மணவை முஸ்தபா

மணவை முஸ்தபா (பிறப்பு 15 சூன் 1935 - இறப்பு 06 பிப்ரவரி 2017) அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அருப்பெரும் பணியாற்றிய தமிழ் அறிஞர். இவர் அறிவியல் தமிழ்த் தந்தை என்றும் அறியப்படுகிறார்.[1] அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். யுனெஸ்கோ கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தை நிறுவி அறிவியல் தமிழ் பணியை தொடர்ந்தவர்.[2]

மணவை முஸ்தபா
மணவை முஸ்தபா.jpg
அறிவியல் தமிழ் மன்றத் தலைவர்
பதவியில்
10 செப்டம்பர் 2006 – 30 சூன் 2009
முன்னவர் பதவி உருவாக்கம்
பின்வந்தவர் கா. வேழவேந்தன்
தனிநபர் தகவல்
பிறப்பு (1935-06-15)15 சூன் 1935
இளங்காகுறிச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு 6 பெப்ரவரி 2017(2017-02-06) (அகவை 81)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமை இந்தியர்
தேசியம் தமிழர்
வாழ்க்கை துணைவர்(கள்) சவுதா
பிள்ளைகள் அண்ணல்
செம்மல்
தேன்மொழி
பெற்றோர் மீராசா ராவுத்தர் (தந்தை)
பணி எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்

இவர் எழுதிய இசுலாமும் சமய நல்லிணக்கமும் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் எனும் நூல் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன. அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி நூல் அனந்தாச்சாரி ஃபௌண்டேஷன் ஆப் இந்தியாவின் முதற் பரிசு பெற்றது. கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது.

வாழ்க்கைக் குறிப்பு

1935 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15 ஆம் தேதி மீராசா ராவுத்தரின் மகனாகப் பிறந்தார் முஸ்தஃபா. திண்டுக்கல் அருகே உள்ள பிலாத்து என்ற சிறிய கிராமம் தான் இவரது சொந்த ஊர்.[3] இவர் மணப்பாறை அருகில் உள்ள இளங்காகுறிச்சியில் 15 சூன் 1935ஆம் நாள் பிறந்தார். இவருக்கு சவுதா என்கிற மனைவியும், அண்ணல், செம்மல் என்ற 2 மகன்களும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர்

ஆற்றிய பணிகள்

தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் - மாத இதழ்) ஆசிரியராக 4 ஆண்டுகள், யுனெஸ்கோ கூரியர் - பன்னாட்டு மாத இதழ் - ஆசிரியராக 35 ஆண்டுகள், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தலைமை பொறுப்பாசிரியர் - தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார். 1986 இல் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ‘அறிவியல் தொழில் நுட்பக் கருத்துப் பரிமாற்றம் பற்றிய 15 நாள் கருத்தரங்க மற்றும் பயிற்சி வல்லுநராக இருந்து நடத்தியுள்ளார். தொலைக்காட்சி தொடங்குமுன் தமிழ்நாடு அரசு அமைத்த தொலைக்காட்சி ஆலோசனைக் குழு மேனாள் உறுப்பினர் தொலைக்காட்சி விளம்பரதாரர் நிகழ்ச்சித் தேர்வாளராக பணியாற்றினார். 1965 முதல் எல்லா வகையான வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். தமிழ்நாடு பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராக பணியாற்றியிருந்தார். அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற ‘களஞ்சியம்’அறிவியல் இதழில் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை ஆலோசகராகவும், கௌரவ மாகாண மாஜிஸ்திரேட்டராக 1972 முதல் 1974 முடிய பணியாற்றினார்.

திரைப்படத் தணிக்கை குழு உறுப்பினராக 1977 முதல் 1986 முடிய பணியாற்றினார். நீண்ட நாள் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மீரா அற நிறுவனம்” தலைவராகவும், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகராகவும், 2006 - 2009 வரை தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். ‘அறிவியல் தமிழ் அறக்கட்டளையின்” தலைவராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினரகவும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சென்னை உறுப்பினராகவும் இருந்தார்.

