ம. மு. உவைஸ்
பேராசிரியர் ம. முகம்மது உவைஸ் (M. M. Uwise, சனவரி 15, 1922 - மார்ச் 25, 1996) இலங்கையின் குறிப்பிடத்தக்க இசுலாமியத் தமிழறிஞர்களுள் ஒருவர்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ம. மு. உவைஸ் |
---|---|
பிறந்ததிகதி | சனவரி 15, 1922 |
பிறந்தஇடம் | கொறக்கானை |
இறப்பு | 25 மார்ச்சு 1996 | (அகவை 74)
தேசியம் | இலங்கை |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | ♂மகுமூது லெப்பை, ♀சைனம்பு நாச்சியார் |
வாழ்க்கைக் குறிப்பு
ம.மு. உவைஸ் 1922ம் ஆண்டு பாணந்துறையில் உள்ள கொறக்கானை எனும் சிற்றூரில் மகுமூது லெப்பை, சைனம்பு நாச்சியார் ஆகியோருக்கு ஒரே மகனாகப் பிறந்தார்.
ஆரம்பக் கல்வி
பாணந்துறைப் பகுதியில் தமிழ்க் கல்விக்கு இடமில்லாமல் சிங்களமும், ஆங்கிலமும் ஆக்கிரமித்திருந்த சூழலில், உவைசின் தந்தையார் மகுமுது லெப்பை ஒரு தமிழ்ப் பாடசாலையை உருவாக்க ஆர்வப்பட்டு, ஒரு சிறு தமிழ் அறிவுக்கூடம் அமைக்க, அதில் கார்த்திகேசு என்ற பெயருடைய இருவர் முக்கிய அங்கமாகினர். இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியின் தந்தையார். இவர்களுடன் பண்டிதர் கந்தையா, செல்லையா ஆகியோரும் ஆரம்பக் கல்வியை வழங்கினர். தமிழ்க் கல்வியைத் தொடர்ந்து உவைஸ் ஹேனமுல்ல அரசினர் முஸ்லிம் பாடசாலையில் கற்றார். ஆங்கிலக் கல்வியை சரிக்கமுல்லையில் அமைந்திருந்த தக்சலா வித்தியாலயத்தில் பயின்றார். அதே வித்தியாலயத்தில் சிங்களத்தையும் பாளியையும் பயின்றார். தொடர்ந்து பாணந்துறை அர்ச். யோவான் கல்லூரியில் சேர்ந்து உயர்தரப் படிப்பை முடித்து 1946 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
பல்கலைக்கழகப் படிப்பு
பல்கலைக்கழகத்தில் சேரும் வரை தமிழை ஒரு பாடமாக படிக்கும் வாய்ப்பை பெறவில்லை. 1945ம் ஆண்டில் பல்கலைக்கழக நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு கிடைத்தது. நேர்முகத் தேர்வுக்குழுவில் சுவாமி விபுலாநந்தர் ஓர் உறுப்பினராக இருந்தார். நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட உவைசிடம் விபுலானந்தர் இசுலாமிய அடிப்படையில் தோன்றிய ஒரு காப்பியத்தைக் குறிப்பிடும்படி கேட்டார். உவைசுக்குப் பதிலளிக்க முடியவில்லை. சீறாப்புராணத்தைப் பற்றி விபுலானந்த அடிகள் கூறியது, உவைசுக்கு இசுலாமியத் தமிழ் இலக்கியத் தேடலுக்கு வித்திடும் சாவலாக மாறியது[1]. பல்கலைக்கழக விதிமுறைகளின் மாற்றத்துக்கேற்ப பல்கலைக்கழக அனுமதி உவைசுக்குக் கிடைத்தது. தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்க வேண்டும் என்று சுவாமி விபுலாநந்தரின் வேண்டுகோளுக்கிணங்கத் தமிழைச் சிறப்புப் பாடமாகவும் சிங்களத்தை உப பாடமாகவும் கற்றார். விபுலானந்தரின் மறைவைத் தொடர்ந்து பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் உதவியுடன் முதுமாணிப் பட்டமும் பெற்றார். "தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு" என்பது இவரது முதுகலைமாணிப்பட்ட ஆய்வேடு ஆகும்.
