பன்னிரு படலம்
பன்னிருபடலம் மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று. இப்பெயருள்ள ஒரு நூல் இருந்தது என்பதை இலக்கணநூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது புறப்பொருள் இலக்கணம் கூறும் நூல். இதன் வழிநூல் புறப்பொருள் வெண்பாமாலை.
அகத்தியரின் மாணாக்கர் 12 பேர். புறத்திணைகள் 12. பன்னிரண்டு பேரும் பன்னிரண்டு திணைகளில் நூற்பா எழுதினர். அவற்றின் தொகுப்பே பன்னிருபடலம் என்னும் கருத்து நிலவிவந்தது. 1.தொல்காப்பியன், 2.அதங்கோட்டாசான், 3.துராலிங்கன், 4.செம்பூட்சேய், 5.வையாபிகன், 6.வாய்ப்பியன், 7.பனம்பாரன், 8.கழாரம்பன், 9.அவிநயன், 10.காக்கைபாடி, 11.நற்றத்தன், 12.வாமணன் ஆகிய பன்னிருவர் அந்த மாணாக்கர் என்று பேரகத்தியத்திரட்டு என்னும் நூலில் பவானந்தம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
- புறப்பொருள் வெண்பாமாலை பாயிரம்
- மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
- தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்
- தன்பால் தண்டமிழ் தாவின்று உணர்ந்த
- துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல்
- பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
- பன்னிருபடலம்.
12 மாணாக்கர்களில் ஒருவர் தொல்காப்பியர் என்றும், அவர் வெட்சிப்படலம் எழுதினார் என்றும் அக்காலத்தில் கருதிவந்தனர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதும் இளம்பூரணர் பன்னிருபடல நூற்பாக்களை எடுத்துக்காட்டி அவை தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியரால் எழுதப்பட்டவை அன்று என மறுத்துள்ளார்.
தொல்காப்பியர் அகத்திணை 7, அவற்றின் புறத்திணை 7 என்று தொல்காப்பியத்தில் விளக்கியுள்ளார். பன்னிருபடலம் புறத்திணை 12 என்கிறது. பன்னிருபடலத்தை வழிமொழிந்து எழுதப்பட்ட நூல் ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள்-வெண்பாமாலை. இதில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என்னும் 12 திணைகள் உள்ளன. இந்த 12 திணைகள் அடங்கிய நூலே பன்னிருபடலம் என்பது இளம்பூரணர் குறிப்பால் தெரியவருகிறது.
பன்னிருபடலம் பற்றிப் பல உரையாசிரியர்கள் கூறும் கருத்துகளை ஒன்றுதிரட்டி மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்றாகக் காட்டியவர் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி.
பன்னிருபடலம் பற்றிய மேற்கோள்-குறிப்புகள்
- இறையனார் அகப்பொருள் உரை
- அளவினால் பெயர் பெற்றது பன்னிருபடலம்.
- தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் (செய்யுளியல் 185 உரை)
- ஓத்தினால் பிண்டமாயிற்று பன்னிருபடலம்.
- தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர்
- பன்னிருபடலம் முதல்-நூலாக வழிநூல் செய்தார் வெண்பாமாலை ஐயனாரிதனார்.
- இளம்பூரணர் மேற்கோள் (தொல்காப்பியம் – புறத்திணையியல் – அறுவகைப்பட்ட பார்ப்பன-பக்கம் என்பதற்கு விளக்கமாத் தந்துள்ள நூற்பா)
- பனியும் வெயிலும் கூதிரும் யாவும்
- துனியில் கொள்கையொடு தொன்மை எய்திய
- தணிவுற்று அறிந்த கணிவன்-முல்லை.
- சீவக சிந்தாமணி நூலுக்கு உரை எழுதிய இளம்பூரணர் மேற்கோள் (கோவிந்தையார் இலம்பகம் 20 உரை)
- பல்லாக் கொண்டார் ஒல்லார் என்னும்
- பூசல் கேட்டுக் கையது மாற்றி.
- யாப்பருங்கல விருத்தியுரையில் பன்னிருபடல நூற்பாக்கள் சில காட்டப்பட்டுள்ளன. அவற்றால் வலுவூட்டப்படும் கருத்துக்கள்
- அகத்திணை அகவலுள் வஞ்சியடி வராது
- ‘அறமும் இன்பமும் அகலாதாகிப், புறம் எனப்படுவது பொருள் குறித்தன்றே
- கைக்கிளை, பெருந்திணை ஆகியவை அகத்திணைப்புறம்.
- பொருதல் தும்பை
- வெட்சித்திணையானது தன்னுறுதொழில், வேந்துறுதொழில் என இருவகைப்படும் (இந்தக் கருத்து தொல்காப்பியதோடு மாறுபடுகிறது என்கிறார் இளம்பூரணர்)
- கரந்தை புண்ணொடு வருதல் (கரந்தை ஆனிரை மீட்டல் என்று கூறி இதன் வழிநூல் புறப்பொருள் வெண்பாமாலை மாறுபடுகிறது)
பயன்பாட்டுச் சிறப்பு
புறநானூற்றைத் தொகுத்தவர் அதில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளார். தொல்காப்பியர் அகத்திணையாகக் கொள்ளும் கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றைப் புறநானூற்றுத் திணைக்குறிப்பு புறத்திணையில் வைத்துள்ளது. தொல்காப்பியரின் புறத்திணையில் இல்லாத பொதுவியல் என்னும் திணைக்குறிப்பு புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பபட்டுள்ளது. இவற்றால் தொல்காப்பியப் பாகுபாடு புறநானூற்றுப் பாடல்களின் திணைக்குறிப்புக்குப் பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது.
துறைக் குறிப்புக்குப் புறப்பொருள் வெண்பாமாலை பயன்படுத்தப்படவில்லை என்பதை புறநானூற்றில் உள்ள இயன்மொழி என்னும் துறையிலுள்ள பாடல்களால் அறியலாம்.
எனவே, புறநானூற்றுத் திணை, துறைக் குறிப்புகளுக்குப் பயன்பட்ட இலக்கண நூல் பன்னிரு படலம் எனக் கொள்ளக்கிடக்கிறது.
கருவிநூல்கள்
- மயிலை சீனி வேங்கடசாமி, மெய்யப்பன் தமிழ் ஆய்வகம், 2001
- ச.வே.சுப்பிரமணியன், தமிழ் இலக்கண நூல்கள் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம், 2007
- தொல்காப்பியம், பொருளதிகாரம், பேராசிரியர் உரை, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1959 இரண்டாம் பதிப்பு,
- தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணர் உரை
- யாப்பருங்கலம் Madas Government Oriental Manuscripts Series No. 66 - 1960