போகர்
போகர், போக மாமுனிவர் (Bogar, Boyang Wei) என்பவர் பதினெண் சித்தர்களுள் தனிச் சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், தத்துவ ஞானியாகவும், எழுத்தாளராகவும் அனைவராலும் அறியப்படுகிறார். இவரது காலம் கி.மு. 500 மற்றும் கி.மு.100க்கு இடைப்பட்டதாக கணிக்கப்படுகிறது.[1][2] இவர் வைகாவூர் (பழனி) எனும் ஊரில் பிறந்தார். இவர் தனது தாய் மற்றும் தனது தாத்தாவிடமும் கல்வியைக் கற்றார் என்று கூறப்படுகிறது.[3] இவர் நவசித்தர்களுள் ஒருவரான காலங்கி நாதர் என்பவரது சீடராக அறியப்படுகிறார். போகரின் சீடர்கள் பலர் இருப்பினும் குறிப்பிடும்படியாக புலிப்பாணி என்னும் சித்தர் அறியப்படுகிறார். சீனாவில் போகர் போயாங் வேய் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தமிழிலும், சீன மொழியிலும் இயற்றியுள்ள நூல்களின் வாயிலாக சித்த மருத்துவம், விஞ்ஞானம், இரசவாதம், காயகற்ப முறை, யோகாசனம் போன்ற எண்ணற்ற குறிப்புகளும், அறிவியல் ரீதியலான கண்டுபிடிப்புகளும், மெய்ஞானம் அடைவதற்கான வழிமுறைகளும் நமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மூலவர் திருவுருவச்சிலையை நவபாடாணங்களைக் கொண்டு போகர் வடிவமைத்தார் என்று நம்பப்படுகிறது.
பழனி முருகன் சிலை
பழனி முருகனின் மூலத்திருவுருவச் சிலை போகரால் நவபாடாணங்களை கொண்டு உறுவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
"பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு
கௌரி கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை
பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி
நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு" - போகர்
ஆறு ஆதாரங்களில் முக்கியமான ஆக்ஞா எனப்படும் புருவமத்திக்கும், உச்சந்தலைக்கும் மத்தியில் குடிகொண்டிருக்கும் மனோன்மணியின் அனுக்கிரகத்தாலே (பீனியல் சுரப்பி அல்லது கூம்புச் சுரப்பி என்று அறிவியல் ரீதியாக அறியப்படுகிற அரிசியின் அளவே உள்ள ஒரு சிறிய சுரப்பி ஆகும்) ஒன்பது வகையான பாஷாணங்களாகிய;
1. கௌரிப் பாஷாணம் : Arsenic pentasulfide
2. கெந்தகப் பாஷாணம் : Sulfur
3. சீலைப் பாஷாணம் : Arsenic Di sulphite
4. வீரப் பாஷாணம் : Mercuric Chloride
5. கச்சாலப் பாஷாணம் : சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை
6. வெள்ளைப் பாஷாணம் : Arcenic Tri Oxide
7. தொட்டிப் பாஷாணம் : சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை
8. சூதப் பாஷாணம் : Mercury
9. சங்குப் பாஷாணம் : சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை
இவைகளை பல செய்முறைகளுக்கு உட்படுத்தி அவற்றை சுத்திகரித்து பழனி தண்டாயுதபாணி விக்கிரகம் வடிவமைக்கப்பட்டதாக போகர் இப்பாடலில் கூறியிருக்கிறார். இன்றளவும் இதன் செய்முறை புதிராகவும், நவீன அறிவியலுக்கு சவால் விடும் விதமாக அமைந்திருப்பதால் தண்டாயுதபாணி சிலை என்பது ஆச்சரியமாக கருதப்படுகிறது.
இச்சிலைகான வழிபாடு, திருமுழுக்கு விதிமுறைகள் புலிப்பாணி சித்தர் மறைப்பொருளாக இயற்றி வைத்திருக்கும் ஒருசில குறிப்புகளின் வாயிலாக கிடைக்கப்பெருகிறது.
