பழ. நெடுமாறன்
பழ. நெடுமாறன் (Pazha Nedumaran)(10 மார்ச் 1933, மதுரை தமிழ்நாடு) ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார்.[1] அதனால் இந்திரா காந்தியால் “என் மகன்" என்று அன்புடன் அழைக்கப்பட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பெயர் சூட்டினார். இவர் கருத்து வேறுபாடுகளால் காங்கிரசை விட்டு வெளியேறிவர். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தைத் தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டுத் தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு காமராசர் காங்கிரசு என கட்சியினைத் தொடங்கினர்.
பழ நெடுமாறன் | |
---|---|
பிறப்பு | 10 மார்ச்சு 1933 மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | அரசியல்வாதி, ௭ழுத்தாளர் |
அறியப்படுவது | உலகத் தமிழர் பேரவையின் நிறுவனர், தமிழ்த் தேசிய இயக்கம் மற்றும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் கூட்டமைப்பின் தலைவர் |
வாழ்க்கைக் குறிப்பு
குடும்பம்
1933ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள், பழ. நெடுமாறன், கி. பழநியப்பனார் - பிரமு அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை மதுரைத் தமிழ்ச்சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றினார்.
1942ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த்திருநாள், 1956ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை இவரது தந்தையைச்சாரும். பழ. நெடுமாறனுக்கு இரண்டு தமக்கைகளும், மூன்று தம்பிகளும் உள்ளனர். பார்வதி அம்மையாரை மணந்தார்.
கல்வி
மதுரை புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, புனித மரியன்னை உயர் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில், பள்ளிப்படிப்பினை முடித்த பழ. நெடுமாறன், தனது கல்லூரிப்படிப்பினை அமெரிக்கன் கல்லூரி, தியாகராசர் கல்லூரி (இடைநிலை வகுப்பு), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய கல்விக்கூடங்களில் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் சிறப்பு இளங்கலை பட்டம் பெற்றார். அவரது ஆசிரியர்களாக புகழ் பெற்ற முனைவர் அ. சிதம்பரநாதனார், முனைவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், முனைவர் இராசமாணிக்கனார், அவ்வை சு. துரைசாமி பிள்ளை, திரு. அ. கி. பரந்தாமனார் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது வாழ்க்கை
மாணவர் இயக்கம்
பழ. நெடுமாறன், மாணவப் பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்டார். இவர்தம் கல்லூரி வாழ்வில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்து, 1958ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இதே ஆண்டில், அறிவியல் மாணவர் இல்லப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1958–1959 வரை பதவி வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட அண்ணாதுரையை மாபெரும் போராட்டத்திற்கு பிறகு அழைத்து வந்து திருவள்ளுவர் விழா நடத்தினார். மேலும், அறிஞர் அண்ணாவின் ஓம்லாண்ட் பத்திரிகை நிதிக்காக மாணவர்கள் சார்பில் எசு. டி. சோமசுந்தரத்துடன் இணைந்து ரூ.10,000 நிதி திரட்டி அளித்தார்.
அரசியல் ஈடுபாடு
- 1962 - அமைப்பாளர், மதுரை மாவட்ட தமிழ்த் தேசியக் கட்சி
- 1964 - மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரசு அமைப்பாளர்
- 1970 - மதுரை மாவட்ட காங்கிரசுத் தலைவர்
- 1973 – 1979 வரை தமிழ்நாடு காங்கிரசுப் பொதுச் செயலாளர்
- 1979 முதல் - தமிழர் தேசிய இயக்கத் தலைவர்
- 1980 – 1984 - தமிழக சட்டமன்ற உறுப்பினர்
உலகத் தமிழர் தொண்டு
- 1982 - நியூயார்க், 1984 - நியூயார்க், 1988 - இலண்டன் ஆகிய நகரங்களில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடுகளுக்குத் தலைமை.
