லட்சுமி (எழுத்தாளர்)
லக்ஷ்மி அல்லது லட்சுமி (மார்ச் 23, 1921 - சனவரி 7, 1987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
லக்ஷ்மி திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.
இளமைப் பருவம்
பாட்டன் பாட்டியிடம் வளர்ந்த இளமைப் பருவத்தில் பாட்டியிடம் நிறைய அனுபவப் பாடங்களைக் கேட்டு வளர்ந்ததில் இவருடைய சிந்தனைப் போக்கு ஒத்த வயதுடைய மற்ற குழந்தைகளை விட மாறுபட்டதாகவே இருந்தது. தொட்டியத்தில் ஆரம்பக் கல்வி கற்று, முசிறியில் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் தனிப் பெண்பிள்ளையாக உயர்கல்வி கற்றார். திருச்சியில் ஹோலிக்ராஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பு என்று முடித்து சென்னை ஸ்டான்லி கல்லூரியில் மருத்துவப் படிப்பில் நுழையும் வரை திரிபுரசுந்தரிக்கு பொருளாதாரப் பிரச்னை அவ்வளவாகப் பாதிக்கவில்லை.
எழுத்தாளராக
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போர் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதாரப் பின்னடைவு திரிபுரசுந்தரியின் குடும்பத்தில் தீவிரமாகவே பாதிப்பினை ஏற்படுத்தியது. தந்தையார் சீனிவாசன் தன் மகளிடம் படிப்பு தொடர்வதற்குப் பண உதவி செய்ய இயலாமையை விளக்கி அவரை ஊருக்குத் திரும்பும் படி வலியுறுத்தினார்.
ஆனால் திரிபுர சுந்தரிக்கு தன் படிப்பினைப் பாதியில் விட மனமில்லை. ஏதோ துணிவில் ஆனந்த விகடன் நிர்வாக ஆசிரியர் வாசனைச் சந்தித்து தன் நிலைமையை விளக்கி தன் படிப்பு தொடர உதவும் படி வேண்டினார். அவர் எழுதித் தரும் கதைகளை ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்ந்து வெளியிட்டு பண உதவி செய்வதாக வாசன் தந்த உறுதிமொழியில் ஊக்கம் அடைந்தவராக தன் முதல் சிறுகதையான “தகுந்த தண்டனையா?” என்கிற சிறுகதையை எழுதி விகடனுக்குத் தந்து தன் எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கினார்.
விகடனும் லக்ஷ்மியும்
கல்லூரி மாணவியாக இருந்ததாலும் சக மாணவர்களின் கேலியைத் தவிர்க்க எண்ணியதாலும் லக்ஷ்மி என்கிற புனைபெயரிலேயே எழுத ஆரம்பித்த திரிபுரசுந்தரி தன் படிப்பு முடியும் முன்பாகவே தொடர்கதைகள் வரை எழுத ஆரம்பித்தார். இவருடைய படிப்பு தொடரவேண்டும் என்பதற்காக வாசன் அளித்த ஆதரவு மிகவும் உயரியது. மாதத்திற்கு மூன்று சிறுகதைகள் மூலம் (அவை வெளிவந்தாலும் வராவிட்டாலும்) இவருக்குப் பணம் கிடைக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டார் அவர். தொடர்ந்து பணம் கிடைக்கும் வசதிக்காகத் தான் தொடர்கதையே எழுதினார் லக்ஷ்மி. இவருடைய முதல் தொடர்கதை “பவானி”.
இவருடைய சிறுகதைகள் குடும்பப் பாங்குடனும், ஆபாசம் ஒருசிறிதும் இன்றியும், பெண்களின் பிரச்னைகளை மையப்படுத்தியும் இருந்ததால் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இவருக்குக் கிடைத்தது.
படிப்பு முடியும் முன்பே “பெண்மனம்” என்கிற இன்னொரு நாவலும் எழுதி அதில் கிடைத்த பணத்தைத் தன் இளைய சகோதரியின் திருமணத்துக்குக் கொடுத்து தன் குடும்பத்துக்கும் உதவிகரமாக விளங்கினார் லக்ஷ்மி.
தென் ஆப்பிரிக்காவில் திருமண வாழ்க்கை
லக்ஷ்மியின் மருத்துவப்படிப்பு முடிந்து அரசு மருத்துவராகப் பணியும் கிடைத்த பிறகு வாழ்க்கையின் பொருளாதாரப் பிரச்னைகள் முடிவுக்கு வந்தன. 1955-ல் கண்ணபிரான் என்பவருடன் திருமணம் ஆனது. இது காதல்மணம் என்பதுடன் கலப்பு மணமும் கூட. தென்னாப்பிரிக்காவில் குடியுரிமை பெற்றுவிட்ட தஞ்சைப் பிள்ளை வகுப்பினைச் சேர்ந்த கண்ணபிரானை இலங்கையில் நடைபெற்ற ஓர் இலக்கிய விழாவில் சந்தித்துக் காதல் வயப்பட்டு பதிவுத் திருமணம் செய்து கொண்டார் லக்ஷ்மி. கண்ணபிரான் ஒரு முதுகலைப் பட்டதாரி. தென்னாப்பிரிக்காவில் பத்திரிகைத் துறையில் இருந்தவர். கணவருடன் தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணமானார் லக்ஷ்மி. அங்கேயும் அரசு மருத்துவராகப் பணி கிடைக்க பெருமகிழ்ச்சியுடன் சமூகப் பணியிலும் ஈடுபட்டார். இவர்களுக்கு மகேஸ்வரன் என்கிற மகன் பிறந்தார்.