"பாரப்பா மலையதுவின் உச்சியிலே
பாங்கான போகருட சமாதியருகே
கட்டான பாடாணவகை எட்டுடனொன்று
காணவே சேர்த்துவார்த்த சிலைதானும்
நண்ணவே பிரதிட்டைதான் செய்து
நவிலுவேன் பூசைசோ டசமுஞ்செய்ய
ஆற்றினேன் பூசைவிதிகள் தானும்
ஆரப்பா அறிவார்க ளாருமில்லை." - புலிப்பாணி
இச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிடேகம் நடைபெறுவதில்லை.
சீன தேசத்தில் போகர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்
போகர் கி.மு. 500 மற்றும் கி.மு. 100 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அவர் இயற்றிய நூல்களின் வாயிலாகவும் பிற வரலாற்று பதிவுகளின் வாயிலாகவும் நமக்கு அறியவருகிறது. போகர் சித்த மருத்துவத்திலும், ஞான நிலையை அடையச்செய்யும் யோக கலைகளிலும், இரசவாதம் சார்ந்த துறைகளிலும் சிறந்து விளங்கியது அவர் தமிழிலும், சீன மொழியிலும் இயற்றியுள்ள எழுத்துப்பதிவுகளின் வாயிலாகவும், இவரைப் பற்றி அக்காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பண்டைய தரவுகளின் வாயிலாக நமக்கு தெரியவருகிறது.
போகர் சீன தேசத்தில் "போயாங் வேய்" என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் கிழக்கு ஹான் ஆட்சிக் காலத்தில் (கி.மு. 167 - கி.மு.147) வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெருகின்றன. சீனாவின் கிழக்கு யின் ஆட்சிகாலத்தில் வாழ்ந்த சீன அறிஞரும், எழுத்தாளருமாகிய "ஜி ஹாங்"[1] (கி.பி 283 - கி.பி 364) என்பவர் இயற்றியுள்ள "ஷென்ஷியான் ஜுவான்" (தமிழ்: தெய்வங்கள் மற்றும் இறவா நிலை எய்தியவர்களின் வாழ்கை வரலாறு), (சீனம்: 神仙传), (ஆங்கிலம்: Shenxian Zhuan - Biographies of the Deities and Immortals [2] [3]) என்னும் நூலில் போகரினுடைய வாழ்கை வரலாற்றை பதிவு செய்திருக்கிறார்.
அவர் குறிப்பிடுவதாவது, "போயாங் வேய்" உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் எனவும் சீனாவில் கிழக்கு ஹான் அரச பரம்பரையுடன் இவருடைய குடும்பம் பலகாலம் நெருங்கிய தொடர்ப்பில் இருந்ததாகவும், தாவோயிசம் எனப்படும் உயர்ந்த கோட்பாட்டை பின்பற்றி பல காலம் வாழ்ந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்நூலில் போயாங் வேய் ஒரு சமயம் சீன தேசத்தில் மரணத்தை வெல்லும் அமுதத்தினை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட முடிவுசெய்து, அதற்காக தன் நம்பிக்கைக்கூரிய மூன்று சீடர்களுடன் மற்றும் தன் செல்ல நாயையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு தனிமையான ஒரு மலை உச்சியில் ஆய்வுக்கூடம் ஒன்றை உறுவாக்கினார். இரவு, பகல் பாராமல் பல நாட்கள் அயராது முயற்சித்ததன் பயனாக முதலாவது அமுதத்தினை தயார்செய்தார். பின்னர் அவற்றை அய்வு செய்து பார்க்கும் நோக்குடன் தன் செல்ல நாயினை முதலில் பருகச்செய்து பரிசோதிப்பதெனவும், அவ்வாறு பருகச்செய்து தன் நாய் இறவா நிலை அடைவதை உறுதிசெய்த பின்னர் நாம் நால்வரும் அவற்றை பருகலாம் எனவும், ஒருவேலை தன் செல்ல நாய் இறக்கும் நிலை ஏற்பட்டால் இம்முயற்சியினை கைவிடுவது பற்றி பரிசீலிக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது. அதே போல் தான் தயாரித்த அமுதத்தினை போயாங் வேய் முதலில் தனது செல்ல நாயினை பருகச்செய்தார். அவற்றை பருகிய சிறிது நேரத்தில் நாயானது தரையில் சுருண்டு விழுந்தது. செயலற்று கிடந்த அந்நாயினை பரிசோதித்த போகரினுடைய சீடர்கள் அது இறந்துவிட்டதென முடிவுசெய்து போயாங்கிடம் தெரிவித்தனர்.