- 2002 - முதல் உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவனத் தலைவர்
தமிழீழப் போராட்டத்தில் ஈடுபாடு
- 1982 - யாழ் நூலகம் கொளுத்தப்பட்ட போது அங்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து வந்து தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை அளித்தார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்து தலைமை அமைச்சர் இந்திராவிடம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் முறையீடு அளிக்கப்பட வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார். அதற்கிணங்க எம்.ஜி.ஆர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு புது தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த முறையீடு ஒன்றை அளித்தது.
- 1982 - சிங்கள அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி, செகன் ஆகியோரின் மரண தண்டனையை கைவிட வேண்டுமென தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றச் செய்தார்.
- 1983 - கொழும்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மதுரையிலிருந்து இலங்கை நோக்கி 5000 தொண்டர்களுடன் தமிழர் தியாகப் பயணம் நடத்தினார்.
- 1985 - விடுதலைப் புலிகளின் துணையோடு இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் கமுக்கமாகச் சுற்றுப்பயணம்[2] மேற்கொண்டு சிங்களப் படையாட்களின் அட்டூழியங்களைப் பற்றிய விவரங்களையும், ஈழத் தமிழர்களின் துயரங்களையும் நேரில் கண்டறிந்து அவற்றை ஒளிப்படமாக எடுத்து வந்து இந்தியா உட்பட உலக நாடுகளில் காட்டச் செய்தார்.
- 1987 - திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அங்கு சென்று நிலைமையை அறிந்து வந்து தமிழக மக்களுக்குத் தெரிவித்தார்.
- 1987–1990 - தமிழர் தேசிய இயக்கமும் தோழமைக் கட்சிகளும் இணைந்து ஈழத் தமிழர் போராட்டத்துக்காக அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தின. 20-12-1990 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழர் அமைப்புகளின் கூட்டத்தில் ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றினை நிறுவிக் கூட்டாக செயல்படுவதற்கு முடிவு செய்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அமைப்பாளராக பொறுப்பேற்றார். 1991 முதல் இன்று வரை இந்த ஒருங்கிணைந்த அமைப்பின் சார்பில் போராட்டங்களும் மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் அரசு தடை விதித்த போது அதை மீறி தோழர்கள் சிறை புகுந்தனர்.
- 1991 - மீண்டும் இலங்கை சென்று இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களைப் பற்றிய உண்மைகளைத் திரட்டி வந்து தலைமை அமைச்சர் வி. பி. சிங்கைப் பார்த்து அவரிடம் அளித்து இந்திய அமைதிப் படையை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெறும்படி வற்புறுத்தினார்.
தமிழ்த் தேசியத் தொண்டுகள்
- 1981 - தருமபுரி மாவட்டத்தில் மோதல் சாவுகள் என்ற பெயரில் அப்பாவி ஊர்ப்புற இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து உண்மைகளை அறிந்து வந்து அம்பலப்படுத்தி மோதல் சாவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
- 1991 - தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காயமடைந்த, ஊனமுற்ற விடுதலைப் புலிகளின் நிலைமை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு முறையிட்டு அவர்கள் விடுதலை பெற உதவினார்.
- 1993 - பன்னாட்டுக் கடல் எல்லையில் விடுதலைப் புலிகள் தளபதி கிட்டு பயணம் செய்த கப்பலை இந்தியக் கடற்படை வழி மறித்ததைத் தொடர்ந்து கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. தளபதி கிட்டு உட்பட பல தோழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். கப்பலின் மாலுமிகள் 9 பேரை இந்தியக் கடற்படைக் கைது செய்தது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் வழக்கை உச்ச நீதிமன்றம் வரை நடத்தி 9 பேரின் விடுதலைக்கும் வழி வகுத்தார்.
- 1998 - இராசீவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு ஒட்டு மொத்தமாகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்காக குழுவை அமைத்து வழக்கை நடத்தி 19 பேர் விடுதலை பெறுவதற்கும் மூவருக்கு வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்படுவதற்கும் வழிவகுத்தார். 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மட்டுமல்ல, இந்தியாவில் தூக்குத் தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் பெரும் இயக்கத்தை நடத்தியதோடு சென்னையில் ஐம்பதினாயிரம் பேரைத் திரட்டி மரண தண்டனை ஒழிப்பு ஊர்வலம் நடத்தினார். அதன் விளைவாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான நளினியின் மரண தண்டனை வாழ்நாள் தண்டையாக குறைக்கப்பட்டது.
