பிரமோத்தர காண்டம்
பிரமோத்தர காண்டம் என்னும் நூல் பாண்டியர் பாடிய நூல்களில் ஒன்று. 16 ஆம் நூற்றாண்டு அரசன் வரதுங்கராம பாண்டியனால் பாடப்பட்டது. சிவ புண்ணியக் கதைகளைக் கூறும் நூல் இது. [1] [2] [3]
வடமொழியிலுள்ள கந்தபுராணத்தில் மூன்றாம் பிரிவு பிரமாண்ட புராணம். இந்த மூன்றாம் பிரிவின் மூன்றாவது பகுதியே பிரமோத்தர காண்டம். தமிழ்நூல் பிரமோத்தர காண்டம் வடமொழி நூலாகிய பிரமோத்தர காண்டம் என்னும் நூலின் மொழிபெயர்ப்பு. நூலாசிரியர் இதனை மதுரைத் தமிழ்ச்சங்கத்தில், அறுகால்பீடத்தில் அரங்கேற்றினார். [4] இந்நூலில் 22 அத்தியாயங்கள் உள்ளன.
நயக்குறிப்புகள்
இந்த நூல் ஒரு காப்பியம் போல் அமைந்துள்ளது. கதைகளில் வரும் குறிப்புகள் மிகவும் நயமாக உள்ளன.
- கடலில் மிதக்கும் அப்பர் பாற்கடலில் பள்ளி கொள்ளும் நாரணன் போலக் காணப்பட்டார்.
- குரு நிம்பை ஈசான முனிவரைச் சிவபெருமானோடு ஒப்பிட்டுப் பாடியுள்ளார்.
- விநாயகர் இராவணனைத் தன்முன் குட்டிக்கொள்ளுமாறு கூறினார். அதுமுதல் பிள்ளையார் முன் குட்டிக்கொள்ளும் வழக்கம் வந்தது.
சில கதைகள்
- மனைவி சொன்ன நன்மொழியைக் கேட்ட அரசன் ஒருவன் அவளையே தன் குருவாக எண்ணி அருள் வழங்குமாறு வேண்டுகிறான். அவள் முறை அன்று என்று சொல்லி வேறு ஒருவரிடம் அனுப்பிவைக்கிறாள்
- வழிபாடு செய்யச் சாம்பல் [5] கிடைக்காதபோது ஒருவன் தன் மனைவியையே சுட்டுப் பூசிக்கொண்டு வழிபாடு செய்கிறான்.
பாடல் பாங்கு [6]
குருவைப் போற்றும் பாடல்
- தேசான சிவஞானச் செஞ்சுடராம், மும்மலனை
- மாசான இருள் அகற்றி மன் உயிரைப் புரந்து அளித்துத்
- தூசான உரி அசைத்தோன் தொல் சமயம் நிறுத்தும் நிம்பை
- ஈசான மாமுனிவன் இணை அடியை இறைஞ்சுவாம்.
சிவகதி
- நித்தியமாம் ஆனந்த உருவம் ஆகி, நிறைவுபடும் பொருளாகி, கறை படாது
- சத்தியமாய் அனைத்து உயிர்க்கும் உள்ளீடு ஆகி, சங்கற்ப விகற்பங்கட்கு அயலது ஆகி
- வைத்த சிவ தத்துவத்தின் இயல்பு தன்னை வரு குருவரன் அருளின் இனிது உணர்ந்து வாழும்
- அத் தகையர் பிறப்பு ஆழி இடைநின்று ஏறி அழியாத சிவ கதியில் அடைவர் அன்றே.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
- ↑ நூல் மூலமும் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் செய்த உரையும், முதல் பதிப்பு, 1878
- ↑ இது சந்திரசேகரர் உரை என்னும் பிழையான குறிப்புடன் 1897-ல் மீண்டும் வெளிவந்துள்ளது.
- ↑ பிரமோத்தர காண்ட வசனம் என்னும் குறிப்புடன் வ.த. சுப்பிரமணிய பிள்ளை இரண்டாம் பதிப்பாக இதனை வெளியிட்டுள்ளார் 1928
- ↑ இந்நூலின் பாயிரப்பாடல் இதனைக் குறிப்பிடுகிறது.
- ↑ திருநீறு
- ↑ பொருள்நோக்குச் சொற்பிரிப்பு