வள்ளுவன்

வள்ளுவன் என்னும் சொல் ‘வள்’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது. வளை, வளைவு [1] என்னும் பொருள்களைத் தருவது. வள்ளல், [2] வள்ளியோர் [3] என்னும்போது கையை வளைத்து வழங்குவோரைக் குறிக்கும். வள்ளி [4] என்னும்போது வளையும் கொடியைக் குறிக்கும். வளம், வள்ளுரம் [5] என்னும்போது பொருள் வளத்தையும், மனவளத்தையும் குறிக்கும்.

  • இவற்றில் வள்ளுவன், வள்ளுவர் என்னும் சொற்கள் மனவளத்தைக் குறிக்கும் சொல்லோடு தொடர்புடையன.

வள்ளுவன் என இக்காலத்தில் தன்னைக் கூறிக்கொள்ளும் சாதியினரைத் தமிழ்நாடு அரசு தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் [6] வைத்துக் கல்வி, வேலைவாய்ப்புத் துறைகளில் 7% இட ஒதுக்கீடு செய்து சலுகை வழங்கிவருகிறது. இந்திய அரசும் இச் சலுகையை வழங்குகிறது.

இவர்கள் அண்மைக்காலம் வரையில் நல்லநேரம், திருமணப் பொருத்தம் முதலானவற்றைப் பார்த்துச் சொல்லும் கணியர்களாக விளங்கிவந்துள்ளனர். எனினும் மேல்சாதியினரால் தீண்டத் தகாதவர் என ஒதுக்கப்பட்டு வந்த்தால் இவர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சங்க காலத்தில் நாஞ்சில் வள்ளுவன் என்னும் குறுநிலத் தலைவன் சிறந்த வள்ளலாக விளங்கினான்.

12-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று வள்ளுவப்பாடி நாடு என ஐயாற்றுப் படுகை கண்ணனூரைக் குறிப்பிடுகிறது. இங்கு இப்போதும் வள்ளுவன் என்னும் சாதி மக்கள் மிகுதியாக வாழ்ந்துவருகின்றனர். இங்கு அரிசனநல மேல்நிலைப் பள்ளி ஒன்றும் தனியாக இயங்கிவருகிறது. [7]

இந்த வள்ளுவப்பாடி நாடுதான் புகழேந்திப் புலவரைப் போற்றிப் பேணிய சந்திரன் சுவர்க்கியின் மள்ளுவநாடு எனச் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார் என்று மு. அருணாசலம் தெரிவிக்கிறார். [8]

அடிக்குறிப்பு

  1. வள்வாய் ஆழி நற்றிணை 78, வள் உகிர்க் கொக்கு நற்றிணை 100
  2. பெரும்பாணாற்றுப்படை 339, நற்றிணை 297
  3. புறநானூறு 47
  4. வள்ளி நுண்ணிடை அகநானூறு 286
  5. புறநானூறு 219, 320
  6. scheduled casts number 70
  7. தமிழ்நாடு அரசு அரிசன நலத்துறைப் பள்ளிகள்
  8. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 13-ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 23
"https://tamilar.wiki/index.php?title=வள்ளுவன்&oldid=12078" இருந்து மீள்விக்கப்பட்டது