முதல் நிலை
முதல் நிலை என்பது மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துகள் எவையெவை எனக் கூறும் நன்னூலின் எழுத்தியலின் பகுதியாகும்.
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ , ங என்னும் பத்து உயிர் ஏறிய மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும். [1]
எடுத்துக்காட்டுகள்
மொழியின் முதலில் பன்னிரண்டு உயிரெழுத்துகள்
அன்பு, ஆடு, இலை, ஈகை, உலகம், ஊஞ்சல், எல்லை, ஏடு, ஐயம், ஒன்று, ஓடு, ஔவை.
மொழியின் முதலில் பன்னிரு உயிர் ஏறிய மெய்யெழுத்துக்கள்
- மொழியின் முதலில் ‘க்’
கயல், காவல், கிழக்கு, கீரி, குருவி, கூட்டம், கெடுதல், கேள்வி, கை, கொடுத்தல், கோயில், கௌவை.
- மொழியின் முதலில் ‘ச்’
சந்திப்பு, சார்பு, சிலை, சீர், சுற்றம், சூடு, செயல், சேவை, சைவம், சொல், சோதனை, சௌகரியம்
- மொழியின் முதலில் 'த்'
தங்கம், தாமரை, திசை, தீமை, துன்பம், தூய்மை, தெளிவு, தேற்றம், தையல், தொகை, தோடு, தௌவை.
- மொழியின் முதலில் 'ந்'
நன்மை, நாடு, நிலம், நீர், நுங்கு, நூல், நெகிழி, நேயம், நைகை, நொய்யன, நோய், நௌவி.
- மொழியின் முதலில் 'ப்'
பட்டம், பார்வை, பிடி, பீர்க்கு, புல், பூனை, பெட்டி, பேய், பை, பொருள், போர், பௌவம்.
- மொழியின் முதலில் 'ம்'
மண், மாலை, மின், மீன், முதல், மூன்று, மென்மை, மேடு, மையம், மொட்டை, மோதிரம், மௌவல்.
அடுத்துக் கூறப்பட்டுள்ள வ், ய், ஞ், ங் ஆகிய நான்கு மெய்யெழுத்துகளும் உயிர் எழுத்துகள் பன்னிரண்டுடனும் சேர்ந்து பொதுவாக மொழிக்கு முதலில் வராது. ஆனால், அவை மொழிக்கு முதலில் சில உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வரக்கூடிய இடங்களை நன்னூல் சுட்டிக்காட்டுகிறது.
- மொழிக்கு முதலில் ’வ்’
உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கு எழுத்துகள் அல்லாத மற்ற எட்டு உயிர் எழுத்துகளோடு சேர்ந்து ’வ்’ மொழிக்கு முதலில் வரும்.[2]
எடுத்துக்காட்டு:
வளி, வாழ்க்கை, விழு, வீடு, வெளிச்சம், வேதியியல், வைகை, வௌவுதல்
- மொழிக்கு முதலில் ’ய்’
அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ ஆகிய ஆறு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து ’ய்’ என்னும் மெய்யெழுத்து மொழிக்கு முதலில் வரும்.[3]
எடுத்துக்காட்டு:
யவனராணி, யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.
- மொழிக்கு முதலில் ’ஞ்’
அ, ஆ, எ, ஒ என்ற நான்கு உயிர்களுடன் சேர்ந்து ’ஞ்’ மொழிக்கு முதலில் வரும்.[4]
- எடுத்துக்காட்டு
ஞமலி, ஞாயிறு, ஞெகிழி, ஞொள்கிற்று
- மொழிக்கு முதலில் ’ங்’
அ, இ, உ என்னும் சுட்டு எழுத்துகளைத் தொடர்ந்தும் எ, யா என்னும் வினா எழுத்துகளைத் தொடர்ந்தும், அகரத்தை ஒட்டியும் ’ங்’ என்னும் மெய் மொழிக்கு முதலில் வரும். [5]
- எடுத்துக்காட்டு
அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம்