நரசய்யா

காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் ஒரிசாவில் பிறந்தவர். தனது தொடக்கக் கல்வியைத் தமிழ்நாட்டில் பயின்றார். இவர் கப்பற் பொறியியலில் பயிற்சி பெற்றவர். 1949 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் சேர்ந்து கடற்படைக் கப்பல்களில் பத்தாண்டுகள் பணியாற்றினார். 1963 ஆம் ஆண்டில் கடற்படையில் இருந்து விலகிய பின் இரண்டு ஆண்டுகள் வணிகக் கப்பல்களில் பணியாற்றினார். 1965 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளராகச் சேர்ந்தார். இக்காலத்தில் இவர் வங்கதேச விடுதலைப்போரிலும் பங்கு கொண்டுள்ளார். 1991ல் ஓய்வு பெற்றார். பின்னர் இந்திய துறைமுகச் சங்கத்தின் ஆலோசகராக இருந்த நரசய்யா உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994 ஆம் ஆண்டு கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம் பெற்றார். 1996 ஆம் ஆண்டுவரை இவர் இத்திட்டத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

எழுதிய நூல்கள்

  • நரசய்யா சிறுகதைகள் (1997)
  • கடல்வழி வணிகம் (2005)
  • தீர்க்க ரேகைகள் (2003)
  • சொல்லொணாப்பேறு (2004)
  • ஆலவாய் (2009)
  • கடலோடி (2004)
  • மதராசபட்டினம் (2006)
  • துறைமுக வெற்றிச் சாதனை (2007)
  • கடலோடியின் கம்போடியா நினைவுகள் (2009)

விருதுகள்

இவரது நூற்றுக்கும் மேலான சிறுகதைகள், மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இரண்டாம் சிறுகதைத் தொகுதி திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருதைப் பெற்றிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது

இவர் எழுதிய நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது.

  1. "சொல்லொணாப் பேறு" எனும் நூல் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  2. "கடல்வழி வணிகம்" எனும் நூல் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  3. "மதராசப்பட்டினம்" எனும் நூல் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. (மதராசப்பட்டினம் என்னும் நூல் பின்னர் ஆங்கிலத்திலும் மட்ராஸ் என்னும் பெயரில் வெளியானது.)
  4. "கம்போடியா நினைவுகள்" எனும் நூல் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பயண இலக்கியம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

அடிக்குறிப்புகள்


மேலும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நரசய்யா&oldid=25899" இருந்து மீள்விக்கப்பட்டது