மெகாட் இசுகந்தர் ஷா
மெகாட் இசுகந்தர் ஷா Megat Iskandar Shah | |
---|---|
மலாக்காவின் 2-ஆவது சுல்தான் | |
ஆட்சி | மலாக்கா சுல்தானகம்: 1414 – 1424 |
முன்னிருந்தவர் | பரமேசுவரா |
பின்வந்தவர் | சுல்தான் முகமது ஷா |
மரபு | மலாக்கா சுல்தானகம் |
தந்தை | பரமேசுவரா |
இறப்பு | 1424 |
சமயம் | இசுலாம் |
மெகாட் இசுகந்தர் ஷா அல்லது ராம விக்கிரமா (மலாய் மொழி: Sultan Megat Iskandar Shah ibni Almarhum Raja Parameswara; ஆங்கிலம்: Megat Iskandar Shah of Malacca); என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் இரண்டாவது அரசர் ஆவார். இவர் பரமேஸ்வராவின் மகன் என்று நம்பப்படுகிறது.
மலாக்காவின் இரண்டாவது ஆட்சியாளரான மெகாட் இசுகந்தர் ஷாவின் பதவி குறித்து வரலாற்றுக் கருத்து முரண்பாடுகள் உள்ளன. மெகாட் இசுகந்தர் ஷா என்பவர் பரமேசுவரா என்பவராக இருக்கலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.
பொது
பரமேசுவரா இஸ்லாமியராக மாறி தன் பெயரை மாற்றிய பிறகு இந்தப் பெயரைப் பெற்று இருக்கலாம் என்றும் சிலர் வாதிடுகின்றனர். ஆனால் வேறு சிலர் இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையில் மெகாட் இசுகந்தர் ஷா என்பவர் பரமேசுவரா அல்ல. அவர் வேறு ஒருவர். அவர்தான் மலாக்காவின் இரண்டாவது ஆட்சியாளர் என்று கூறுகின்றனர்.[1]
மெகாட் இசுகந்தர் ஷா சீனாவின் மிங் பேரரசுடன் நல்ல உறவைப் பேணி, சீனாவுக்குத் தொடர்ந்து திறை செலுத்தினார். போர்த்துகீசிய ஆதாரங்களின்படி, அவர் சிங்கப்பூருக்குப் பதிலாக மலாக்காவின் வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சிகள் செய்தார்.[2]
ராம விக்கிரமா
சீனாவின் மிங் சி லு காலக் குறிப்புகள் (Ming Chronicles); பரமேசுவராவின் மகனை ஸ்ரீ ராம விக்கிரமா (மெகாட் இசுகந்தர் ஷா) என்று குறிப்பிடுகின்றன. 1414-ஆம் ஆண்டில் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார்.[3]
அவர் பயணம் செய்தது 5-ஆம் தேதி அக்டோபர் 1414. தன்னுடைய தந்தையாரைப் பரமேசுவரா என்று ஸ்ரீ ராம விக்கிரமா (மெகாட் இசுகந்தர் ஷா) அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவர் இறந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.[4]
சான்றுகளில் முரண்பாடுகள்
மலாக்காவின் தொடக்கக் கால வரலாற்றில் மலாய், சீன மற்றும் போர்த்துகீசிய சான்றுகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, மலாக்கா இராச்சியத்தின் தொடக்கக் கால ஆட்சியாளர்கள் பற்றிய கருத்துக்களில் சில வேறுபாடுகள் உள்ளன.
மலாக்காவை நிறுவியவர் இசுகந்தர் ஷா என்று மலாய் காலச் சுவடுகள் (Malay Annals) சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் மலாக்காவை நிறுவியவர் பரமேசுவரா என்றும் மெகாட் இசுகந்தர் ஷா என்பவர் பரமேசுவராவின் மகன் என்றும் போர்த்துகீசிய சான்றுகள் கூறுகின்றன.
மிங் அரசமரபு சான்றுகள்
அதே வேளையில் சீனாவின் மிங் அரசமரபு சான்றுகள், மெகாட் இசுகந்தர் ஷா எனும் பெயரை பரமேசுவராவின் மகன் என்று பதிவு செய்துள்ளன.
சீனாவின் மிங் பேரரசுடன் சுமுகமான உறவுகள் 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலேயே ஆரம்பித்தன.[5] பரமேஸ்வரா இரு முறைகள் சீனாவிற்குச் சென்று யோங்லே (r. 1402–1424) (சீனம்: 永樂) எனும் சீன மன்னரைச் சந்தித்து உறவாடி இருக்கிறார்.
சீனா - மலாக்கா தூதரக உறவுகள்
யோங்லே (Yongle) மாமன்னர் காலத்தில், பரமேஸ்வரா சீனாவிற்கு இரு முறைகள். சென்று இருக்கிறார். முதல் முறை: 1405 அக்டோபர் 03-ஆம் தேதி. இரண்டாவது முறை: 1411 ஆகஸ்டு 04-ஆம் தேதி.