தமிழ்ப் புலமை
1968 இல் சென்னையில் இடம்பெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழ் இலக்கியத்தில் உள்ள முஸ்லிம் இலக்கிய வடிவங்கள் எனும் ஆங்கிலக் கட்டுரையை வாசித்தார். இதனைத் தொடர்ந்து திருச்சியில் இடம்பெற்ற முதலாவது இசுலாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பேராசிரியர் பொன்னாடைப் போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
பல கட்டுரைகளின் தொகுப்பான “இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம்” என்ற நூலை 1974இல் சென்னையில் இடம்பெற்ற இரண்டாவது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் வெளியிட்டார். இத்துடன், இம்மாநாட்டில் முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் பயன்படும் செந்தமிழ்ச் சொற்கள் என்ற கட்டுரையையும் சமர்ப்பித்தார்.
நான்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்து கொண்டதுடன் கொழும்பில் நடைபெற்ற நான்காவது இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தலைமை தாங்கி நடத்தினார். இதில் அறிஞர்களின் ஆக்கங்கள் அடங்கிய பிறைக் கொழுந்து என்ற நூலையும் வெளியிட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக உமறுப்புலவர் இருக்கை உருவாக்கப்பட்டது. அவ்விருக்கைக்கு இணைப் பேராசிரியராக பேராசிரியர் உவைஸ் நியமிக்கப்பட்டார்.
எழுதிய நூல்கள்
- இஸ்லாமும் இன்பத்தமிழும்
- இஸ்லாமியத் தென்றல்
- நம்பிக்கை
- ஞானசெல்வர் குணங்குடியார்
- நீதியும் நியாயமும்
- நெஞ்சில் நிறைந்த சுற்றுலா (பயணக் கட்டுரை)
- இஸ்லாம் வளர்த்த தமிழ்
- தமிழ் இலக்கியம்
- அரபுச் சொல் அகராதி
இவற்றுடன்
- இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு
- இஸ்லாமியத் தமிழ் காப்பியங்களின் வரலாறு
- இஸ்லாமியத் தமிழ் சிற்றிலக்கியங்களின் வரலாறு
- சூபி மெய்ஞ்ஞானிகளின் வரலாறு
- அறபுத் தமிழ் இலக்கிய பற்றிய வரலாறு
- இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய வசன நூல்கள்
- தற்கால கவிதை நூல்கள் என ஆறு தொகுதிகளாக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினை முனைவர் பீ.மு. அஜ்மல்கானுடன் இணைந்து எழுதினார்.
மொழிபெயர்ப்புகள்
- டி. என். தேவராஜனின் வணிக எண்கணிதம் எனும் தமிழ் நூலை வணிக அங்க கணிதய என சிங்களத்தில் மொழி பெயர்த்தார்.
- நபிகள் நாயகம், தித்திக்கும் திருமறை என்பன இவரால் தமிழில் இருந்து சிங்களத்திற்கு முறையே நபிநாயக சரிதய, அல்குர்ஆன் அமாபிந்து என மொழிபெயர்த்திருக்கிறார்.
- மார்ட்டின் விக்கிரமசிங்கவின் கம்பெரலிய என்ற புதினத்தை கிராமப் பிறழ்வு என மொழிபெயர்த்திருக்கிறார்.
மேற்கோள்கள்
- ↑ இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ் பரணிடப்பட்டது 2012-03-27 at the வந்தவழி இயந்திரம், தினகரன், மார்ச்சு 25, 2012.
- இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒளிவிளக்கு பேராசிரியர் உவைஸ், தினகரன், மார்ச்சு 30, 2011
- இலங்கைக் "கலாநிதி' ம.மு.உவைஸ்!, மானா மக்கீன், தினமணி, சூலை 1, 2012