- 2000 - கன்னட நடிகர் இராசகுமாரை வீரப்பன் கடத்திய போது காட்டுக்குள் சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கிச் சென்று வீரப்பனிடம் பேசி இராசகுமாரை விடுவிக்க உதவினார். இதன் விளைவாக இரு மாநிலங்களுக்கிடையே மூளவிருந்த இனக் கலவரத்தைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து அதிரடிப் படையின் அட்டூழியங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டினார்[3].
- 2000 - வீரப்பனுக்கு உதவியவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் தடா சட்டப்படிக் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் வாடிய 121 அப்பாவி ஊர்க்காரர்களின் வழக்கைச் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்தி அவர்களில் 117 பேரின் விடுதலைக்கு வழி வகுத்தார்.
- 2007 - பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் திரட்டும் இயக்கத்தினை நடத்தி, தமிழகமெங்குமிருந்து ஏறத்தாழ ரூபாய் 1 கோடி பெறுமானமுள்ள பொருட்களைத் திரட்டினார். அப்பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப இந்திய அரசு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பல கட்சியினரை ஒன்று திரட்டி நாகப்பட்டினத்திலும்[4], இராமேசுவரத்திலும் படகுப் பயணப் போராட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் சாகும் வரை பட்டினிப் போராட்டம் மேற்கோண்டார்
சிறை
- மாணவப் பருவத்திலிருந்து இன்று வரை பல போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 50 க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு காவலிலும் சிறையிலும் நாட்கணக்கிலும் மாதக் கணக்கிலும் வைக்கப்பட்டார்.
- தமிழகத்தின் ஒன்றிரண்டு சிறைகளைத் தவிர அனைத்துச் சிறைகளிலும் இருந்திருக்கிறார்.
- 1969-இல் காங்கிரசு கட்சியில் இருந்த போது, தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு 6 மாத காலம் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். பொய் வழக்கு என்று வெளிப்படுத்தியே வெளி வருவேன் என்று பிணையில் வெளிவர மறுத்து விட்டார். ஆறு மாத காலம் முடிவதற்கு ஓரு நாள் இருந்த போது உயர் நீதிமன்றம் அவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று தீர்ப்புரைத்தது. இதற்காக பெருந்தலைவர் காமராசர் நெடுமாறனை மாவீரன் என பாராட்டினார்.
- 1993 - தடா சட்டத்தின் கீழும் 2002ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.
- 2002ஆம் ஆண்டு பொடாவில் கைது[5] செய்யப்பட்ட போது ஓராண்டு 5 மாத காலம் சிறையில் இருந்தார்.
- பிணையில் வெளியே வந்த பிறகு 18 மாதங்கள் இவருக்கு பொது இடங்களிலும் ஊடகங்களிலும் பேசுவதற்கு தடை இடப்பட்டு பேச்சுரிமை பறிக்கப்பட்டது.
- இன்று வரை பல்வேறு போராட்டங்களை நடத்தி அதற்காக 1 வாரம் பத்து நாட்கள் என சிறையில் அடைக்கப்பட்டும் பின்னர் பிணையில் வெளிவந்து தொடர்ந்து வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று வருவதும் தொடர்கிறது.
இதழியல் பணி
- 1960 – தமிழ்நாடு நாளிதழ் துணை ஆசிரியர்
- 1962 – குறிஞ்சி வார இதழ், செய்தி நாளிதழ் ஆகியவற்றின் ஆசிரியர்
- 1997 முதல் தற்போது வரை “தென்செய்தி” இதழின் ஆசிரியர்.
உண்ணாநிலைப் போராட்டம்
முதன்மைக் கட்டுரை: பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்
நூல்கள்
(எழுதப்பட்ட கால வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன)
அரசியல் நூல்கள்
- நேதாஜி எங்கே?
