பரமேசுவரா தேவ ஷா

ராஜா ஸ்ரீ பரமேசுவரா தேவ ஷா அல்லது சுல்தான் அபு சாகித் (மலாய் மொழி: Sultan Abu Syahid Shah; ஆங்கிலம்: Abu Syahid Shah; ஜாவி: أبو شهيد شاه ); என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது அரசர் ஆவார்.

பரமேசுவரா தேவ ஷா
Raja Sri Parameswara Dewa Shah
மலாக்காவின் 4-ஆவது சுல்தான்
ஆட்சிமலாக்கா சுல்தானகம்: 1444 – 1446
முன்னிருந்தவர்சுல்தான் முகமது ஷா
பின்வந்தவர்சுல்தான் முசபர் ஷா
மரபுமலாக்கா சுல்தானகம்
தந்தைசுல்தான் முகமது ஷா
இறப்பு1446
சமயம்இந்து

இவரின் அசல் பெயர் ராஜா இப்ராகிம் (Raja Ibrahim). இருப்பினும் இவர் இறக்கும் போது இவரின் பெயர் ராஜா ஸ்ரீ பரமேசுவரா தேவ ஷா. அதனால் அந்தப் பெயரிலேயே அறியப்படுகிறார்.

இவர் மலாக்காவை 1444-ஆம் ஆண்டில் இருந்து 1446-ஆம் ஆண்டு வரை, ஏறக்குறைய 17 மாதங்கள் ஆட்சி செய்தார்.[1]

பொது

அந்தக் காலக் கட்டத்தில் மலாக்கா ஒரு முசுலிம் அரசு. இருப்பினும் சுல்தான் அபு சாகித் தன் பெயரை ராஜா ஸ்ரீ பரமேஸ்வர தேவா ஷா (Raja Sri Parameswara Dewa Shah) என்று மாற்றிக் கொண்டு, இந்து சமயத்தைப் பின்பற்றி வந்தார்.

மலாக்காவின் 4-ஆவது சுல்தானாக ராஜா இப்ராகிம் நியமிக்கப்பட்டது, மலாக்கா மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறவில்லை. அவர் மிகவும் இளமையாகவும், வெகுளியாகவும் இருந்தார் என்று சொல்லப் படுகிறது.

இந்து பட்டப் பெயர்

சுல்தான் அபு சாகித் ஓர் இந்து பட்டத்தை வைத்துக் கொண்டதன் மூலம் மலாக்காவில் இஸ்லாத்திற்கு எதிராக ஒரு பாரம்பரியவாத எதிர்வினையைத் தோற்றுவித்தார். அதனால் மலாக்காவில் வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு மனவருத்தங்கள் ஏற்பட்டன. ஒரு சுல்தானகத்தில் ஓர் இந்து அரசர் பதவி வகிப்பதைச் சிலர் விரும்பவில்லை.

சுல்தான் சுல்தான் அபு சாகித் பதினேழு மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தார். அந்தக் கட்டத்தில் மலாக்காவில் இருந்த ஒரு தமிழ் முஸ்லீம் பெண்டகாரா துன் அலி (முதல்வர்) என்பவரின் சதித் திட்டத்தில், பரமேசுவரா தேவ ஷா தவறுதலாகக் கொல்லப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

பெண்டகாரா எனும் பதவி அக்காலக் கட்டத்தில் ஒரு முதல்வர் பதவிக்குச் சரிசமமான பதவியாகும். துன் அலி, மலாக்காவின் இசுலாமியத் தமிழ்த் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

ரோக்கான் இளவரசிக்குப் பிறந்தவர் பரமேசுவர தேவா ஷா

சுல்தான் முகமது ஷா காலமானதும், ராஜா இப்ராகிம் எனும் பரமேசுவர தேவா ஷா என்பவர் 1444-ஆம் ஆண்டு மலாக்காவின் சுல்தானாக அரியணையில் அமர்த்தப் பட்டார்.

