வஞ்சித் திணை
நாட்டை விரிவாக்கும் நோக்கோடு வேந்தன் போர் தொடுக்கும் செயல்களைத் தொல்காப்பியம் வஞ்சித்திணை எனக் குறிப்பிடுகிறது. இது அகத்திணையில் ஒன்றான முல்லைத் திணையின் புறம் எனக் குறிப்பிடப்படுகிறது.[1] 'வஞ்சித் திணை என்பது, அடங்காத மண்ணாசையினாலோ அல்லது தன்னை மதியாத பகையரசனின் செருக்கை அடக்கவோ ஒரு மன்னன் மற்றொருவன் மேல் போர் தொடுப்பது ஆகும்.[2] போர்தொடுத்துச் செல்பவர் வஞ்சிப் பூவை சூடிச்சென்றதால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. வஞ்சி என்பது ஒரு கொடிவகை.
தொல்காப்பியத்தில் வஞ்சித் திணை
தமிழின் மிகப்பழைமையான இலக்கணமான தொல்காப்பியத்தில் வஞ்சி பதின்மூன்று துறைகளை [3] உடைய ஒரு திணையாக உரைக்கப்படுகிறது.[4]
- வஞ்சியின் துறைகள்[5]
- வஞ்சி அரவம் - செல்லும் படையின் பேரரவம்
- உழபுல வஞ்சி - பகைவர் நாட்டை தீயிட்டழித்தல்
- கொற்றவை நிலை[சான்று தேவை] - விளக்கிச் சொல்லப்படும் படையின் பெருமை
- கொடை வஞ்சி - வேந்தன் வீரர்களுக்கு பரிசில்கள் கொடுப்பது
- கொற்ற வஞ்சி - போர்செய்து வெற்றி பெறுதல்
- மாராய வஞ்சி - வேந்தனால் சிறப்பிக்க (மாராயம்) பெற்றவரின் பெறுமையை கூறல்
- பேராண் வஞ்சி - பகைவரை ஒரு பொருட்டாக நினையாது போர்செய்த பேராண்மை
- ஒரு தனி நிலை - பெருகிவரும் வெள்ளத்தை தடுத்துநின்ற கல்லனையைப் போல ஒருவன் எதிர்த்து வந்த படையை தனியனாய் தாங்கிய சிறப்பு
- பெருஞ்சோற்று நிலை - வீரர்களுக்கு சோறு அளித்த பெருஞ்சோற்று நிலை
- நெடுமொழி வஞ்சி - வெற்றி பெற்றவர்களின் விளக்கம்
- மழபுல வஞ்சி - தோல்வியடைந்தவரின் அழிவைக் கூறல்
- கொற்ற வள்ளை - பகைவர் நாடு அழிவதற்கு இரங்கும் வள்ளைப் பாட்டு
- தழிஞ்சி - பகையோடு போராடி சோர்ந்த வீரர்களைத் தழுவிக்கொள்ளல்
இத்துறைகள் பின்னர் பலவாக பெருகியுள்ளமை காண்கிறோம். இலக்கியம் வளர வளர திணைகளுக்கான துறைகளும் பெருகுவது இயல்பே.[6]
புறப்பொருள் வெண்பாமாலையில் வஞ்சித் திணை
தொல்காப்பியத்திற்கு பிறகு தமிழில் புறப்பொருள் பற்றி கிடைக்கும் இலக்கண நூல் புறப்பொருள் வெண்பாமாலையாகும். வேந்தன் தன் பகைவனின் மண்ணைக் கைக்கொள்ள எண்ணி வஞ்சி சூடித் தாக்குவான் என இது குறிப்பிடுகிறது.[7] வஞ்சியானது வஞ்சி அரவம், குடைநிலை, வாள் நிலை, கொற்றவை நிலை, கொற்றவஞ்சி, கொற்ற வள்ளை, பேராண் வஞ்சி, மாராய வஞ்சி, நெடுமொழி வஞ்சி, முதுமொழி வஞ்சி, உழபுல வஞ்சி, மழபுல வஞ்சி, கொடை வஞ்சி, குறுவஞ்சி, ஒருதனிநிலை, தழிஞ்சி, பாசறை, பெருவஞ்சி, பெருஞ்சோற்றுநிலை, நல்லிசை வஞ்சி என இருபது துறைகளை உடையது என்று இந்நூல் உரைக்கிறது.
குடை நிலை, வாள் நிலை, கொற்றவை நிலை[சான்று தேவை], நல்லிசை வஞ்சி[சான்று தேவை], முதுமொழி வஞ்சி, குறு வஞ்சி, பாசறை நிலை, பெரு வஞ்சி ஆகிய துறைகள் (தொல்காப்பியத்திற்கு பின்) கூடியுள்ளன என்று காண்கிறோம்.
சங்க இலக்கியத்தில் வஞ்சித் திணை
புறப்பொருள் பாடல்களை சங்க இலக்கியத்தில்தான் பெரும்பாலும் காண்கிறோம், அதிலும் வெட்சி முதாலான திணைகளில் பொருந்திய பாடல்கள் புறநானூறில் மட்டுமே காணப்படுகின்றன.
புறநானூறில் வஞ்சித் திணையில் அமைந்த பாடல்களின் வரிசை எண்கள்: 4, 7, 16, 36, 41, 45, 46, 47, 57, 98, 213, 292.
- இவற்றின் துறைகள்,
- 4, 7, 41, 98 - கொற்றவள்ளை
- 16 - மழபுலவஞ்சி
- 36, 45, 46, 47, 57, 213 - துணைவஞ்சி
- 292 - பெருஞ்சோற்றுநிலை
குறிப்புகள்
- ↑
- வஞ்சிதானே முல்லையது புறனே;
- எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன்
- அஞ்சு தகத் தலைச் சென்று, அடல் குறித்தன்றே (தொல்காப்பியம் 64)
- ↑
வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்செரு வென்றது வாகையாம்
- ↑ துறை என்பது திணையின் உட்பிரிவு ஆகும், இது ஏறத்தாழ பாடலில் நிகழும் “காட்சியின்” இடமாகும்
- ↑
வஞ்சிதானே முல்லையது புறனே
எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன்
அஞ்சு தகத் தலைச் சென்று அடல் குறித்தன்றே -தொல்-பொருள்-2-6 - ↑
இயங்கு படை அரவம், எரி பரந்து எடுத்தல்,
வயங்கல் எய்திய பெருமையானும்,
கொடுத்தல் எய்திய கொடைமையானும்,
அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்,
மாராயம் பெற்ற நெடுமொழியானும்,
பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்,
வரு விசைப் புனலைக் கற் சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்,
பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்,
வென்றோர் விளக்கமும், தோற்றோர் தேய்வும்,
குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்,
அழி படை தட்டோர் தழிஞ்சியோடு தொகைஇ,
கழி பெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே.- -தொல்-பொருள்-2-7
- ↑ தொல்காபியத்தில் பதின்மூன்றாக உரைக்கப்பட்ட துறைகள் பின்னர் வந்த புறப்பொருள் வெண்பாமாலையில் இருபதானதைக் காண்க, இஃது எல்லா திணைகளுக்கும் பொருந்தும்.
- ↑
வாடா வஞ்சி தலைமலைந்து
கூடார் மண் கொளல் குறித்தன்று- -பு.பொ.வெ.மா-வஞ்சி-1