- பெங்களுர் முதல் டில்லி வரை
- காமராசருக்குக் கண்ணீர் கடிதங்கள்
- நீதி கேட்கிறோம்?
- சட்டமன்றத்தில் நமது குரல்
- தேர்தல் தந்த திருப்பம்
- மத்திய - மாநில உறவு - சில குறிப்புகள்
- மதுரை முதல் மாஸ்கோ வரை
- தமிழர் தன்னுரிமை முழக்கம்
- தமிழன் இழந்த மண்
- தமிழகம் - நதிநீர் பிரச்னைகள்
- தன்மானத் தலைவர் சுபாஷ் போஸ்
- Why a new Constituent Assembly?
- புதிய அரசியல் யாப்பு அவையைக் கூட்டுக
- தமிழரின் தலையாய தேசியப் பிரச்னைகள்
- பேருருக் கொள்ளும் தமிழ்த் தேசியம்
- தன்னுரிமையா? மாநில சுயாட்சியா?
- மனித குலமும் தமிழ்த் தேசியமும்
- மதமாற்றம் - பார்ப்பன இந்துத்துவா கூப்பாடு
- தடா முதல் பொடா வரை
- உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும்
- மூன்றாவது அணி- மக்கள் தயார்! கட்சிகள் தயாரா?
- சிறைமலர் 3: மனிதகுலமும் தமிழ்த்தேசியமும்
ஈழத் தமிழர் சிக்கல்
- இலங்கைத் தமிழர் பிரச்னை அதிர்ச்சி தரும் உண்மைகள்
- Srilanka Tamils Problem – A Shocking Revelation
- பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் - தமிழீழ விடுதலைப் போராட்டமும்
- Palestine Liberation Struggle & Tamil Eelam Liberation Struggle
- பாரதப் பிரதமருக்குப் பகிரங்கக் கடிதம்
- தில்லியின் துரோகக் கொள்கை
- ஈழப் போர்முனையில் புலிகளுடன்
- பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்
- காவிய நாயகன் கிட்டு
- தமிழீழம் சிவக்கிறது[6]
- தங்கவங்கமும் தமிழீழமும்
- Tamil Eelam and Golden Bengal
- காகிதப் புலி கருணா
- இந்தியாவும் புலிகளின் தீர்வுத் திட்டமும்
நெடுங்கதைகள்
- தென்பாண்டிவீரன் (கவியரசு கண்ணதாசனின் தென்றல் இதழின் நெடுங்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது)
- சோழ குல வல்லி
- அருவிக்கரை அழகி
- முல்லை வனத்து மோகினி
- சந்தன முல்லை
இலக்கியம் - வரலாறு
- தமிழ் வளர்த்த மதுரை
- தமிழ் உயர் தனிச் செம்மொழி
- எழுக உலகத் தமிழினம்
- தமிழறிஞர் தெ.பொ.மீ-யின் அரசியல் தொண்டுகள்
- தமிழரும் கீதையும்
- கவியரசர் என் காவலர்
- பழந்தமிழர் பரவிய நாடுகள்
மேற்கோள்கள்
- ↑ "நெஞ்சத்தில் நிழலாடும் தலைவர்கள்". http://tamil.thenseide.com/seide/index.php?option=com_content&view=article&id=919:2015-12-17-09-32-50&catid=31:thenseide&Itemid=27. பார்த்த நாள்: 7 மார்ச் 2016.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-05-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100507172111/http://www.hinduonnet.com/fline/fl1917/19170380.htm.
- ↑ http://timesofindia.indiatimes.com/articleshow/26968195.cms
- ↑ http://timesofindia.indiatimes.com/India/Tamil_leader_P_Nedumaran_arrested_in_Nagapattinam/articleshow/2361290.cms
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2008-12-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081202070949/http://www.hinduonnet.com/thehindu/2002/08/02/stories/2002080204810100.htm.
- ↑ தமிழீழம் சிவக்கிறது