போயாங் வேய் தனது சீடர்களிடம், "நாம் தயாரிக்க முயற்சித்த அமுதம் இன்னும் முழுமை அடையவில்லை என கருதுகிறேன், இவற்றை உண்டால் அந்நாய்க்கு எற்பட்ட நிலையே நமக்கும் ஏற்படும் எனவும், இது நமது உயர்ந்த நோக்கமான அமரத்துவம் எய்தும் நிலைக்கு எதிராக அமைந்துவிடக்கூடுமோ என அச்சப்படுவதாக தெரிவித்தார்". தனது சீடர்களிடம் ஆலோசனை கேட்க, அவர்கள் போயாங்கிடம் "தாங்களால் இந்த அமுதத்தினை பருக முடியுமா?" என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு போயாங் வேய் "நான் இந்த உலகின் நன்மைக்காக தன் தோளினை பயன்படுத்த என்றோ முடிவுசெய்து விட்டேன், அதற்காக என் உயிர் இந்த மலை உச்சியில் தான் பிரிய வேண்டும் என்று இருந்தால் என் குடும்பத்தை இழக்கவும் தயாராக இருக்கிறேன். நான் போற்றும் தாவோயிசத்திற்காக என்னால் எதுவும் செய்ய முடியாமல் போனால் அது எனக்கு மிகுந்த அவமானம். இந்த அமுதத்தினை பருகுவதால் என் உயிர் இந்த உடலை விட்டு பிரியுமாயின் அதை ஏற்கவும் தயாராக இருக்கிறேன்", என்று கூறிவிட்டு அந்த அமுதத்தினை பருகினார். பருகிய சிறிது நேரத்தில் போயாங் வேய் மயங்கி விழ அவரை பரிசோதித்த மூன்று சீடர்களும் அவர் இரந்துவிட்டதாக முடிவு செய்து தங்களுக்குள் பரபரப்புடன் விவாதித்து கொண்டனர்.
அதில் ஒரு சீடர் "இந்த அமுதத்தினை தயாரித்ததன் நோக்கம் மரணமில்லா அமரத்துவ நிலையை எய்துவதே அன்றி இரப்பதற்கன்று. ஆனால் இவற்றை பருகினால் உடனே இரந்து போவோம். இது மிகுந்த முரணாக அல்லவா உள்ளது?" என்று வினவ. மற்றொரு சீடர் "நமது குருநாதர் சாதாரணமான மனிதர் அல்ல அவர் செயல் ஒவ்வொன்றிற்கும் பல அர்த்தம் இருக்கும். அவருடன் பழகிய இத்தனை காலம் நான் அவரை பற்றி புரிந்துகொண்டதன் அடிப்படையில், அவர் இதை நிச்சயமாக ஒரு உயர்ந்த நோக்கத்திற்காகவே செய்திருப்பார்" என்று கூறிவிட்டு அந்த அமுதத்தினை அச்சீடரும் பருகி மயக்கமுற்றார்.
இதை கண்ட மற்ற இரு சீடர்களும் அதிர்ச்சியுற்று இனியும் இந்த அமுதத்தினை பருகுவதால் நம் உயிருக்கும் ஆபத்து என்று முடிவு செய்து போகருக்கும், சக சீடருக்கும் இறுதி சடங்கு செய்வதற்காக மலையினின்று கீழிறங்கி சென்ற சமயம் போயாங் வேய் விழிப்புற்று தான் வைத்திருந்த அமுதத்தினை மயங்கி கிடந்த தனது சீடருக்கும் தனது செல்ல நாய்க்கும் கொடுத்து மீண்டும் உயிர்பெற செய்தது மட்டும் அல்லாமல் அழிவில்லா பெருவாழ்வு என்னும் உயர்ந்த நிலையை அடையச்செய்தார். பின்னர் போயாங் வேய் தனது செல்ல நாயுடன், தனது சீடரையும் அழைத்துக்கொண்டு தாம் ஆய்வு நடத்திய அந்த மலையை விட்டு வெகுதூரம் பயணித்த பின்னர் ஒரு மரம் வெட்டுபவரை சந்தித்து தனது மற்ற இரு சீடர்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை தீட்டி அவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். சிலகாலம் கழித்து அக்கடிதத்தினை படித்த அவ்விரு சீடர்களும் தங்களின் செயல் குறித்து வருத்தப்பட்டதாக இந்த வரலாற்று குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாவோயிசம் எனப்படும் தத்துவ கோட்பாட்டை நிறுவிய லாவோ சீ (Lao Zi அல்லது Lao Tsu) க்கு அடுத்தப்படியாக போகர் அக்கருத்தியலை கிழக்கு ஆசிய நாடுகள் முழுமைக்கும் அக்காலத்தில் வேரூன்ற செய்த ஒரு முக்கிய நபராகவும், இரசவாதத்தின் தந்தை எனவும் அவர் இன்றளவும் கிழக்காசிய மக்களால் அழைக்கப்படுகிறார்.
துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் வெடிமருத்துக்கான வேதிப்பொருட்களை முதன்முதலில் கி.மு. 142 ஆம் ஆண்டு போகர் இயற்றிய குறிப்புகளில் பதிவுசெய்திருப்பதாக ஐரோப்பிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.[5]
போகர் சீன தேசத்தில் தாவோயிசக் கோட்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாகப் பல ஆய்வுகள் மேற்கொண்டு சித்த மருத்துவம், மற்றும் இரசவாதக் கோட்பாடுகளின் மூலமாக அக்கருத்தியலை மேலும் விரிவடையச் செய்ததாக அவர் சீன மொழியில் இயற்றிய கான்டொங் குய் என்னும் படைப்புகளின் வாயிலாக நமக்குத் தெரியவருகிறது.
போகர் தமிழுக்கு அளித்துள்ள படைப்புகள்
போகர் தமிழில் இயற்றியுள்ள படைப்புகளில் ஒருசிலவே அறியப்பட்டுள்ளன.
போகர் தமிழில் இயற்றியதாக சுமார் 64 நூல்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவர் எழுதியதாக சுமார் 26,307 பாடல்கள் கிடைக்கப்பெறுகின்றன. இதுவரை 23 நூல்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. இதன் மூலம் 11,000 பாடல்கள் வெளிவந்தமை தெளிவாகிறது.
இவர் தம் சுவடிகள் பெரும்பாலும் சென்னை சுவடி நூலகம், தஞ்சை சரஸ்வதி மகால், சென்னை சித்தமருத்துவ மேம்பாட்டு குழு, புதுச்சேரி பிரெஞ்சு கழகம், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, கேரள பல்கலைக்கழக சுவடி மையம், முதலிய இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
போகர் தமிழில் இயற்றியுள்ள நூல்கள் சிலவற்றின் பெயர் பட்டியல்;
- போகர் 7000 (சப்த காண்டம்)
- ஜெனன சாகரம் 550
- நிகண்டு 1700
- வைத்தியம் 1000
- சரக்குவைப்பு 800
- கற்பம் 360
- உபதேசம் 150
- இரணவாகமம் 100
- ஞானசாராம்சம் 100
- கற்ப சூத்திரம் 54
- வைத்திய சூத்திரம் 77
- முப்பு சூத்திரம் 51
- ஞான சூத்திரம் 37
- அட்டாங்க யோகம் 24
- பூசா விதி 20
- வாண சாஸ்திரம்
இவற்றையும் காண்க
உசாத்துணைகள்
- ↑ "Palani.org | Temple official Website". http://palani.org/bhogar-life.htm.
- ↑ "Astroulagam.com | Navapasanam Secret of immortality". https://astroulagam.com.my/lifestyle/article/84475/bogar-and-his-navapashanam-the-secret-to-immortality.
- ↑ PANDIAN, M. SENDUR (1993). "BOHAR (1550-1625) : RECORD OF HIS VISIT TO CHINA (SUMMARY)". Proceedings of the Indian History Congress 54: 757–757. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44143069.
- ↑ http://hidden-elements.com/articles/2018/2/8/great-alchemists-wei-boyang
- ↑ "History of Gunpowder" இம் மூலத்தில் இருந்து 2018-07-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180720081436/https://epicfireworks.com/history-of-gunpowder.
.