எழுதிய நூல்கள்

  1. கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி
  2. கணினி களஞ்சிய பேரகராதி
  3. மருத்துவக் களஞ்சிய பேரகராதி
  4. செம்மொழி உள்ளும் புறமும்
  5. விழா தந்த விழிப்பு
  6. சிறுவர்க்கும் சுதந்திரம்
  7. தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்
  8. பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்
  9. அன்றாட வாழ்வில் அழகு தமிழ்
  10. இஸ்லாம் - ஆன்மீக மார்க்கமா? ஆறிவியல் மார்க்கமா?
  11. இளையர் அறிவியல் களஞ்சியம்
  12. காலம் தேடிய தமிழனின் அறிவியல் தமிழ் வரலாற
  13. அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்
  14. இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்
  15. அண்ணலாரும் அறிவியலும்
  16. அறிவியல் தமிழின் விடிவெள்ளி
  17. தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்
  18. சமண பௌத்த கிருஸ்துவ இஸ்லாமிய இலக்கியங்கள்
  19. இன்றைய தென்னக இலக்கியப் போக்கு
  20. அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி
  21. தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்
  22. மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்
  23. தெளிவு பிறந்தது
  24. சிந்தைக்கினிய சீறா
  25. இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்
  26. காலம் தேடும் தமிழ்
  27. திருப்புமுனை
  28. சிறுவர் கலைக்களஞ்சியம்
  29. மொழிபெயர்ப்பும் ஒலி பெயர்ப்பும்
  30. வலம் வந்த உலகம்
  31. எண்களுடன் கூடிய வரிசை உறுப்பினர்

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த நூல்கள்

  1. புதிய கண்டுபிடிப்புகளின் வரலாறு
  2. நூறு பேர்
  3. மாதிரி லட்சாதிபதி
  4. ஜெர்மானிய இந்திய இயல் அன்றும் இன்றும்
  5. பறக்கும்
  6. இந்திய தேசிய இராணுவத்தின் கதை
  7. மலேசிய கூட்டரசு அரசமைப்பு சட்டம்

மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த நூல்கள்

  1. பறக்கும் கலங்கள்
  2. காலம்
  3. பன்னிரண்டு ஓரங்க நாடகங்கள்

உருவாக்கிய தொகுப்புகள்

  1. அறிவியல் செய்தி பரிமாற்றம்
  2. சிறப்பு சிறுகதைகள்
  3. காசிம் புலவர் திருப்புகழ்

பெற்ற விருதுகளும் சிறப்புகளும்

கலைமாமணி விருது (1985) - மணவையாரின் அறிவியல் தமிழ்ப் பணியைப் பாராட்டியும் உலகெங்கும் தமிழ் மொழி கலை இலக்கிய பண்பாட்டுச் சிறப்புகளைப் பரப்பி வருவதற்காகவும் தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் 1985 இல் வழங்கியது (26.01.85). ‘திரு.வி.க.” விருது (1989) - 1989ல் அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணியை பாராட்டி தமிழ்நாடு அளித்த சிறந்த தமிழறிஞர்க்கான விருது. ‘எம்ஜி.ஆர்.” விருது (1996) - அறிவியல் தமிழ் பணியை பாராட்டி ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் 1996இல் வழங்கப்பட்டது. ‘தமிழ் தூதுவர்’ விருது (1994) தமிழ்நாடு கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மன்றம் உலகளாவிய முறையில் தமிழ்மொழி பண்பாடு கலை இலக்கியப்பணி ஆற்றி வருவதைப் பாராட்டி வழங்கப்பட்டது (28.4.1994). 'வளர்தமிழ்ச் செல்வர்' - இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரி அறிவியல் மன்றம் இவரது அறிவியல் தமிழ்ப்பணியைப் பாராட்டி குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழ்ச் சிற்பி' விருது (1987) - சிந்தனையாளர் கழகம் இவரது அறிவியல் தமிழ் பணியை போற்றும் வகையில் அதன் சார்பில் அன்றைய முதல்வர் மு. கருணாநிதியால் வழங்கப்பட்டது.

‘கேரளப் பல்கலைக்கழகப் பாராட்டு” (1994) - கலைச் சொல்லாக்கப் பணியை போற்றும் வகையிலும் தமிழுக்கும் மலையாள மொழிக்குமிடையே மொழி பெயர்ப்பு மூலம் இணைப்புப் பாலமாக விளங்குவதைப் பாராட்டும் வகையிலும் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பொன் விழாவின் பொழுது, இவருக்கு பொன்னாடை அணிவித்து விருதுக் கேடயமும் பாராட்டு இதழும் வழங்கப்பட்டது. சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான விருது தமிழ்நாடு அரசால் 1994-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

