பாலா தம்பு

பிலிப்ஸ் பாலேந்திரா தம்பு (Phillips Bala Tampoe, மே 23, 1922 - செப்டம்பர் 1, 2014)[1] அல்லது பொதுவாக பாலா தம்பு அல்லது தோழர் தம்பு என அழைக்கப்படுபவர் இலங்கையின் பிரபலமான தொழிற்சங்கத் தலைவரும், வழக்கறிஞரும் ஆவார். இடதுசாரிக் கொள்கையில் ஊறியவர். இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக 1948 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை சேவையாற்றி வந்தவர்.[2]

பாலா தம்பு
PBTampoe.jpg
இலங்கை வர்த்தக ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர்
பதவியில்
1948 பெப்ரவரி – செப்டம்பர் 1, 2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-05-23)மே 23, 1922
நீர்கொழும்பு, இலங்கை
இறப்புசெப்டம்பர் 1, 2014(2014-09-01) (அகவை 92)
கொழும்பு
அரசியல் கட்சிஇலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
லங்கா சமசமாஜக் கட்சி
துணைவர்(s)நான்சி கொத்தலாவலை (1950-1957, மணமுறிவு),
மே விக்கிரமசூரிய (தி. 1966)
முன்னாள் கல்லூரிஇலங்கைப் பல்கலைக்கழகம்
கொழும்பு றோயல் கல்லூரி
வேலைதொழிற்சங்கவாதி, அரசியல்வாதி

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

பாலா தம்பு இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றில் பிரான்சிசு தம்பு பிலிப்ஸ், பியூடிஸ் தங்கம்மா சவரிமுத்து ஆகியோருக்கு நீர்கொழும்பில் பிறந்தார். தந்தை அன்றைய பிரித்தானிய ஆட்சியில் சுங்கத் திணைக்களத்தில் இந்தியாவில் பணியாற்றியவர். தாயார் பீட்ரிசு, குருணாகலையில் அஞ்சல் அலுவலர் முதலியார் சவரிமுத்து என்பவருக்குப் பிறந்தவர்.[3] பாலா தம்புவுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். இவர்களில் மூன்று சகோதரர்கள் இளமையிலேயே இறந்து விட்டார்கள்.[4]

நீர்கொழும்பு நியூஸ்டட் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி கற்ற இவர் எட்டு வயதாக இருக்கும் போது தந்தை சென்னையில் வேலை பெற்று சென்ற போது குடும்பத்தோடு இவரும் அங்கு சென்றார். ஆனால் அங்கு பள்ளியில் இடம் கிடைக்காத காரணத்தால் சில காலம் வீட்டிலேயே இருந்து படிக்க நேரிட்டது. பின்னர் பிஷொப் கொட்டன் பள்ளியில் சேர்ந்து படித்தார்.[3] பின்னர் இலங்கை திரும்பி கொழும்பு றோயல் கல்லூரியில் இடைநிலைப் படிப்பைத் தொடர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு 1939ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகம் சென்று 1943 இல் அறிவியலில் இளமாணிப் பட்டம் பெற்று வெளியேறினார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து தாவரவியலில் சிறப்புப் பட்டம் பெற்றார்.[5] 1944 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மைத் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரி சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.[6]

பாலா தம்பு அம்பலாங்கொடையைச் சேர்ந்த நான்சி கொத்தலாவலை என்ற பாலர் பள்ளி ஆசிரியை ஒருவரை 1950 இல் திருமணம் செய்தார். அவருடன் 1957 இல் மணமுறிவு ஏற்பட்ட பின்னர் தொழிற்சங்கத்தில் பணியாற்றிய மே விக்ரமசூரிய (இறப்பு: 1998) என்பவரை 1966 இல் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இருவரும் அமெரிக்காவில் வசிக்கின்றார்கள்.[4]

