மனுதரும சாத்திரம்
மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.[1] இந்நூல் மீண்டும் 1882-இல் ஜார்ஜ் புஃலர் என்பவர் ஆங்கில மொழியில் வெளியிட்டார்.[2] இந்நூலை திருலோக சீதாராம் என்பவர் தமிழ் மொழியில் பெயர்த்துள்ளார்.
இது தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது[சான்று தேவை]. இந்து தத்துவத்தினுள் சாதியம் சார்ந்த கருத்துக்களையும் பெண்களை மிக இழிவாகவும் போகப் பொருளாகவும் வலியுறுத்தும் மேட்டுக்குடியினரின் உத்தியாக இதனை விமர்சிப்பவர்களும் உள்ளனர்.
இந்நூலுக்கு மானவ தர்ம சாஸ்திரம் (சமசுகிருதம்:मानवधर्मशास्त्र) என்ற பெயரும் உள்ளது. அதற்கு மானுட அறம் என்பது பொருளாகும்.
மனுவின் காலமும் வாழ்ந்த பகுதியும்
மனு வாழ்ந்த காலம் பொ.ஊ.மு. 1500 என்பதை சதபத பிராமணத்திலும், சௌராஷ்ட்டிர மத வேதநூலான அவெத்தாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேத கால ஆறுகளான சரசுவதி ஆறு மற்றும் திருட்டாதுவதி நதிக்கரை பகுதிகளான பிரம்மவர்த்த பகுதிகள் (தற்கால சிந்து மாகாணம், பஞ்சாப், வடக்கு இராஜஸ்தான் மற்றும் தெற்கு அரியானா) பெருமழையால் அழிந்த பின்பு ஆரியர்கள், விந்திய மலைக்கு வடக்குப் பகுதிகளில் (தற்கால நேபாளம், உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், வங்காளம், குசராத் மற்றும் கிழக்கு இராஜஸ்தான்) குடியேறினர். அப்பகுதி பின்பு ஆரியவர்த்தம் எனற பெயரால் அழைக்கப் பெற்றது. அப்போது மற்ற முனிவர்கள் சுவாயம்பு மனுவையும் அணுகி இயற்கைச் சீற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் சமூக வாழ்க்கை நெறி முறைகளை எவ்வாறு மக்கள் வகுத்துக் கொண்டு வாழ்வது என்று கேட்டதற்கு, மாமுனி மனு வகுத்துக் கொடுத்ததே மனுஸ்மிருதி ஆகும்.
சிறப்பம்சங்கள்
பிரித்தானிய இந்தியா ஆட்சி வரை "மனு தர்ம சாத்திரம்" என்பது இந்து மதத்திற்கு ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் பின்பற்றி வருவதுமாக இருந்தது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய குடியுரிமை சட்டங்கள் இயற்றுவதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட இசுலாமியர்களும் பிரித்தாணியர்களும் இந்து மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும், குடி உரிமை வழக்குகளிலும் மனு தரும சாத்திரத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கினர்.[சான்று தேவை] மேலும் இந்நூலை பின்பற்றி சந்திரகுப்த மௌரியரின் தலைமை அமைச்சர் கௌடில்யர் என்ற சாணக்கியர், அர்த்தசாஸ்திரம் என்ற அரசு நிர்வாகம் தொடர்பான நூலை எழுதி புகழ் பெற்றார்.
தாக்கங்கள்
மனு தர்ம சாத்திரத்தின் தாக்கம் இந்தியா முழுவதும் காணக் கிடைக்கிறது[சான்று தேவை]. சங்க கால அரசர்கள் பின்பற்றி வந்த வாழ்க்கை முறை, இந்த மனு தர்மத்தின் அடிப்படையில் தான் அமைந்தது[சான்று தேவை].