‘புகழ் பதிந்த தமிழர்” பட்டம், பம்மல் - நாகல்கேணி தமிழ்ச் சங்கம் இவரது தமிழ்ப் பணியை பாராட்டி வழங்கியது. ‘அறிவியல் தமிழ் வித்தகர்” விருது (1995) - ஈரோடு அல்லாமா இக்பால் இலக்கிய மன்றத்தாரால் இவரது தமிழ்ப் பணிக்காக வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழேறு” விருது (1996) மணவைத் தமிழ் மன்றம் இவரது அறிவியல் தமிழப் பணியை பாராட்டி வழங்கியது. ‘ராஜா சர் முத்தையா செட்டியார் விருது” (1995) திரு.மணைவையாரின் கால் நூற்றாண்டு கால தமிழ் பணியைப் பாராட்டும் வகையில் “ராஜா சர் முத்தைய” விருதும் அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளையின் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

“முத்தமிழ் வித்தகர்” (1996) உலகப் பண்பாட்டுக் கழகத்தார் இவரது ஆக்கபூர்ர்வமான தமிழ் பணியை பாராட்டும் வகையில் “முத்தமிழ் வித்தகர்” விருது வழங்கினர் (23.07.1996) ‘தந்தை பெரியார் விருது” திராவிடர் கழகத்தின் முத்தமிழ் மன்றத்தாரால் தமிழ் வளர்ச்சி பற்றி பெரியார் கொண்டிருந்த கொள்கையை கனவை நிறைவேற்றும் வகையில் அமைந்து வரும் இவரது அறிவியல் தமிழ் பணியை பாராட்டி வழங்கியது. ‘மூப்பனார்’ விருது (1997) தா.மா.கா.வின் தேசிய ஒருமைப்பாட்டுக் கழகத்தாரால் இவரது அறிவியல் தமிழ்ப்பணியை பாராட்டி வழங்கப்பட்டது.

‘சாதனையாளர்” விருது இவரது தமிழ்ப் பணியை பாராட்டி 'முகம்' திங்களிதழ் சார்பாக உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி எஸ.மோகனால் வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழருவி” விருது (1998) அமெரிக்காவிலுள்ள சிகாகோ தமிழ் மன்றத்தாரால் 1998இல் இவரது அறிவியல் தமிழ்ப்பணியை பாராட்டி வழங்கப்பட்டது. ‘சேவா ரத்னா” விருது (1998) இவரது இடையறா அறிவியல் தமிழ்ப்பணி சமய நல்லிணக்கப் பணியை பாராட்டி காஞ்சி காமகோடி பீட சென்டினேரியன் டிரஸ்ட் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மாவால் வழங்கப்பட்டது (17.09.1998)

‘சான்றோர் விருது” (2000) சான்றோர் பேரவை சார்பில் இவரது அறிவியல் தமிழ்ப் பணியை - குறிப்பாக கலைச் சொல்லாக்கப் பணியைப் பாராட்டி நவம்பர் 2000ல் வழங்கப்பட்டது. ‘கணினி கலைச் சொல் வேந்தர்” (2000) திருவையாறு தமிழய்யா கல்விக் கழகம் சார்பில் இவரது கலைச் சொல்லாக்கப் பணியை பாராட்டி விருதும் பொற்கிழியும் நவம்பர் 2000இல் வழங்கப்பட்டது. ‘ஆறாவது உலகத் தமழ் மாநாட்டு சிறப்பு விருது” தஞ்சையில் நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழ் மாநாட்டில் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்காக குறிப்பாக கூரியர் இதழியல் பணிக்காக அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவியால் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

‘மாமனிதர்” விருது (1999) இந்திய தேசிய முஸ்லிம லீக் வழங்கியது - 10.3.99 ’அறிவில் கலைச் சொல் தந்தை” விருது (1999) ஆறிவியல் தமிழுக்கு இவர் ஆற்றும் பெரும் பணிக்கு ரூபாய் ஐந்து லட்சத்துடன் இந்தப் பரிசு வழங்கப்பட்டது. 24.02.99 ‘அறிவியல் தமிழ் தந்தை” விருது (2003) தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை – குவைத் 14.02.2003 ‘தமிழேந்தி’ விருது வளைகுடா வானம்பாடிகள் கவிஞர் சங்கம் வழங்கியது. ‘சீறாச் செல்வர்” விருது கம்பன் கழகம் வழங்கியது

‘தமிழ் வாகைச் செம்மல்’ விருது சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கியது. ‘கலைஞர்”விருது (2003) முரசொலி அறக்கட்டளை சார்பாக கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுடன் வழங்கப்பட்டது (28.6.2003). ‘அமெரிக்க மாட்சிமை” விருது கனடாவில் வழங்கப்பட்டது. ‘அறிவியல் செல்வம் “ விருது முத்தமிழ் பேரவை சார்பாக கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்டது. ‘தங்க நட்சத்திர’ விருது.