தொழிற்சங்கத் துறையில்

ரோயல் கல்லூரியில் படிக்கும் போதே இடதுசாரிக் கொள்கையில் இவர் ஈர்க்கப்பட்டார். ரோயல் கல்லூரியில் விவியன் குணவர்தனாவின் சகோதரர் டனிஸ்டர் குணதிலக்கவுடன் நட்புக் கொண்டதனால், அவர் மூலமாக சூரிய மல் இயக்கத்தில் 1935 ஆம் ஆண்டில் இணைந்தார்.[3] இக்காலகட்டத்தில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய இடதுசாரித் தலைவர்கள் என். எம். பெரேரா, கொல்வின் ஆர். டி சில்வா, பிலிப் குணவர்தன ஆகியோருடன் இணைந்தார். 1941 இல் லங்கா சமசமாஜக் கட்சியில் சேர்ந்தார்.[2][3] 1947ஆம் ஆண்டு அரச ஊழியர் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக இவர் பல்கலைக்கழகப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தில் இணைந்து 1948 பெப்ரவரியில் அதன் செயலாளர் ஆனார்.[3]

1928 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தக ஊழியர் சங்கம், பாலா தம்பு செயலாளராக ஆன பின்னர் லங்கா சமசமாஜக் கட்சியின் செல்வாக்குக்குள் வந்தது. இக்கட்சி நான்காம் அனைத்துலக அமைப்பின் உறுப்பினராக இருந்தது. 1963 ஆம் ஆண்டில், கொழும்பு துறைமுகத்தில் வேலை நிறுத்தம் ஒன்றை தலைமை தாங்கி நடத்தினார். இது பின்னர் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தமாக உருவெடுத்தது.[2]

1964 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜச் கட்சி நான்காம் அனைத்துலகத்தில் இருந்து விலகி அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசில் இணைந்ததை அடுத்து, பாலா தம்பு, எட்மண்ட் சமரக்கொடி போன்றோருடன் சேர்ந்து கட்சியில் இருந்து விலகி[5] இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சியின் தலைவரானார். 1960 மார்ச்[7], 1960 சூலை,[8] 1965[9] ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்களில் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார்.

பாலா தம்பு இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் செயலாளராக இறக்கும் வரை தொடர்ந்து பணியாற்றி வந்ததோடு, உழைக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது நிர்வாகங்களுடனும், அரசுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டு தீர்வு கண்டு வந்திருக்கிறார்.

மேற்கோள்கள்

  1. Bala Tampoe passes away, டெய்லிமிரர், செப்டம்பர் 1, 2014
  2. 2.0 2.1 2.2 "Bala Thampoe: a life-long struggle for labour rights". மீரா சிறிநிவாசன் (தி இந்து). 2 செப்டம்பர் 2014. http://www.thehindu.com/news/international/bala-thampoe-a-lifelong-struggle-for-labour-rights/article6370499.ece. பார்த்த நாள்: 2 செப்டம்பர் 2014. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "The Bala Tampoe story". தி ஐலண்டு. 7 செப்டம்பர் 2014 இம் மூலத்தில் இருந்து 2014-09-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140907123351/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=109838. 
  4. 4.0 4.1 "பல்கலைக்கழகத்திலேயே இடதுசாரிக் கொள்கையால் ஈர்க்கப்பட்டேன்". தினகரன். 2 மார்ச் 2014. http://www.thinakaran.lk/vaaramanjari/2014/03/02/?fn=f1403023. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. 5.0 5.1 "Colombo’s glitter and gutter, casino politics and toilet tax economics, and May Day Honours to Bala Tampoe". ராஜன் பிலிப்சு (தி ஐலண்டு). 4 மே 2014 இம் மூலத்தில் இருந்து 2014-05-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140504072735/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=102687. பார்த்த நாள்: 4 மே 2014. 
  6. "Comrade Bala Tampoe – an icon of Trade Unionism" இம் மூலத்தில் இருந்து 2011-08-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110829044832/http://print.dailymirror.lk/features/features/39241.html. 
  7. "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2009-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091209231748/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF. 
  8. "Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115611/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF. 
  9. "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150713003440/http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பாலா_தம்பு&oldid=24141" இருந்து மீள்விக்கப்பட்டது