தொல்காப்பியம் கிளவியாக்கச் செய்திகள்
தொல்காப்பியம் எழுத்து சொல் பொருள் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும், அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும், தமிழ் மரபையும் விளக்குகிறது.
ஒவ்வொரு பகுதியிலும் 9 இயல்கள் உள்ளன. அவற்றில் இரண்டாவது சொல்லதிகாரத்தில் முதலாவது இயல் கிளவியாக்கம் சுருக்கம். இந்த இயலில் சொல்லப்படும் செய்திகளை நூற்பா வரிசை எண்ணுடன் இங்குக் காணலாம். கிளவியாக்கத்தில் 61 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
திணை, பால், எண்
- மக்களைக் குறிக்கும் சொல் உயர்திணை. மக்கள் அல்லாத பிறவற்றைக் குறிக்கும் சொல் அஃறிணை. இப்படித் திணை 2. -1
- ஆணைக் குறிக்கும் சொல் ஆண்பால். பெண்ணைக் குறிக்கும் சொல் பெண்பால், பலரைக் குறிக்கும் சொல் பலர்பால். இப்படி உயர்திணையில் 3 பால். -2
- ஒரு பொருளைக் குறிக்கும் சொல் ஒன்றன்பால். பல பொருளைக் குறிக்கும் சொல் பலவின்பால். இப்படி அஃறிணையில் 2 பால். -3
- பேடி என்னும் சொல்லுக்குப் பால் இல்லை. அதன் தொடர்மொழி பாலை உணர்த்தும்
- பேடி வந்தான், பேடி வந்தாள், பேடி வந்தார் -4
- தெய்வத்தைச் சுட்டும் பெயருக்கும் பால் இல்லை.
- இறைவன் வந்தான், திருமகள் வந்தாள், கடவுள் வந்தார், இறை என்று வைக்கப்படும் -4
- ன்-ஒற்று ஆண்பாலைக் குறிக்கும்
- உண்டான், உண்பான் -5
- ள்-ஒற்று பெண்பாலைக் குறிக்கும்
- உண்டாள், உண்பாள் -6
- ர்-ஒற்று, ப-எழுத்து, மார்-கிளவி ஆகிய மூன்றும் பலர்பாலைக் குறிக்கும்
- உண்டார், உண்ப, கொண்மார் வந்தார் (கொண்மார் – முற்றெச்சம்) -7
- து, டு, று –ல் முடியும் குற்றியலுகரம் ஒன்றன்பாலை உணர்த்தும்
- வந்தது, ‘குருதிப் பூவின் குலைக் காந்தட்டு(ஏ)’ – குறுந்தொகை 1, ஓடிற்று -8
- அ, ஆ, வ –முடிபு பலவின்பாலை உணர்த்தும்
- சென்றன, செல்லா (எதிர்மறை வினைமுற்று), உண்குவ (குறிப்பு வினைமுற்று) -9
- ன், ள், ர், ப, மார், கு, டு, று, அ, ஆ, வ – ஆகிய 11 எழுத்துகளும் இரண்டு திணைகளிலும் உள்ள ஐந்து பாலை வினைமுற்றில் உணர்த்தும் -10
- வினையில் தோன்றும் பாலறி கிளவியும், பெயரில் தோன்றும் பாலறி கிளவியும் மாறிவந்து மயங்கக் கூடாது
- அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார், அது வந்தது, அவை வந்தன என வரும். இவற்றில் மயக்கம் இல்லை. -11
- பேடி என்னும் சொல் பெண்பாலை உணர்த்தும். என்றாலும் அது ஆண்பாலைச் சுட்டி மயங்கும்.
- பேடி வந்தான் -12
வினா-விடை
- வினாவுக்கு ஏற்ற விடை நேரடியாகச் சொல்லவேண்டும்
- உன் கோ நாடு யாது? தமிழ்நாடு – இது வழா விடை.
