யாழ்ப்பாண வைபவ விமரிசனம் (நூல்)
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்னும் நூல் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு முற்பட்ட அதன் வரலாற்றை ஆய்வு செய்யும் நூல் ஆகும். இந்த ஆராய்ச்சி நூலை எழுதியவர் சுவாமி ஞானப்பிரகாசர். இதன் முதற் பதிப்பு 1928 ஆம் ஆண்டில் அச்சுவேலியில் இருந்த ஞானப்பிரகாச யந்திரசாலையில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட சரித்திர முரண்பாடுகளை இந்த நூலில் எடுத்துக் காட்டினார்.
யாழ்ப்பாண வைபவ விமரிசனம் | |
---|---|
நூல் பெயர்: | யாழ்ப்பாண வைபவ விமரிசனம் |
ஆசிரியர்(கள்): | சுவாமி ஞானப்பிரகாசர் |
வகை: | வரலாறு |
துறை: | யாழ்ப்பாண வரலாறு |
காலம்: | யாழ்ப்பாண இராச்சியக்காலம் |
இடம்: | யாழ்ப்பாணம் |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 172 (எ.ஏ.சே. பதிப்பு) |
பதிப்பகர்: | ஞானப்பிரகாச யந்திரசாலை (முதற் பதிப்பு), ஏஷியன் எஜுகேஷனல் சேர்விசஸ் (இரண்டாம் பதிப்பு) |
பதிப்பு: | 1928, 2003 |
சன்மார்க்கபோதினி பத்திரிகைகளில் அவ்வப்போது பாகம் பாகமாய் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இச்சிறு நூல் வெளியிடப்பட்டது.
நோக்கம்
இதன் நூலாசிரியர் நூலின் முதற்பதிப்புக்கான முன்னுரையில், "இச்சிறுநூல் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆதிகால உண்மைச் சரித்திர ஆராய்ச்சியையும், யாழ்ப்பாண வைபவமாலை எனும் பெரிய நூலின் உள்ளுறை ஆராய்ச்சியையும் கையாளுவது"[1] என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து, ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிக்காலத்தில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலை என்னும் நூலைப் பிற்காலத்தில் கிடைத்த சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு செய்து உண்மை வரலாற்றை அறிவதே இந்த நூலின் நோக்கம் என்பது புலனாகிறது.
வைபவமாலை, அக்காலத்தில் இருந்த சில நூல்களையும், செவிவழிக்கதைகளையும் சான்றுகளாகக் கொண்டு, யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ச்சியடைந்து ஏறத்தாழ 175 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியத்தில் போர்த்துக்கேயர் தலையீடு ஏற்பட்டதற்குப் பிந்திய வைபவமாலை தரும் வரலாறு செவிவழிக்கதைகளை ஆதாரமாகக் கொண்டது எனவும் அதனால் இக்காலம் குறித்த வைபவமாலையின் வரலாறு பிற்காலத்தில் அறியப்பட்ட போர்த்துக்கேயர் காலக் குறிப்புக்களுடன் முரண்படுவதாகவும் சுவாமி ஞானப்பிரகாசர் கருதுகிறார்.[2] இதனால், இந்த நூல் எழுதிய காலத்தில் கிடைத்த போர்த்துக்கேயர் காலத்துத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்தின் உண்மை வரலாற்றை அறிய நூலாசிரியர் முயன்றுள்ளார்.
உள்ளடக்கம்
இந்த நூலிலே ஆரம்ப அதிகாரம் என்று பெயர் கொண்ட அதிகாரத்தில் வைபவமாலையில் கூறப்பட்டுள்ளனவும், யாழ்ப்பாண இராச்சியத்துக்கு முற்பட்ட காலத்தில் நிகழ்ந்தனவுமாகச் சொல்லப்படும் கதைகளை, வைபவமாலையின் முதனூல்களில் சொல்லப்படவற்றோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இதைத் தவிர்த்து யாழ்ப்பாண வைபவ விமரிசனத்தில் 15 அத்தியாயங்கள் உள்ளன. இவை பின்வருமாறு:[3]
- பண்டைநாள் வரலாறு
- தமிழ் அரசு ஏற்பாடு
- விசயகூழங்கை (காலிங்க) ஆரியச் சக்கரவர்த்தி கி.பி. 1242
- "இராசமுறை"
- செகராசசேகரன் V
- அளகேஸ்வரன் கையிற் தோல்வி
- செண்பகப் பெருமாள் 1450 - 1467
- பரராசசேகரன் VI 1478 - 1519
- சங்கிலி என்னும் 7ம் செகராச சேகரன் 1519 - 1561
- பறங்கிப் படையெழுச்சி 1560
- போத்துக்கேய மேலாட்சி 1561 - 1590
- யாழ்ப்பாணத்தில் இரண்டாம் படையேற்றம் 1591
- எதிர்மன்னசிங்க குமாரனாகும் 8ம் பரராச சேகரன் 1591 - 1616
- சங்கிலி குமாரனின் தவறுகள் 1616 - 1620
- பயனில்லாப் போராட்டங்கள் 1620 - 1624