எனக் கேட்ட வினாவிற்கான விடை கிடைக்கிறது.

இடையினங்கள்

சீனுவாசன் கவிதைகள் எழுதுவான். அவை சிற்றிதழ்கள் சிலவற்றில் வரும்; ஆனால் அதற்கு காசு வராது. வத்சலா அவன் மனைவி. அவள் தன் தங்கை பிரமிளாவைப் போல வீடு கட்டும் ஆசையில் சிறிய முதலீட்டில் புடவை வியாபாரம் தொடங்கி, இழப்பின்றி தப்பி, அந்த முயற்சியைக் கைவிடுகிறாள். திருவண்ணாமலை சென்ற சீனுவாசன், அங்கே யோகி ராம்சுரத் குமாரைப் பார்க்கிறான். மறுநாள் பத்திரிகை ஒன்றில் பிரார்த்தனை கிளப் பகுதிக்கு பிரார்த்தனைக் குறிப்பு எழுதிக்கொடுத்து இருநூறு ரூபாய் பெறுகிறான். அன்றைக்கு இரவு உணவு உண்ணும்பொழுது வத்சலா தன் தங்கையைப் போல வீடுகட்ட நினைப்பது பேராசை என அவனுக்குத் தோன்றுகிறது. அதனை வத்சலாவிடம் கூறுகிறான். சிலநாள் கழித்து இருவரும் திருவண்ணாமலை சென்று விசிறி சாமியாரைச் சந்தித்து மீள்கிறார்கள். இதனால் ரொம்ப உயர்ந்தவனும் முற்றிலும் தாழ்ந்தவனும் அல்லாத இடையினனான சீனுவாசனுக்குள் மெல்ல மெல்ல வலிமையேறும் எனத் தோன்றுகிறது.

மின்மினிக்கூட்டம்

கதைகள் எழுதும் சீனுவாசன், தன் மனைவி கமலாவோடு திருவண்ணாமலை சென்று யோகி ராம்சுரத்குமாரைச் சந்திக்கிறான். அப்பொழுது, கணவன் தன் மனைவி மீது ஆதிக்கம் செலுத்தலாம் ஆனால் அத்துமீறக்கூடாது என்னும் தொனியில், “ஆதிக்கம் வேறு; அத்துமீறல் வேறு” என விசிறி சாமியார் கூறுகிறார். சீனுவாசனும் கமலாவும் பேருந்தில் திரும்பி வரும்பொழுது, அதில் ஏற்பட்ட ஒரு மோதலை முன்வைத்து, அதன் நடத்துநர் பக்தவச்சலம் மூலம் ஆதிக்கத்திற்கும் அத்துமீறலுக்கும் உள்ள வேறுபாட்டை சீனுவாசன் உணர்கிறான்.

பாகல்

சிவசங்கரனும் கலாவதியும் கணவன் மனைவி. வந்தனா என்னும் மகளும் ஒரு மகனும் அவர்களுக்கு இருக்கிறார்கள். கலாவதி பிறந்த வீட்டு உறவில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு சிவசங்கரன் எப்பொழுதும் போவதில்லை. இம்முறையும் திருவானைக்காவலில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மனைவியும் மகளும் கெஞ்சிக்கேட்டும் போகாமல், கலாவதியையும் பிள்ளைகளையும் மட்டும் அனுப்பிவிட்டு, சிவசங்கரன் திருவண்ணாமலைக்கு விசிறி சாமியாரைப் பார்க்கப் போகிறார். சாமியார் நாளும் தனக்கு காலை உணவுகொடுக்கும் அம்மா அழைத்து வந்த விருந்தினர்களுக்கு கோயிலைச் சுற்றிக் காட்டுகிறார். அந்த அம்மாள் சாமியாருக்கு நன்றி சொல்ல, “அன்புக்கு அன்பு செய்தல் கடமை” என்கிறார். சிவசங்கரனுக்கு தனது தவறு புரிகிறது.

கல் பரிசல்

சடகோபன் உயர்நிலைப் பள்ளியொன்றில் ஆங்கில ஆசிரியன். யோகி ராம்சுரத் குமாரின் பக்தன். மாணவர்களோடு அன்பாகப் பழகுபவன். அதனால் அவர்களுக்கு அவனைப் பிடிக்கும். நாற்பத்தைந்து மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சாத்தனூர் அணைக்கு கல்வியுலா செல்லும் வழியில் அவர்களை விசிறி சாமியாரிடம் அழைத்துச் செல்கிறான். சாமியாரும் அவர்களோடு சேர்ந்து சாத்தனூர் அணைக்கு வருகிறார். இடையில் மாணவன் அதிசயம் ஏதேனும் நடக்குமா என்கிறான். அங்குள்ள பரிசலில் சாமியாரும் சடகோபனும் ஏறி பயணம் செய்கிறார்கள். பயணம் முடிந்ததும் படகோட்டி அந்தப் பரிசலில் சிமிட்டியைப் பூசி அதனை கல்பரிசல் ஆக்கிவிடுகிறார். இது ஓர் அதிசயம் என்பது மாணவனுக்கு புரியுமா என சடகோபன் நினைக்கிறான். சாமியார் தன்னைத் தேடி வந்த பக்தர்களோடு திருவண்ணாமலை திரும்புகிறா. மாணவர்கள் ஊருக்குத் திரும்புகிறார்கள்.

கவிதைகள்

  1. குரு வணக்கம்
  2. தியானம்
  3. உபசாரம்
  4. வேண்டல்
  5. கர்வபங்கம்
  6. ஆவாஹனம்
  7. ப்ரேமை
  8. சக்ரம்
  9. கூவல்
  10. தீபச் சுடர்
  11. பரவசம்
  12. அத்வைதம்
  13. தவம்
  14. ஒளி
  15. இசை
  16. பூஜை
  17. உள் ஒலி
  18. வெளிச்சம்
  19. ஸ்வப்னம்
  20. வரம்
  21. அறிதல்
  22. அந்தக்கரணம்
  23. ஜபம்

மேற்குறிப்புகள்


வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விசிறி_சாமியார்_(நூல்)&oldid=16343" இருந்து மீள்விக்கப்பட்டது