- கருவூருக்கு வழி யாது? என் கையில் உள்ளது பூ – இது வழு விடை -13
- வினாவுக்கு வினா விடை
- சாத்தா உண்ணாயோ? – உண்ணேனோ? – இது சரி -14
- விடையைக் குறிப்பு-மொழியாலும் உணர்த்தலாம்.
- உறையூருக்குச் செல்லாயோ? – கால் வலிக்கிறது, வழிப்பறி நிகழும் -15
- உறழ் விடை
- கொற்றி கூந்தல் நல்லதா, சாத்தி கூந்தல் நல்லதா? – கொற்றி கூந்தலினும் சாத்தி கூந்தல் நல்லது. சாத்தி கூந்தலினும் கொற்றி கூந்தல் நல்லது – இப்படி விடை சொல்லுவது சரி -16
வழக்கு
- தகுதி வழக்கு
- செத்தாரைத் துஞ்சினார் எனல்.
- சுடுகாட்டை நன்காடு எனல்
- இடக்கரடக்கல்
- கால் கழுவி வருகிறேன் (மலம்),
- கண் கழுவி வருகிறேன் (பீளை)
- மரூஉ
- சோழநாட்டைச் சோணாடு எனல் -17
- இனச்சுட்டு இல்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
- ‘மாக்கடல் நிவந்து எழுதரு செஞ்ஞாயிற்றுக் கவினினை மாதோ’ (புறம் 4),
- ‘வெண்கோட்டு யானை சோணை படியும்’ (குறுந்தொகை 75) -18
- இயற்கைப் பொருள்களை அதன் இயல்புத் தன்மையுடன் சொல்லவேண்டும்
- நிலம் வலிது, நீர் தண்ணிது -19
- செயற்கைப் பொருள்களை அதன் ஆக்கமொடு சொல்லவேண்டும்
- மயிர் நல்லவாயின, பயிர் நல்லவாயின -20
- ஆக்கத்துக்குக் காரணம் உண்டு
- எண்ணெய் பூசியதால் மயிர் நல்லவாயின -21
- ஆக்கம் காரணம் இல்லாமலும் சொல்லப்படும்
- மயிர் நல்லவாயின -22
- பால் மயக்குற்ற ஐயக்கிளவி பயனிலையில் பன்மை கொள்ளும்
- ஒருவன் கொல்லோ, ஒருத்தி கொல்லோ, தோன்றுபவர் -23
- ஒருவன் கொல்லோ, ஒருத்தி கொல்லோ தோன்றும் அவ்வுரு – என்றும் கூறலாம் -24
- ஒன்று கொல்லோ, பல கொல்லோ வயலில் புகுந்த மாடு – என அஃறிணையில் கூறலாம் -24
- ஐயம் இல்லாவிட்டால் ஒருவன் அல்லன் ஒருத்தி எனக் கூறலாம் -25
- அடைமொழி, சினைமொழி, முதன்மொழி ஆகியவை இந்தத் தொடர்வரிசையில் அமையும்
- பெருந்தோள், சிறுமருங்குல், பேரமர்கட் பேதை -26
- வழக்கில் வரும் பன்மைக்கு இலக்கணம் சொல்ல முடியாது -27
- ஒருவனை அவர் வந்தார் எனல்
- ஒன்றனைக் கருடன் வந்தார் எனல்
- பசுவை என்தாய் வந்தார் எனல்
- ஒருத்தியை என் பாவை வந்தது எனல்
செல், வா, தா, கொடு
- செல், வா, தா, கொடு – சொற்கள் மூவிடத்தும் வரும் -28
- சென்றேன், சென்றாய், சென்றார்
- வந்தேன், வந்தாய், வந்தார்
- தந்தேன், தந்தாய், தந்தார்
- கொடுத்தேன், கொடுத்தாய், கொடுத்தார்
- – இவை இக்கால வழக்கு)
- எனக்கு வரும் பொருள், உனக்கு வரும் பொருள், அவருக்குச் செல்லும் பொருள், அவருக்குக் கொடுக்கும் பொருள் -29, 30
- எனக்குத் தரும் பொருள், உனக்குத் தரும் பொருள், அவருக்குச் செல்லும் பொருள், அவருக்குக் கொடுக்கும் பொருள் -29, 30
வினா
- யாது, எவன் – என்பவை அறியாததை அறிய வினவப்படும் -31
- யாது – அறிந்ததில் ஐயம் தீர்க்கவும் வினவப்படும் -32
- கண்களில் யாது மங்கிற்று?
