பதிபசுபாசத் தொகை உரை

தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர்

மறைஞான சம்பந்தர் சித்தாந்தநெறியை விளக்கும் ஆசிரியர். இவரது மாணவர் மறைஞான தேசிகர். இவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். ஆசிரியர் பதிபசுபாசத் தொகை என்னும் நூலை இயற்றினார். மாணவர் அதற்கு உரை எழுதினார். நூல் 25 குறட்பாக்கள் மட்டுமே கொண்ட சிறு நூல். உரை மிக விரிவானது.[1]

பாயிரம் 5
பதியியல் 8
பசுவியல் 4
பாசம் 2
அனுக்கிரக இயல் 3
அதிகாரி - பயன் 3

எனப் பகுக்கப்பட்டுக் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையில் பாடல்களைக் கொண்டுள்ளது.

உரை

இதற்கு இவர் எழுதியுள்ள உரையின் ஒரு பகுதி எடுத்தக்காட்டாக இங்குத் தரப்படுகிறது.

உடலொலியின் மூல வொலியுறைதல் போல
கடவுளுயிர் தோறுமுறும் காண்.[2]

இந்தக் குறட்பாவுக்கு இந்த உரைநூல் தரும் உரை:

எவ்வெழுத்தும் [3] உச்சரிக்கப்படுங்கால் அகர ஒலியே முதற்கண் நின்று அவ் எழுத்துக்களை இயக்கி ஒலிப்பிக்கும் தன்மை பற்றி 'மூலவொலி' என்று கூறினார்.
மெய்யொலிகள் உயிர்த் துணையாய்ப் பிறக்குமேயன்றித் தாமே தனித்துப் பிறக்கும் வன்மை உடையன அல்ல ஆதலால் 'உடலொலி' என்றார்.
ஒற்றொலியைக் கண்ணொளிக்கும் உயிரொலியைக் கதிரவன் ஒளிக்கும் சமப்படுத்திக் கூறுவார் எழுத்துக்கள் தோறும் அகரம் சென்றிருத்தல் போல் ஆன்மாக்கள் தோறும் சிவன் வியாபித்திருப்பன்.
அகரம் இன்றி எழுத்துக்கள் இயங்காத் தன்மை போல் இறைவனை இன்றி ஆன்மாக்களும் இயங்கா.
அகரம் எழுத்துக்களுக்கெல்லாம் முதலானாற் போல இறைவனும் ஆன்மாக்களுக்கு எல்லாம் முதல்வன் ஆவான்.
அகரம் தனித்தும் மெய்யோடு கூடியும் இயங்குதல் போல இறைவன் ஆன்மாக்களுக்கு உடனாயும், வேறாயும் நிற்பன்.
மற்றவை ஈண்டு விரிப்பின் பெருகும்.
அடிக்குறிப்பு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 31. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. உடல் ஒலியின் மூல ஒலி உறைதல் போல
    கடவுள் உயிர்தோறும் உறும் காண்.
    இது இக் குறளின் பொருள் நோக்குச் சொற்பிரிப்பு
  3. எந்த எழுத்தும்
"https://tamilar.wiki/index.php?title=பதிபசுபாசத்_தொகை_உரை&oldid=15714" இருந்து மீள்விக்கப்பட்டது