மீண்டும் தமிழகம்
1968-ஆம் ஆண்டு கண்ணபிரான் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவிலேயே இருந்த லக்ஷ்மி 1977-ஆம் ஆண்டு தமிழகம் திரும்பினார்.
அதன்பிறகு 1987-ஆம் ஆண்டு மரணமடையும் வரை முழுநேர மருத்துவப் பணியில் ஈடுபடாமல், பகுதிநேர மருத்துவ ஆலோசகராகவும் முழுநேர எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ஏராளமாக எழுதிக் குவித்தார்.
படைப்புகள்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நெடுங்கதைகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.
லக்ஷ்மி, நூற்றி ஐம்பது நாவல்கள், எட்டு சிறுகதை தொகுதிகள், ஐந்து கட்டுரை தொகுதிகள் மற்றும் ஆறு மருத்துவ நூல்கள் எழுதியுள்ளார்.
நாவல்கள்
- அசோகமரம் பூக்கவில்லை
- அஞ்சனா புரிந்து கொண்டாள்
- அடுத்த வீடு
- அணைக்க ஒரு கரம் வேண்டும்
- அத்தை
- அதிசய ராகம்
- அந்திக்கால மோகம்
- அம்மா உனக்கு என்ன ஆச்சு?
- அம்மாவுக்கு கல்யாணம்
- அரக்கு மாளிகை
- அவள் ஒரு கரும்பூனை
- அவள் ஒரு தென்றல்
- அவள் தாயாகிறாள்
- அவளுக்கென்று ஒரு இடம்
- அவனும் ராமன்தான்
- அழகின் ஆராதனை
- அழகு என்னும் தெய்வம்
- அனிதாவுக்கு ரொம்ப துணிச்சல்
- இதோ ஓர் இதயம்
- இரண்டு பெண்கள்
- இரண்டாவது அம்மா
- இரண்டாவது மலர்
- இரண்டாவது தேனிலவு
- இருளில் தொலைந்த உண்மை
- இவளா என் மகள்
- இவனும் ஒரு பரசுராமன்
- இன்றும் நாளையும்
- இனிய உணர்வே என்னை கொல்லாதே
- உண்மை ஊமையல்ல
- உயர்வின் குரல்
- உயர்வு
- உயிரே ஓடி வா
- உரிமை உறங்குகிறது
- உனக்கு நான் எனக்கு நீ
- உன்னை விடவா ரம்யா
- உறவுகள் பிரிவதில்லை
- உறவு சொல்லிக் கொண்டு
- ஊர்வசி வந்தாள்
- ஊன்றுகோல்
- எங்கே அவள்
- என் பெயர் டி.ஜி. கார்த்திக்
- என் மனைவி
- என் வீடு
- ஒரு காவிரியைப் போல
- ஒரு சிவப்பு பச்சையாகிறது
- ஒற்றை நட்சத்திரம்
- கங்கையும் வந்தாள்
- கடைசிவரை
- கதவு திறந்தால்
- கணவன் அமைவதெல்லாம்
- கழுத்தில் விழுந்த மாலை
- காஞ்சனையின் கனவு
- காதலின் பிடியில்
- காதலெனும் புயல்
- காலம் முழுவதும் காத்திருப்பேன்
- காளியின் கண்கள்
- காஷ்மீர் கத்தி
- கூண்டுக்கு வெளியே
- கூண்டுக்குள்ளே ஒரு பைங்கிளி
- கூறாமல் சன்னியாசம்
- கைமாறியபோது
- கோடை மேகங்கள்
- கௌதம், உன்னை கோர்ட்டில்
- சசியின் கடிதங்கள்
- சாதாரண மனிதன்
- சீறினாள் சித்ரா
- சுகந்தி என்ன செய்வாள்
- சூரியகாந்தம்
- சொர்க்கத்தின் கதவுகள்
- திரும்பிப் பார்த்தால்
- துணை தேடும்போது
- தேடிக் கொண்டே இருப்பேன்
- தை பிறக்கட்டும்
- தோட்டத்து வீடு
- தொடுவானம் வரையில்
- நதி மூலம்
- நர்மதா ஏன் போகிறாள்
- நல்லதோர் வீணை
- நாயக்கர் மக்கள்
- நிகழ்ந்த கதைகள்
- நியாயங்கள் மாறும் போது
- நிற்க நேரமில்லை
- நீதிக்கு கைகள் நீளம்
- நீலப்புடவை
- பண்ணையார் மகள்
- பவளமல்லி
- பவானி
- பாதையில் கிடந்த ஒரு பனி மலர்
- புதைமணல்
- புலியின் பசி
- புனிதா ஒரு புதிர்
- பூக்குழி
- பெயர் சொல்ல மாட்டேன்
- பெண் மனம்
- பெண்ணின் பரிசு
- பெண்ணுக்கு என்ன வேண்டும்
- மங்களாவின் கணவன்
- மண் குதிரை
- மண்ணும் பெண்ணும்
- மரகதம்
- மருமகள்
- மறுபடியுமா?