- எண்ணிக்கையில் உம்மை வரும்
- கால் இரண்டும் வலிக்கிறது -33
- மன்னாப்பொருள் என்பது இருப்பிடம் இல்லாத பொருள். இதற்கும் உம் வரும்
- பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன் (இந்திரன்) கோயிலுள்ளும் இல்லை. -34
- பயறு உளதோ என்றால் உழுந்து அல்லது இல்லை என வணிகன் கூறலாம் -35
- உழுத்தம்பருப்பு அல்லது இல்லை என வேறு பருப்பு இல்லாமையைக் கூறலாம் -36
- பயறு அல்லது மிளகு இல்லை எனலாம். -37
சுட்டு முதலானவை
- சுட்டுச்சொல் வழிமொழிந்து வரும்
- கொற்றன் வந்தான், இவற்குச் சோறு கொடுக்க! -38
- செய்யுளில் சுட்டுச்சொல் முன்னரும் வரும். -39
- அதனால் என்னும் சொல்லும் பின்னர்தான் வரும் -40
- கந்தன் நல்லவன் அதனால் அவனை மணந்துகொள்க!
- சிறப்புப் பெயரும் முதலில்தான் வரும் -41
- சோழன் மணக்கிள்ளி
- சிறப்புப் பெயர் பலவாகவும் வரும் -42
- ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான்.
- தன்மைச்சொல்லோடு அஃறிணைச் சொல்லும் வரும் -43
- யானும் என் எஃகமும் சாரும்.
- ஒருவன், ஒருத்தி ஆகியவை ஒருமை -44
- வியங்கோளில் திணைவிரவுப் பெயர்கள் சேர்ந்து வரும் -45
- ஆனும் ஆயனும் செல்க!
- யாழ் மீட்டினார், குழல் ஊதினார், பறை முழக்கினார் என வேறு-வினை தருக -46
- யாழும், குழலும், பறையும் இயம்பினார் எனப் பொதுவினை தருக -47
- இரட்டைக்கிளவி பிரிந்து இசைக்காது -48
- பயிர் கருகருத்தது (கரும்பச்சை ஏறியது), நெஞ்சம் கறுகறுத்தது (பயந்தது), கண் கறுக்கறுத்தது (சினம் காட்டியது)
- ஒருபெயர்ப் பொதுச்சொல் -49
- பார்ப்பனச்சேரி (சேரி = சேருமிடம்), கமுகந்தோட்டம், ஒடுவங்காடு (ஒடுமரம் மிகுதியாக உள்ள காடு), காரைக்காடு (காரைமுள்-செடி மிகுதியாக உள்ள காடு)
- பிரிசொல் -50
- வடுகரசர் மக்கள் ஆயிரவர் பொருதார் (இங்கு மக்கள் என்பது பெண்மக்களைப் பிரித்து ஒதுக்கியது), ::பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டிலின் கீழ் நால்வர் மக்கள் இருந்தனர் (இங்கு மக்கள் என்பது ஆண்மக்களைப் பிரித்து ஒதுக்கியது)
- அரசன் ஆயிரம் யானை உடையன் (இதில் யானை என்பது பிடிகளைப் பிரித்து ஒதுக்கியது),
- நம்பி நூறு எருமை உடையன் (இதில் எருமை என்பது எருமைக்கடாக்களைப் பிரித்து ஒதுக்கியது)
- இருதிணைப் பெயர்களைச் சேர்த்து எண்ணினால் அஃறிணை முடிபு தரவேண்டும். -51
- 'வடுகர், அருவாளர், வான் கருநாடர், சுடுகாடு, பேய், எருமை என்றிவை ஆறும் குறுகார் அறிவுடையார்'
- ‘பாணன் பறையன் துடியன் கடம்பன் என்று அந்நான்கு அல்லது குடியும் இல்லை’ (புறம் 325)
- பலபொருள் ஒருசொல் இரண்டு வகை -52, 53, 54, 55
- 1.வினை-வேறுபடும் பலபொருள் ஒருசொல்
- மா பூத்தது (மாமரம்), மா ஓடிற்று (மான்), மாவும் மருதும் ஓங்கின (மாமரம்), மாவும் மரையும் மேய்ந்தன (மான்)
- 2.வினை-வேறுபடா பலபொருள் ஒருசொல்
- மா வீழ்ந்தது (மாமரம், மான்)
- தெரித்துமொழி கிளவி -56
- மழைநீர் கல்லில் பட்டுத் தெரிப்பது போலத் தெரித்து விடை சொல்வது தெரித்துமொழி-கிளவி எனப்படும். ::படிப்பவன் ஒருவனைப் பார்த்து மற்றொருவன் “படிக்கிறீர்” என்றால், “திருக்குறள் படிக்கிறேன்” எனக் கூறுவது ஒருவகைத் தெரித்துமொழி கிளவி.