உள்ளடக்கம்
பரம் பொருளாகிய பகவான் தமது விருப்பத்தின் காரணமாக பிரம்மா மூலம் அண்ட சராசரங்களை படைத்தார். மனித குலத்தை பெருக்கவே மரிசி, ஆங்கிரசர், அத்திரி, புலத்தியர், புலகர், கிருது, பிரசேதகர், வசிட்டன், பிருகு மற்றும் நாரதர் எனும் பத்து பிரசாபதிகளை படைத்தார். இந்த பிரசாபதிகள் மூலம் சுவாயம்பு மனு உட்பட எழு மனுக்களும், தேவர்கள், சுவர்க்கலோகம், மாமுனிகள், யட்சர்கள், காந்தர்வர்கள், கிண்ணரர்கள், கிம்புருடர்கள், அசுவனிகுமாரர்கள், அட்டதிக்கு பாலகர்கள், அசுரர்கள், அப்சரசுகள், மருத்துக்கள், இராக்கதர்கள், பைசாசர்கள், நாகர்கள், கருடர்கள், சர்ப்பங்கள், பிதுர்கள், தாவரங்கள், விலங்கினங்கள், நீர் வாழ் பிராணிகள் தோன்றின. பின்னர் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க சமூகம் கட்டுக்கோப்பாக இயங்க வர்ண மற்றும் ஆசிரம தருமங்களை மனு வகுத்து கொடுத்தார். இது ஆசாரப்பகுதி, விவகாரப்பகுதி, பிராயச்சித்தப் பகுதி என மூன்று பகுதிகளையும் 12 அத்தியாங்களையும் கொண்டது.
1வது அத்தியாயம்
உலகத் தோற்றம்:-அண்ட சராசரங்களின் தோற்றம், தேவர்கள்,மானிடர்கள், அசுரர்கள், தோற்றம் , காலக்கணக்கீடு, நால்வகை வர்ண சமூகம், நால்வகை ஆசிரமம் மற்றும் அதன் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விவரிக்கிறது.
2வது அத்தியாயம்
பிரம்மச்சர்யம்:- பூணுல் அணிதல் (உபநயனம்), குருபக்தி, வேதம் படித்தல், வழிபாட்டு முறைகள் மற்றும் குருகுல நிலை பற்றி விவரிக்கிறது.
3-5 அத்தியாயங்கள்
அந்தணர் தருமம்:-இல்லறத்தின் மேன்மைகள், திருமண உறவுகள், யக்ஞம், விருந்தோம்பல், பலியிடுதல், இறந்த முன்னேர்களுக்கு செய்ய வேண்டிய பிதுர் கடன்கள், தகாத உறவுகள், கலப்புத் திருமணங்கள், விலக்க வேண்டியவைகள், வேதம் ஒதுதல், ஒதுவித்தல், ஒழுக்க நெறிகள், உணவு முறைகள், தூய்மை, பெண்டிர் தொடர்பான விதிகள், உண்ணத்தக்கவை, தகாதவைகள், விசேட காலங்களில் புலால் உண்ணல், பிறப்பு-இறப்பு தீட்டு விதிகள், பெண்களுக்கு உகந்தவைகளும், விலக்கத்தக்கவைகளும் தொடர்பான விதிகள்.
6வது அத்தியாயம்
வானப்பிரத்தம் & துறவறம்:-காட்டில் வாழ்தல், உணவு முறைகள் ,ஒழுக்க விதிகள், செபம்,தவம் செய்தல்,வேத வேதாந்த விசாரம் செய்தல் தொடர்பான விதி முறைகள்.
7வது அத்தியாயம்
சத்திரிய தருமம்:-மன்னர்களின் மாண்புகள் & பண்புகள், கடமைகளும் பொறுப்புகளும்,அரசின் நீதிநெறி சட்டங்கள்,அரசியல் சிந்தனைகள்,அரசின் அதிகாரிகள், தலைநகரம், போர் அறம், உள்நாட்டு நிர்வாகம்,வரி விதித்தல், பகை அரசர்களின் பலம் பலவீனம் அறிதல், பகை நாட்டை முற்றுகையிடல், போர் செய்யும் முறைகள், வெற்றி வாகை சூடல், புலவர்களுக்கு பரிசு வழுங்குதல், வேதம் அறிந்த அந்தனர்களுக்கு தானம் வ்ழங்குதல், வேள்விகள் செய்தல், சமூகத்தில் வர்ணாசிரம தரும நெறிகள் காத்தல் பற்றி விவரிக்கிறது.