- மன்னிப்பின் மறு பக்கம்
- மனம் ஒரு ரங்கராட்டினம்
- மாயமான்
- மாலதி ஓர் அதிர்ச்சி
- மிதிலா விலாஸ்
- மீண்டும் ஒரு சீதை
- மீண்டும் பிறந்தால்
- மீண்டும் பெண்மனம்
- மீண்டும் வசந்தம்
- முருகன் சிரித்தான்
- மேகலா
- மோகத்திரை
- மோகனா மோகனா
- மோகினி வந்தாள்
- ரங்கராட்டினம்
- ராதாவின் திருமணம்
- ராமராஜ்யம்
- ரோஜாவைரம்
- லட்சியவாதி
- வசந்தகால மேகம்
- வசந்திக்கு வந்த ஆசை
- வடக்கே ஒரு சந்திப்பு
- வனிதா
- வானம்பாடிக்கு ஒரு விலங்கு
- வாழ நினைத்தால்
- விடியாத இரவு
- வீணா ஒரு வீணை
- வீரத்தேவன் கோட்டை
- வெளிச்சத்தை தேடி
- வெளிச்சம் வந்தது
- வெள்ளை நிறத்தில் ஒரு பூனை
- வேலி ஓரத்தில் ஒரு மலர்
- ஜெயந்தி வந்தாள்
- ஸ்ரீமதி மைதிலி
சிறுகதைகள்
- அவள் வேதாந்தம்
- இழந்தது யார்?
- எல்லைக் காளியின் கோபம்
- கடந்த வருஷம்
- காதல் காதல் காதல்
- குழந்தைக்காக
- சித்தப்பாவின் சொத்து
- சித்தி
- சுசிலாவின் தீர்மானம்
- தகுந்த தண்டனையா
- தேவகியின் கணவன்
- நல்ல காலம்
- நள்ளிரவில் ஒரு ரயில் நிலையத்தில்
- நியாயங்கள் மாறும்போது
- பாஞ்சாலியின் சபதம்
- முதல் வகுப்பு டிக்கெட்
- ரஞ்சிதத்தின் சஞ்சலம்
- வில் வண்டி
- விசித்திர பெண்கள்
கட்டுரை தொகுதி
- கதாசிரியையின் கதை - பாகம் 1
- கதாசிரியையின் கதை - பாகம் 2
- கையில் அள்ளிய மலர்கள்
- தென்னாப்பிரிக்காவில் பல ஆண்டுகள்
மருத்துவ நூல்கள்
- தாய்மை
விருதுகள்
- தமிழ் வளர்ச்சி கழகம் பரிசு, பெண்மனம் நாவலுக்காக
- தமிழ் வளர்ச்சி கழகம் பரிசு, மிதிலா விலாஸ் நாவலுக்காக
- இலங்கை தமிழ் மாநாட்டில் பரிசு, தாய்மை மருத்துவ நூலுக்காக
- சாகித்ய அகாடமி விருது, 1984, ஒரு காவிரியைப்போல நாவலுக்காக
உசாத்துணை
- விக்கிரமன் கட்டுரை, தினமணி
- எழுத்தாளர் லக்ஷ்மி - திவ்யா அன்புமணி, தினமணி
- நூற்றாண்டு காணும் படைப்பாளிகள் - லக்ஷ்மி வாதூலன் கட்டுரை
- லக்ஷ்மியின் நாவல் ஸ்ரீமதி மைதிலி - சொல்வனம்
- தகுந்த தண்டனையா? - குங்குமம் தோழி
- எழுத்தாளர் லக்ஷ்மி - மதுசூதனன் தெ.
- லக்ஷ்மி - நாட்டுடமையான எழுத்துக்கள்
- பசுபதி பக்கங்கள் லக்ஷ்மி
விருதுகள்
தமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த இவருடைய “ஒரு காவிரியைப் போல” என்கிற நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது.
சகோதரி
இவருடைய சகோதரி நித்யா மூர்த்தி என்பவரும் ஓர் எழுத்தாளரே. 1987 ஆம் ஆண்டு தேவி வார இதழில் “இரண்டாவது மலர்” என்கிற தொடர்கதையை எழுதிக் கொண்டிருந்த லட்சுமி அதனை முடிக்கும் முன்பே இறந்து விட அதனை எழுதி முடித்தவர் நித்யா மூர்த்தி.
வெளி இணைப்புகள்
- லக்ஷ்மி வாழ்க்கையிலும் எழுத்திலும் மருத்துவரே!, கலைமாமணி விக்கிரமன், தினமணி, செப்டம்பர் 18, 2011