ராஜா இப்ராகிம் என்பவர் சுல்தான் முகமது ஷாவிற்கும் ரோக்கான் இளவரசிக்கும் (Puteri Rokan) மகனாகப் பிறந்தவர். ராஜா இப்ராகிம் பதவி ஏற்ற போது அவரின் பெயர் சுல்தான் அபு சாகித் (Sultan Abu Syahid).[2]

மலாக்காவில் ராஜா ரோக்கான் குடியேற்றம்

இந்தக் கட்டத்தில் துன் அலியின் தாத்தா ஸ்ரீ நர திராஜா துன் பெர்பாத்தே பெசார் (Seri Nara Diraja Tun Perpatih Besar) என்பவர் மலாக்காவின் பெண்டகாரா பதவியில் இருந்தார். அவருக்குப் பதிலாக 'ஸ்ரீ நர திராஜா' (Seri Nara Diraja) என்ற பட்டத்துடன் துன் அலி மலாக்காவின் பெண்டகாரா பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

சுல்தான் அபு சாகித் எனும் பரமேசுவர தேவா ஷா மலாக்காவின் ஆட்சியாளராக இருந்த போதிலும், மலாக்கா அரசாங்கத்தின் அதிகாரம் மலாக்காவில் குடியேற வந்த ராஜா ரோக்கானின் (Raja Rokan) கைகளில் இருந்தது. சுல்தான் முகமது ஷாவின் ஆட்சியின் போது ராஜா ரோக்கானின் குடும்பத்தினர் மலாக்காவில் குடியேறினார்கள்.[2]

பரமேசுவர தேவா ஷாவின் தாத்தா ராஜா ரோக்கான்

ராஜா ரோக்கானின் மகளைத்தான் சுல்தான் முகமது ஷா திருமணம் செய்து இருந்தார். அந்த வகையில் ராஜா ரோக்கான் என்பவர் சுல்தான் அபு சாகித் எனும் பரமேசுவர தேவா ஷாவின் தாத்தாவாகும்.

ரோக்கான் என்பது அந்தக் காலக் கட்டத்தில் மேற்கு சுமத்திராவில் இருந்த ஓர் அரசு ஆகும். ரோக்கான் இளவரசிக்கும் சுல்தான் முகமது ஷாவிற்கும் பிறந்தவர் தான் ராஜா இப்ராகிம் எனும் பரமேசுவர தேவா ஷா.[3]

ராஜா ரோக்கானின் அதிகாரம்

பரமேசுவர தேவா ஷா, மலாக்காவின் சுல்தான் பதவியை ஏற்றதும் மலாக்கா அரசாங்கத்தின் அதிகாரம் ராஜா ரோக்கான் கரங்களில் சிக்கிக் கொண்டது. பரமேசுவர தேவா ஷாவின் அதிகாரங்களை ராஜா ரோக்கான் கட்டுப்படுத்தத் தொடங்கினார்.

அதனால் மலாக்கா அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரிகளுக்கு ராஜா ரோக்கானைப் பிடிக்கவில்லை. ராஜா ரோக்கான் பிடியில் இருந்து பரமேசுவர தேவா ஷாவினால் விடுபடவும் முடியவில்லை.

அத்துடன் ராஜா காசிம் மலாக்காவில் இருப்பதை ராஜா ரோக்கான் விரும்பவில்லை. ராஜா காசிம் என்பவர் பரமேசுவர தேவா ஷாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆகும். பரமேசுவர தேவா ஷாவின் சிற்றன்னை துன் வதிக்குப் பிறந்தவர் ராஜா காசிம்.

மீனவர் வாழ்க்கை வாழ்ந்த ராஜா காசிம்

ராஜா காசிம் மலாக்கா அரண்மனைக்கு வருவதில் இருந்து தடுக்கப்பட்டார். அதன் பிறகு ராஜா காசிம் ஒரு மீனவர் வாழ்க்கை வாழ்ந்தார். துன் அலி மட்டுமே ராஜா காசிமைக் கவனித்துக் கொண்டார்.