- முன்னத்தின் உணரும் கிளவி என்று 18 சொற்களை எடுத்துக்காட்டி பிறவும் உள என்கிறார் தொல்காப்பியர் (அவை இங்கு அகரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன) -57,
- (காவிதி)-சிறப்பு, அடிமை, அரசு (வேந்து முதலானவை), ஆண்மை, இளமை, உறுப்பின் கிளவி (குருடு, செவிடு, முடம் – போன்றவை), காதல், குடிமை, குழவி, குழு, செறல், தன்மை திரிபெயர் (பேடி, மடமை - போன்றவை, பெண்மை, மகவு, மூப்பு, வன்மை, விருந்து, விறல்
- இவை உயர்திணையாகிய மக்களிடம் நிலவுபவை என்றாலும் அஃறிணை முடிவு கொள்ளும்,
- விருந்து வந்தது, குழு கூடிற்று, இளமை இனிது, அடிமை தீது – என்பதுபோல் வரும்.
- விருந்து வந்தார், அடிமை தொழுதான் – என்பது போலவும் வரும் -59
- பால்பிரிந்து இசையாக் கிளவி -58 உயர்திணையாக வரும்போதும் பால்பிரிந்து இசையாக்கிளவி என்று தொல்காப்பியர் 10 சொற்களை வரையறுக்கிறார். (அவை இங்கு அகர வரிசையில் தரப்படுகின்றன)
- உடம்பு (ஆண் உடம்பு, பெண் உடம்பு, பலர் உடம்பு, மான் உடம்பு, யானைகள் உடம்பு), உயிர், உலகம், காலம், சொல், ஞாயிறு, திங்கள், பால்வரைத்தெய்வம், பூதம் (நிலம், நீர், தீ, வளி, விண்), வினை (செய்தான், செய்தாள், செய்தார், செய்த்து, செய்தன என பொருத்திக்கொள்ளலாம்.)
- இந்தச் சொற்களை எந்தப் பாலோடும் இணைத்துக்கொள்ளலாம். என்றாலும் அஃறிணை முடிபே கொள்ளும்.
- எனினும் காலன் என்பது போன்ற சொல்லும் அமையும் -60
- இனம் செப்பல் -61
- மேலைச்சேரி வென்றது என்றால், கீழைச்சேரி தோற்றது என்பது இனம் செப்பல்.
- கண், தோள், முலை முதலானவற்றைக் பன்மையால் கூறவேண்டியதில்லை. -62 \ கண் மலர்ந்தது, தோள் உயர்ந்தது, முலை ஊறிற்று என்றாலே போதும்.
கருவிநூல்
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, ஆறுமுகநாவலர் பதிப்பு, 1934
- தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, டாக்டர் P.S. சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியது, பிரமோத ஆண்டு, 1932
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தி உரையும் பழைய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1964
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963