பரமேசுவரா எப்போது சீனாவிற்குப் போனார். அங்கே என்ன நடந்தது போன்ற உண்மையான விவரங்கள் சீனா மிங் சி லு வரலாற்றுப் பதிவுகளில் எழுதி வைக்கப்பட்டு உள்ளன.
மிங் சி லு (Ming Shi-lu) என்பது சீனா மிங் வம்சத்தின் வரலாற்றுப் பதிவுகள். ஆங்கிலத்தில் வெரிடபிள் ரிக்கார்ட்ஸ் (Veritable Records). 1368-ஆம் ஆண்டில் இருந்து 1644-ஆம் ஆண்டு வரையிலான சீனா நாட்டு வரலாற்றுப் பதிவுகள்.
சீனாவை ஆட்சி செய்த மிங் பேரரசர்களின் காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த மிங் சி லு பதிவுகளில் உள்ளன. பரமேசுவராவும் அவரின் வாரிசுகளும் மலாக்காவை 1398-ஆம் ஆண்டில் இருந்து 1511-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து இருக்கிறார்கள்.
மலாக்காவின் கடல் வழி வாணிகம்
பரமேஸ்வரா மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது அவருக்குத் துணையாகச் சீனக் கடல் பகுதித் தலைவர்கள் செங் கே (Zheng He) என்பவரும் இங் சிங் என்பவரும் மலாக்கா வந்துள்ளனர். சீனா-மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்கா பேரரசிற்குச் சீனா பாதுகாவலராக விளங்கியது.
அதனால் சயாம் நாடும் மஜாபாகித் அரசும் மலாக்காவின் விவகாரங்களில் தலையிடவில்லை. இந்தக் காரணத்தினால் மலாக்காவின் கடல் வழி வாணிகம் பெருகத் தொடங்கியது. சீனா, இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மலாக்கா ஒரு முக்கிய வாணிகத் தளமாகவும் புகழ் பெற்று விளங்கியது.
மிங் வம்சாவழியினர்
1368-ஆம் ஆண்டு தொடங்கி 1644-ஆம் ஆண்டு வரை மிங் வம்சாவழியினர் (Ming dynasty) சீனாவின் ஆளும் வம்சமாக இருந்தது. மகா மிங் வம்சம் (Great Ming) என்று அழைப்பது உண்டு. சீனாவின் கடைசி ஏகாதிபத்திய வம்சமாகும். இவர்கள் ஹான் இனத்தைச் சேர்ந்த சீனர்கள்.
இந்தப் பேரரசர்களின் காலத்தின் பதிவுகளைத் தான் மிங் வம்சாவழி வரலாற்றுச் சுவடுகள் என்றும் மிங் சி லு (Ming Shi-lu) என்றும் அழைக்கிறார்கள்.
மிங் சி லு சீனப் பதிவுகள் பரமேசுவராவை பாய்-லி-மி-சு-லா (ஆங்கிலம்: Bai-li-mi-su-la; சீனம்: 拜里迷蘇剌) என்று அழைக்கின்றன. அவருடைய மகன் மெகாட் இசுகந்தர் ஷாவை (ஆங்கிலம்: Mu-gan Sa-yu-ti-er-sha; சீனம்: 母幹撒于的兒沙) என்றும் அழைக்கின்றன.[3]
மலாக்கா சுல்தான்கள்
மலாக்கா சுல்தான்கள் | ஆட்சி காலம் |
---|---|
பரமேசுவரா | |
மெகாட் இசுகந்தர் ஷா | |
சுல்தான் முகமது ஷா | |
பரமேசுவரா தேவ ஷா | |
சுல்தான் முசபர் ஷா | |
சுல்தான் மன்சூர் ஷா | |
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா | |
சுல்தான் மகமுட் ஷா | |
சுல்தான் அகமட் ஷா | |
சுல்தான் மகமுட் ஷா |
மேற்கோள்கள்
- ↑ Cheryl-Ann Low. "Iskandar Shah". Singapore Infopedia (National Library Board). http://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_1540_2009-07-06.html.
- ↑ Miksic, John N. (15 November 2013), Singapore and the Silk Road of the Sea, 1300–1800, NUS Press, pp. 163–164, ISBN 978-9971695743
- ↑ 3.0 3.1 Wang, G. (2005). "The first three rulers of Malacca". in L., Suryadinata. Admiral Zheng He and Southeast Asia. International Zheng He Society / Institute of Southeast Asian Studies. பக். 26–41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9812303294. https://books.google.com/books?id=DtaBBgAAQBAJ&pg=PA26.
- ↑ "明史/卷325". https://zh.wikisource.org/wiki/%E6%98%8E%E5%8F%B2/%E5%8D%B7325#.E6.BB.BF.E5.89.8C.E5.8A.A0.
- ↑ Wade 2005, ப. Search - Malacca
வெளி இணைப்புகள்
- [1] மெகாட் இசுகந்தர் ஷா
மேலும் காண்க
- சுமா ஓரியன்டல் (Suma Oriental) - written by Tom Pires after the Capture of Malacca (1511) in the early 16th century. Other Portuguese sources such as those given by Afonso de Albuquerque also mentioned Parameswara..