மு. சிவசிதம்பரம்
மு. சிவசிதம்பரம் எனப் பொதுவாக அறியப்பட்ட முருகேசு சிவசிதம்பரம் (சூலை 20, 1923 - சூன் 5, 2002) இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர். நீண்டகாலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார். நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் 1968 முதல் 1970 வரை பணியாற்றினார்.
மு. சிவசிதம்பரம் M. Sivasithamparam | |
---|---|
படிமம்:Murugesu Sivasithamparam.jpg | |
இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகர் | |
பதவியில் 8 மார்ச் 1968 – 25 மார்ச் 1970 | |
முன்னையவர் | ராசிக் பரீத் |
பின்னவர் | ஐ. ஏ. காதர் |
தலைவர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி | |
பதவியில் 1989–2002 | |
முன்னையவர் | அ. அமிர்தலிங்கம் |
பின்னவர் | வீ. ஆனந்தசங்கரி |
தலைவர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி | |
பதவியில் 1978–2002 | |
பின்னவர் | வீ. ஆனந்தசங்கரி |
இலங்கை நாடாளுமன்றம் for உடுப்பிட்டி | |
பதவியில் 1960–1970 | |
பின்னவர் | கே. ஜெயக்கொடி, இதக |
இலங்கை நாடாளுமன்றம் for நல்லூர் | |
பதவியில் 1977–1983 | |
முன்னையவர் | சி. அருளம்பலம், அஇதகா |
இலங்கை நாடாளுமன்றம் for நாடாளுமன்ற உறுப்பினர், தேசியப் பட்டியல் | |
பதவியில் 2001–2002 | |
பின்னவர் | கே. துரைரத்தினசிங்கம், ததேகூ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கரவெட்டி, இலங்கை | சூலை 20, 1923
இறப்பு | சூன் 5, 2002 கொழும்பு, இலங்கை | (அகவை 78)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
முன்னாள் கல்லூரி | கரவெட்டி விக்னேசுவரா கல்லூரி புனித யோசேப்பு கல்லூரி, கொழும்பு இலங்கப் பல்கலைக்கழகக் கல்லூரி இலங்கை சட்டக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
வாழ்க்கைச் சுருக்கம்
இவர் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள கரவெட்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர். கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியின் நிறுவனர் சித்தமணியம் என்ற இராசவாச முதலியார் மகன் முருகேசு உடையாரின் ஒரே மகன் சிவசிதம்பரம். கரவெட்டி சரசுவதி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற சிவசிதம்பரம், விக்னேசுவரா கல்லூரியில் மெட்ரிக்குலேசன் வரை பயின்று சித்தியடைந்தார்.
அரசியலில் ஈடுபாடு
கரவெட்டியைச் சேர்ந்த பிரபல பொதுவுடமைவாதியான பொன். கந்தையாவினால் கவரப்பட்ட இவர், இளமைக் காலத்தில் பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்டிருந்தார். இலங்கை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற இவர் விரைவிலேயே பொதுவுடமைக் கருத்துக்களைக் கைவிட்டுத் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.
1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இவர் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார். இவரது நேரடியான அரசியல் ஈடுபாடு 1956 ஆம் ஆண்டில் தொடங்கியது. அவ்வாண்டில் இடம் பெற்ற தேர்தலில், ஜி. ஜி. பொன்னம்பலத்தின் தலைமையில் இயங்கிய தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், பருத்தித்துறைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அத்தேர்தலில் தனது முன்னாள் தலைவரான பொன். கந்தையாவை எதிர்த்துப் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். பின்னர் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்த சிவசிதம்பரம் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
தேர்தல் வெற்றி
1960 இல் நடைபெற்ற தேர்தலுக்கு முன் பருத்தித்துறைத் தொகுதி, பருத்தித்துறை, உடுப்பிட்டி என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. சிவசிதம்பரம் தனது பிறந்த ஊரை உள்ளடக்கியிருந்த உடுப்பிட்டித் தொகுதியில், தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அந்த ஆண்டிலேயே இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வந்தபோது, முன்னரிலும் அதிக வாக்குகள் பெற்று சிவசிதம்பரம் வென்றார். அக்காலத்தில், தமிழ்க் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஒரே உறுப்பினர் இவரே. எனினும், இவரது ஆளுமையும், பேச்சுத் திறனும் தமிழ் மக்களின் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இவரை இனம்காட்டின. அப்போது தமிழ்ப் பகுதிகளில் மக்களின் பேராதரவைப் பெற்று நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்களைக் கொண்டிருந்தது தமிழரசுக் கட்சியாகும். 1961 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் தமிழர் விரோதக் கொள்கைகளை எதித்து தமிழரசுக் கட்சி அறவழிப் போராட்டம் நடத்தியபோது கட்சி வேறுபாடுகளை மறந்து சிவசிதம்பரமும் அப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் மாற்றுக் கட்சியினர் மத்தியிலும் இவருக்கு மதிப்பு இருந்தது. 1965 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்ற இவர் அப்போதைய நாடாளுமன்றத்தில் துணைச் சபாநாயகராகவும் பணியாற்றினார்.
தேர்தல் தோல்வி
1970 இல் நடைபெற்ற தேர்தலில் இவர் தமிழரசுக் கட்சி வேட்பாளரிடம் சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்தார். இவர் நாடாளுமன்றத்தில் இல்லாத இக் காலத்திலேயே இலங்கை அரசியலில், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. இலங்கையில் தமிழ் மக்களுடைய உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வந்த அக் காலத்தில், இலங்கைத் தமிழர் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தித் தமிழர் கூட்டணி என்னும் அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்களில் சிவசிதம்பரமும் ஒருவர்.
மிதவாதத்தின் வீழ்ச்சி
1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஒன்றுபட்ட தமிழ்க் கட்சிகள் அரசாங்க ஆதரவு வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டுப் பெரு வெற்றி பெற்றன. நல்லூர்த் தொகுதியில் போட்டியிட்ட சிவசிதம்பரம் முழுநாட்டிலுமே அதிகப்படியான வாக்குகளால் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார். ஜீ. ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோர் காலமான பின்னர் தமிழர் கூட்டணியின் தலைமைப் பதவியை இவர் ஏற்றார். எனினும் தமிழர் அரசியலில் தீவிரவாதப் போக்கு வலுவடைந்து வந்ததால் மக்கள் மத்தியில் சிவசிதம்பரம் போன்ற மிதவாதிகளில் செல்வாக்குக் குறைய ஆரம்பித்தது. எனினும் அவ்வப்போது சிவசிதம்பரத்தின் பணி தொடர்ந்தே வந்தது. 2001 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நியமன உறுப்பினராக இவர் நாடாளுமன்றம் சென்றார். இவர் 05.06.2002 இல் காலமானார்.