பழனிக் கோவை

பழனிக் கோவை[1][2] என்பது கோவை நூல்களில் ஒன்று. பழனியைத் தலைநகராகக் கொண்டு நாடாண்ட வையாபுரி மன்னனை முன்னிலைப்படுத்திப் பாடப்பட்ட நூல். 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் தோன்றியது. கோவை நூலுக்கு உலிய அளவுத் திட்டப்படி 400 பாடல்களைக் கொண்டது. பாடல் ஒவ்வொன்றுக்கும் துறை அல்லது கிளவித் தலைப்பு, கொளு, மெய்ப்பாடு, பயன் என்னும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இவை நூலாசிரியரால் தரப்பட்டவை. இது நூலாக அச்சாகவில்லை

பாண்டிக்கோவை காலத்தால் முந்தியது. அடுத்த சிறப்பு சிற்றம்பலக் கோவையார் நூலுக்கு உரியது. மூன்றாம் சிறப்பினை இந்த நூல் பெற்றுள்ளது. இந்த நூல் சிற்றம்பலக் கோவையை அடியொற்றிச் செய்யப்பட்டது. இந்த நூலை அடுத்து இறையனார் பொருள் விளக்கம் என்னும் துணைக் கொத்தும் உண்டு. [3] [4] இந்த இணைப்புக் கொத்தில் 'இயற்கைப் புணர்ச்சி' தொடங்கி, 'பரத்தையிற் பிரிவு' ஈறாக 24 பகுதிகள் உள்ளன. இதில் உள்ள பாடலடிகள் 112.

கொளு - எடுத்துக்காட்டு

ஒரடிக் கொளுக்கள்

  • கரைவு கூறி வரைவு கடாயது
  • ஊரன் புயத்தின் வாரம் பகர்ந்தது
  • பருவம் இது என்று வரைவு கடாயது

ஈரடிக் கொளுக்கள்

கொண்டல் பருவம் கண்டதற்கு இரங்கி
வில் உமிழ் வேலோன் சொல்லல் உற்றது
பற்பல துயரொடு படரா நின்றவன்
முற்படு புயற்கு முன்னி மொழிந்தது

கோவை - பாடல் - எடுத்துக்காட்டு

(பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டது)

நெடு மாதவனும் குறு மாதவனும் நிலம் உவரி
தடுமாறக் கால் கைக்கு அடக்கிவிட்டாங்கு இவள் தன்மையில் நீ
தொடும் ஆதரத்து அவர் தொட்டால் பெருகும், விட்டால் சுருங்கும்
கடு மான் மகள் கொண்கர் வையாபுரி மன்ன கண்டு கொள்ளே.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 262. 
  2. செந்தமிழ் (இதழ்) 1938 சூலை முதல் எட்டு இதழுகளில் தி. கி. இராமானுச ஐயரால் வெளியாடப்பட்டுள்ளது.
  3. இறையனார் களவியல் உரைக்குப் பின்னர் நூல் எழுதியவர்கள் இந்தக் கொத்தைச் சேர்த்துள்ளனர்.
  4. திருக்குருகைப் பெருமாள் கவிராயர் எழுதிய திருப்பதிக் கோவை என்னும் நூலை அடுத்தும் இந்தக் கொத்து உள்ளது.
"https://tamilar.wiki/index.php?title=பழனிக்_கோவை&oldid=16749" இருந்து மீள்விக்கப்பட்டது