பெரி. சுந்தரம்
பெரியண்ணன் சுந்தரம் அல்லது பெரி. சுந்தரம் (சூலை 23, 1890 - பெப்ரவரி 4, 1957) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், கல்விமானும், தொழிற்சங்கத் தலைவரும் ஆவார். இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றில் முதன் முதலில் தொழிலாளர் அமைப்பை உருவாக்கிய சாதனையாளர். இலங்கை அரசாங்க சபை, இலங்கை செனட் சபை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தவர்.[1]
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பெரி. சுந்தரம் |
---|---|
பிறந்ததிகதி | சூலை 23, 1890 |
பிறந்தஇடம் | மடுல்கெல்லை, அட்டன், இலங்கை |
இறப்பு | பெப்ரவரி 4, 1957 | (அகவை 66)
பணி | வழக்கறிஞர் |
கல்வி | எம்.ஏ., பி.ஏ.எல்.பி(கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்) |
அறியப்படுவது | தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி |
பெற்றோர் | பெரியண்ணன், மீனாட்சி |
துணைவர் | செல்வநாச்சியார் (1925) |
வாழ்க்கைக் குறிப்பு
பெரி. சுந்தரம் இலங்கையின் மலையகத்தில் மடுல்கலை, நெல்லிமலைத் தோட்டத்தில் பெரியண்ணன் - மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தார்.[2] தனது ஆரம்பக் கல்வியை தோட்டப் பாடசாலையில் ஆரம்பித்து, கண்டி திரித்துவக் கல்லூரி, பின்னர் கொழும்பு புனித தோமையர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டத்துறைக் கல்வியைப் பயின்று உயர் கல்வியை லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பி.ஏ.எல்.பி, மற்றும் எம்.ஏ பட்டங்கள் பெற்றார். 1925 ஆம் ஆண்டில் செல்வநாச்சியார் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள்.
வழக்கறிஞராகப் பணி
தனது 26 வது வயதில் இங்கிலாந்தில் வழக்குரைஞராகப் பணி தொடங்கினார். 1916 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பி இலங்கை உயர்நீதிமன்ற வழக்கறிஞரானார். அத்துடன் சட்டக் கல்லூரியின் வெளிவிரிவுரையாளராக 1928 இல் நியமிக்கப்பட்டார்.[2]
தொழிற்சங்க அரசியலில்
அக்காலத்து அரசியல்வாதிகளான சேர் பொன்னம்பலம் அருணாசலம், சேர் பொன்னம்பலம் இராமநாதன், டி. எஸ். சேனநாயக்கா ஆகியோருடன் இணைந்து இலங்கை தேசிய காங்கிரசை உருவாக்கி, அதன் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.[2] இலங்கைத் தொழிலாளர் நல உரிமைகள் முன்னணி என்ற தொழிலாளர் அமைப்பை 1919 சூலையில் நிறுவினார்.[2] இதுவே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தொழிற்சங்கம் ஆகும்.[2] இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கி அதன் செயலாளராகப் பணியாற்றினார். 1939 ஆம் ஆண்டில் உருவான இலங்கை இந்தியர் காங்கிரஸ், அதன் பின்னர் உருவான இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் ஆகிய அமைப்புகளின் தலைவராகவும் இருந்து செயல்பட்டார்.[3]
தேசிய அரசியலில்
1931 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் அட்டன் தொகுதியில் போட்டியின்றித் தெரிவாகி அன்றைய அரசில் தொழில், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சராக 1936 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.[2] இக்காலத்தில் அவர் தொழிலாளர் நட்ட ஈட்டுச் சட்டத்தை அமுல் படுத்தினார்.[2] தெங்குப் பொருட் சபையை நிறுவி அதன் முகாமையாளராகப் பணியாற்றினார். 1947 ஆம் ஆண்டில் இலங்கை செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டு அதன் பிரதித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
- ↑ S. Thambyrajah (23-07-2006). "Appreciation - Peri Sundaram". த சண்டே லீடர் இம் மூலத்தில் இருந்து 5 ஏப்ரல் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100405024957/http://www.thesundayleader.lk/archive/20060723/letters.htm. பார்த்த நாள்: 4 பெப்ரவரி 2017.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 திரு. பெரி சுந்தரம் ஆற்றிய அரும் பணி, சிறீ லங்கா, சனவரி-பெப்ரவரி 1957
- ↑ Whither the Ceylon Workers Congress, ஜெயா பெரிசுந்தரம், சண்டே டைம்ஸ், அக்டோபர் 28, 2007
உசாத்துணை
- இலங்கைத் தேசிய காங்கிரசின் உருவாக்கத்துக்கு உழைத்த பெரி. சுந்தரம், வீரகேசரி, ஆகத்து 6, 2011
வெளி இணைப்புகள்
- Peri Sundaram பரணிடப்பட்டது 2011-11-27 at the வந்தவழி இயந்திரம், சண்டே லீடர், சூலை 23, 2006