‘அறிவியல் தமிழ் கலைசொல் வேந்தர்” விருது வாணியம்பாடி முத்தமழ் மன்றத்தால் வழங்கப்பட்டது. ‘ஆதித்தனார்” விருது (2004) ஆதித்தனார் முத்தமிழ் பேரவை சார்பாக தங்கப் பதக்கத்துடன் வழங்கப்பட்டது (27.09.2004). ‘உமா மகேசுவரனார்” விருது (2005) கரந்தை தமிழ்ச்சங்ம் வழங்கியது (05.09.2005). ‘செம்மொழிச் செம்மல்” விருது திருவள்ளுவர் தமிழ் மன்றம்; மணிமேகலை மன்றம்; கம்பர் கழகம்; சேக்கிழார் மன்றம்; முத்தமிழ் நற்பணி மன்றம்; பாரதி மன்றம் ஆகிய ஆறு மன்றங்களும் இணைந்து இராசபாளையத்தில் வழங்கிறது.

‘செம்மொழிக் காவலர்” விருது (2006) செம்மொழி பணியினை பாராட்டி 20.05.2006 அன்று தலைநகர் தமிழ்ச்சங்கம் வழங்கியது. “இயல் செல்வம்” விருது (2003) இவருடைய கலைத் தொண்டை பாராட்டி டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் முத்தமிழ் பேரவை சார்பாக வழங்கப்பட்டது 28.01.2003. சிறப்பு பரிசு (இலங்கை , 2002) உலக இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு (அக்டோபர் 2002) இலங்கை அதிபர் ரணல் விக்ரமசிங்கே அவர்களால் வழங்கப்பட்டது. ‘அறிவியல் களஞ்சியம்” விருது (2006) பிரான்ஸ் தமிழ் சங்கம் வழங்கியது 9.2.2006. ‘பண்பாட்டு காப்பாளர்” விருது (2006) பூவை தமிழ் பண்பாட்டுச் சங்கம் வழங்கியது (31.12.2006). ‘வாழ்நாள் சாதனையாளர்” விருது (2008) பாலம் அமைப்பு 2008ல் வழங்கியது. ‘பாரதி” விருது (2008) ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை 11.12.2008 வழங்கியது. ‘உலகப் பெருந்தமிழர்“ விருது (2009) உலகத் தமிழர் பேரமைப்பு 27.12.2009ல் வழங்கியது

பல்வேறு தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழகத்தின் பகழ் பெற்ற அமைப்புகளாவும் நிறுவனங்களாலும் 40க்கு மேற்பட்ட விருதுகளும் பட்டங்களும் பெற்றுள்ளார் இவர். தமிழ்நாடு அரசு வழங்கப்படும் சார்பில் ஐந்து விருதுகளை பெற்ற ஒரே தமழறிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வாழ்க்கையும் சாதனைகளும் மத்திய அரசால் 7 மணி 20 நிமிடம் பதிவு செய்யப்பட்டு புதுதில்லி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மறைவு

இவர் உடல் நலக் குறைவு காரணமாக பிப்ரவரி 06, 2017 அன்று சென்னையில் காலை 6 மணியளவில் காலமானார்.[4]

மேற்கோள்கள்

  1. "அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபாவுடன் நேர்காணல்". keetru.com. 04 ஜூலை 2006. http://keetru.com/index.php/2010-08-20-14-34-38/06-sp-770218536/10558-2010-08-22-02-51-56. பார்த்த நாள்: 7 பெப்ரவரி 2017. 
  2. மு.முருகேஷ் (26 June 2015). "அறிவியல் தமிழை ஆக்கபூர்வமாய் பயன்படுத்தினால் உலகின் கவனம் தமிழர்கள் பக்கம் திரும்பும்". http://tamil.thehindu.com. http://tamil.thehindu.com/opinion/reporter-page/அறிவியல்-தமிழை-ஆக்கபூர்வமாய்-பயன்படுத்தினால்-உலகின்-கவனம்-தமிழர்கள்-பக்கம்-திரும்பும்-அறிவியல்-தமிழறிஞர்-மணவை-முஸ்தபா-சிறப்புப்-பேட்டி/article7357287.ece. பார்த்த நாள்: 6 பெப்ரவரி 2017. 
  3. "பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/18 - விக்கிமூலம்" (in ta). https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/18. 
  4. தமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார். தினமணி நாளிதழ். 7 பிப்ரவரி 2017. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/feb/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2645010.html. 

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=மணவை_முஸ்தபா&oldid=25908" இருந்து மீள்விக்கப்பட்டது