இந்தக் கட்டத்தில் ராஜா ரோக்கானை ராஜா காசிம் எதிர்க்கத் தொடங்கினார். துன் அலி ஆதரவு வழங்கினார். அத்துடன் மலாக்கா மக்கள் பலரும் ஆதரவு வழங்கினார்கள்.

அதன் பின்னர் நடந்த கைகலப்பில் ராஜா ரோக்கானும்; பரமேசுவர தேவா ஷாவும் கொல்லப்பட்டனர்.

ராஜா ரோக்கான்

வரலாற்றுச் சான்றுகளின்படி, துன் அலி மற்றும் அவரின் மருமகன், ராஜா காசிம் (Raja Kassim) இருவரும்; ராஜா ரோக்கான் (Raja Rokan) என்பவரைக் கொலை செய்ய சதி செய்தனர். ராஜா ரோக்கானை அரண்மனை அதிகாரிகளுக்குப் பிடிக்காதது, ஒரு முக்கியக் காரணமாகும்.[4]

ராஜா ரோக்கான் மீது தாக்குதல் நடந்த போது, மலாக்கா மன்னர் பரமேசுவர தேவா ஷாவின் அருகில் ராஜா ரோக்கான் இருந்தார். ஆத்திரம் அடைந்த ராஜா ரோக்கான், மன்னர் பரமேசுவர தேவா ஷாவைக் கத்தியால் குத்தினார்.

சுல்தான் முசபர் ஷா

துன் அலியும் ராஜா காசிமும் மன்னர் பரமேசுவர தேவா ஷாவைக் காப்பாற்றுவதில் தோல்வி அடைந்தனர். அதன் பின்னர் ராஜா காசிம் மலாக்காவின் மன்னராக நியமிக்கப்பட்டார். அவரை துன் அலிதான் மன்னராக நியமித்தார்.

ராஜா காசிம் மலாக்காவின் மன்னரான பின்னர் தன் பெயரைச் சுல்தான் முசபர் ஷா (Sultan Muzaffar Shah) என்று மாற்றிக் கொண்டார்.[3]

துன் அலி பதவி விலகல்

அதன் பின்னர் பெண்டகாரா துன் பேராக் (Bendahara Paduka Raja Tun Perak) முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார். புதிதாக அரியணை ஏறிய சுல்தான் முசாபர் ஷாவின் ஆலோசனையின் பேரில், துன் அலி 1446-இல் பதவி விலகினார்.

மலாக்கா சுல்தான்கத்தின் ஆட்சியாளர்கள்

மலாக்கா சுல்தான்கள் ஆட்சி காலம்
பரமேசுவரா
1400–1414
மெகாட் இசுகந்தர் ஷா
1414–1424
சுல்தான் முகமது ஷா
1424–1444
பரமேசுவரா தேவ ஷா
1444–1446
சுல்தான் முசபர் ஷா
1446–1459
சுல்தான் மன்சூர் ஷா
1459–1477
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா
1477–1488
சுல்தான் மகமுட் ஷா
1488–1511
சுல்தான் அகமட் ஷா
1511–1513
சுல்தான் மகமுட் ஷா
1513–1528

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

பரமேசுவரா தேவ ஷா
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
சுல்தான் முகமது ஷா
மலாக்கா சுல்தான் பின்னர்
சுல்தான் முசபர் ஷா

1. Modul Latihan Pengajaran dan Pembelajaran Sejarah, Pusat Perkembangan Kurikulum Kementerian Pendidikan Malaysia.

2. Malaysia Kita, International Law Book Services, Kuala Lumpur, 2005

மேலும் காண்க

"https://tamilar.wiki/index.php?title=பரமேசுவரா_தேவ_ஷா&oldid=27017" இருந்து மீள்விக்கப்பட்டது