பட்டினத்தார் புராணம்
பட்டினத்தார் புராணம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதனை இயற்றியவர் யார் எனத் தெரியவில்லை. பூம்புகார்ச் சருக்கம், ஆட்கொண்ட சருக்கம், துறவுச் சருக்கம் என்னும் சருக்கப் பிரிவுகள் இதில் உள்ளன. [1]
இதில் கூறப்பட்டுள்ள கதை
பட்டினத்தார் புகார் நகர வணிகர் குலத்தில் தோன்றியவர். திருவெண்காடு என்னும் ஊரில் வாழ்ந்துவந்தார். அதனால் திருவெண்காடர் என அழைக்கப்பெற்றார். இவர் செல்வ வளம் மிக்கவர். திருவிடைமருதூரில் வாழ்ந்துவந்த சிவசருமர் என்ற சிவவேதியா் திருமணம் செய்துகொள்ள பணம் இல்லாமல் வருந்தினார். இறைவன் ஓர் இளம்பிள்ளை உருவில் சிவசருமர் முன்னர்த் தோன்றித் தன்னை விற்றுப் பணம் பெற்றுக்கொள்ளும்படி கூறினார். சிவசருமர் விற்ற குழந்தையை ஆயிரம் பொன் கொடுத்து வாங்கி மருதவாணர் என்னும் பெயர் சூட்டித் திருவெண்காடர் வளர்த்துவந்தார். குழந்தை இறைவன் ஆதலால் திருவெண்காடர் இல்லத்தில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன.
மருதவாணரைத் திருவெண்காடர் பெரிதும் மதித்துப் போற்றிவந்தார். உலகியல்பின் நிலையாமையைத் திருவெண்காடருக்கு உணர்த்த விரும்பிய மருதவாணர் ஒரு நாள் ஒரு காதறுந்த ஊசியையும் நூலையும் ஒரு பட்டுத்துணியில் சுற்றித் திருவெண்காடரிடம் கொடுக்கும்படிச் சொல்லிவிட்டு மறைந்தார். மருதவாணரைக் காணாமல் தேடிய திருவெண்காடர் அவர் தந்து சென்ற பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்து தன் செல்வமும் புகழும் இப்படிப்பட்டது என உணர்ந்து துறவு பூண்டார்.
சுடுகாட்டுச் சாம்பல் குவியலின்மீது கோவண ஆண்டியாய் அமர்ந்திருந்த இவரை அந்த நாட்டு அரசன் சேந்தன் [2] 'இந்தத் துறவுக் கோலத்தின் பயன் என்ன' என வினவியபோது, 'நீ நிற்க யாம் இருக்க' என விடை பகர்ந்தார். 'எனக்கு என்ன கட்டளை' என அரசன் சேந்தன் வினவினான். 'உன் மனம்போல் செய்க' எனப் பட்டினத்தார் விடையளித்தார்.
பின்னர் இவர் பல இடங்களிலும் பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்துவந்தார். இவரது இந்தச் செயல் தமக்கு அவமானம் தருவதாக அவரது உறவினர்கள் கருதினர். அவரைக் கொல்லக் கருதி நஞ்சு ஊட்டிய அப்பம் ஒன்றை அவருக்குத் தந்தனர். இதனை உணர்ந்துகொண்ட பட்டினத்தார் 'தன் வினை தன்னைச் சுடும்' என்று கூறிவிட்டு அந்த அப்பத்தை தந்த அவரது கூரையில் செருகிவைத்தார். வீடு தீப்பற்றி எரிந்து சாம்பலானது.
தாயார் இறந்தபோது சுடுகாட்டில் பாடிய பாடல்கள் - பலருக்கு உபதேசம் - திருவிடைமருதூரில் சிவபெருமானே தண்ணீர் கொண்டுவந்து தந்து இவரது தாகத்தைத் தீர்த்தது - சிவபெருமான் தன் காலை இவர் மார்பின்மீது வைத்தது - இப்படிப் பல நிகழ்வுகளுடன் கதை தொடர்கிறது. சிதம்பரம், தினைநகர், திருப்பாதிரிப் புலியூர், திருவதிகை, திருவெண்ணெய் நல்லூர், திருவண்ணாமலை முதலான இடங்களில் வழிபாடு செய்துகொண்டே பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்துவந்தார். காஞ்சியில் இவர் பிச்சை கேட்டபோது இவரைத் திருடர் என எண்ணிப் பலர் நையப் புடைத்தனர். பின்னர் உண்மை உணர்ந்து பணிந்தனர்.
இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து தன்னை மணலில் புதைக்கும்படி செய்து இலிங்க உருவில் எழுந்தாராம். இங்கு இவரது சமாதி உள்ளது.
வேறு வகையான கதைகள்
- திருவெண்காட்டிகள் சரிதம் என்னும் நூல் இந்தக் கதையை வேறு வகையில் கூறுகிறது. திருவிடைமருதூரில் வாழ்ந்த சிவநருமர், சுசீலை ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.
- தண்டபாணி தேசிகர் செய்த புலவர் புராணம் என்னும் நூல் மருதவாணர் பாணர் குலத்தவரால் மந்திர உபதேசம் பெற்றதாகக் குறிப்பிடுகிறது.
காதற்ற ஊசி - பாடல்
பத்திரகிாியாா்
பட்டினத்தாாின் சீடராக விளங்கியவா் பத்திரகிாியாா். இவா் உஜ்ஜையினி நாட்டு மகாராஜா. வடமொழியில் மட்டுமல்லாது தமிழிலும் புலமை பெற்றவா். சிருங்கார சதகம் பாடுவதில் வல்லவா். உஜ்ஜையினியில் பட்டினத்தாரைச் சந்தேகப்பட்டு சிறையில் அடைத்தாா். பின்னா்ப் பட்டினத்தாாின் அருமை உணா்ந்து அவரது சீடராக மாறினாா். ராஜா பா்த்ருஹாி என்ற இவரது பெயா் பத்திரகிாியாா் என மறுவியது.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 306.
- ↑ ஒன்பதாம் நூற்றாண்டுச் சேந்தன் இந்தக் கதையில் ஏற்றிக் கூறப்பட்டுள்ள வரலாற்றுக் குழப்பம் இங்கு உள்ளது
- ↑ கிளைத்திருக்கும் கைகள்
- ↑ பொழுது இறங்கிய காலத்திலும்
- ↑ சாகும்போது செல்வம் உடன் வராது
- ↑ பாடல் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
- ↑ இது கட்டளைக் கலித்துறை யாப்பால் அமைந்துள்ள பாடல்
- ↑ காது இல்லாத ஊசியில் நூலைக் கோக்க முடியாது. அது போல உயிர் நீங்கிய உடலில் உயிரை ஒட்டவைக்க முடியாது