8வது அத்தியாயம்
நீதிநெறிசட்டங்கள்:-குடிவகுப்பு, நீதிமன்றம், உடைமைகள், புதையல், களவுகள், கடன்கள், வட்டி, கொதுவை, காப்பு பொருள், பொருள் விற்பனை, பொருள் விற்பனை விலை நிர்ணயம்,அடிதடி கலவரம், பலாத்காரம், நிலத்தகராறு, நட்ட ஈடு,மான-நட்ட ஈடு, உடன்படிக்கைகள், நம்பிக்கை துரோகம், செய்கூலி, கலப்படம் தகாத செயல்கள் பற்றி விவரிக்கிறது.
9வதுஅத்தியாயம்
வைசியர், ஆடவர் & பெண்டிர் அறம்:-திருமணம்,மகப்பேறு,பாகப்பிரிவினை,கவறாடல் முதலிய குற்றங்களுக்கு தண்டனைகள் மற்றும் வைசியர்களின் கடமைகள் பற்றி விவரிக்கிறது.
10வது அத்தியாய ம்
சூத்திரர் & வர்ண கலப்பு சாதிகள் மற்றும் ஆபத்து தர்மம்:-சூத்திரர்களின் கடமைகள், கலப்பு சாதிகளின் தோற்றமும் சமூகத்தில் அவர்களுக்குரிய தகுதிகளும், கல்வி ஞானத்தால் கீழ்ப்பிறப்பாளர்கள் உயர்நிலை அடைதல், ஆபத்து காலங்களில் உயர்குடி மக்களுக்கு விதி விலக்குகள் தொடர்பான விதிகள் பற்றி விவரிக்கிறது.
11வது அத்தியாயம்
குற்றங்களும் அதற்கான கழுவாய்களும் :- தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றங்களுக்கு செய்ய வேண்டிய கழுவாய்கள், யாகம், பாவங்களின் விளைவுகள், குற்ற வகைகள், உண்ணத்தகாதவைகள், மறுபிறப்பு, முக்குணங்கள் பற்றி விளக்குகிறது.
12வது அத்தியாயம்
வினைப் பயன்கள்:- நல்வினை தீவினைகளும் அதன் விளைவுகளும், முக்குணங்கள், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களின் வாய்மை, ஆன்ம ஞானம், முக்திக்கு வழிகள் முதலியவைகளை விவரிக்கிறது.
மனுதரும சாத்திரமும் பெண்களும்
மனு தரும சாத்திரத்தில் பெண்களைப் பற்றி கூறப்பட்டுள்ளவற்றில் சில,
ஒரு பெண்ணை விபசாரி என்று குற்றம் சாட்டி அதை நிலைநாட்டாதவனுக்கு நூறு பணம் தண்டம்.
—மனு தரும சாத்திரம், அத்தியாயம் 8 செய்யுள் 225
ஒரு பெண் தான் பருவமெய்தியது முதல் மூன்றாண்டுகள் வரை தந்தை தன்னைத் தக்க ஆடவனுக்கு மணம் செய்விப்பானென்று எதிர்பார்த்திருக்க வேண்டியது. அப்படி நடைபெறாவிடில், தனக்கேற்றவனைத் தானே தேடிக்கொள்ளவும்.
—மனு தரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 90
இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 3
எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 147
தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 213
புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 214
பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக.
—மனுதரும சாத்திரம் 9, அத்தியாயம் செய்யுள் 19
ஈன்று, புரந்து, விருந்தோம்பி, இல்லம் புரிதற்கு மாதரே ஏற்றவர் என்பது காணக்கிடைக்கிறது.
—மனு தரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 27
வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க!
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 11
கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78
இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 154
மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 156