நடை (சிற்றிதழ்)

நடை என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டினெ, சேலத்தில் 1968 அக்டோபரில் இருந்து காலாண்டிதழாக வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பெயராக கோ. கிருஷ்ணசாமி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் இது பலரின் கூட்டு முயற்சியில் வெளியானது.

இலக்கிய இதழில் நவீன ஓவியங்களை முதலில் இந்த இதழ் அறிமுகப்படுத்தியது. இந்த இதழில்தான் ஞானக்கூத்தன் புதுக்கவிதை எழுதத் தொடங்கினார். இந்த இதழ் புத்தக வடிவத்தில், 'ஆனந்த விகடன்' (தற்போதைய குமுதம்) அளவில், கனத்த அட்டையுடன் தயாரிக்கப்பட்டது. எட்டு இதழ்கள்தான் ( இரண்டு வருடங்கள்) வெளிவந்தன.

படைப்புகள்

ந. முத்துசாமியின் சிறுகதைகளையும் நாடகத்தையும் நடை வெளியிட்டுள்ளது. சி. மணி, செல்வம் என்ற பெயரில் கவிதை, பழந்தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். புதுக் கவிதையும் யாப்பிலக்கணமும் பற்றிய சிறப்பு இணைப்பு குறிப்பிடத்தகுந்தது. வே. மாலி என்ற பெயரிலும் அவர் சோதனை ரீதியான கவிதைகள் எழுதியுள்ளார். நெஞ்சங்கவரும் கற்பனையும், அருமையான சொற்கட்டும். இறுக்கமான உருவ அமைதியும், நுணுகிய பார்வையும், ஆழ்ந்த பொருள் நயமும் கொண்ட ஜப்பானியக் கவிதைகள் செல்வம் மொழி பெயர்ப்பில் வந்தன.

எழுத்து இதழில் எழுதி வந்த வி. து. சீனிவாசன், இரா. அருள், எஸ். வைத்தீஸ்வரன் முதலியவர்கள் நடையில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார்கள். வெ. சாமிநாதன் மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதினார். ‘விருந்து' என்ற தலைப்பில் புத்தக மதிப்புரைப் பகுதி பிரசுரமாயிற்று. எடுத்துக் கொண்ட புத்தகம் பற்றி விரிவாகவே மதிப்புரை எழுதப்பட்டது. ஓவியம் போன்ற கலைகள் பற்றியும் கட்டுரைகள் வெளியாயின. ஐராவதம், ஞானக்கூத்தன் போன்ற புதியவர்களும், அசோகமித்திரன், நகுலன், நீல. பத்மநாபன், மா. தக்ஷிணாமூர்த்தி, கோ. ராஜாராம் ஆகியோரும் நடையில் எழுதினார்கள்.[1]

இரண்டு ஆண்டுகள் வெளிவந்த இந்த இதழ் பின்னனர் நிறுத்தப்பட்டது.

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நடை_(சிற்றிதழ்)&oldid=17636" இருந்து மீள்விக்கப்பட்டது