தி. கோ. சீனிவாசன்

தி. கோ. சீனிவாசன் (நவம்பர் 14, 1922 - அக்டோபர் 9, 1989) எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், அரசியல்வாதி எனப் பலத் தகுதிகளைக் கொண்டவர். திராவிட இயக்கப் படைப்பாளர் என்று அறியப் பட்டவர். திமுக தலைவர் அண்ணாதுரை மீது பற்றும் மதிப்பும் கொண்டவர். அவரைப் போலவே மேடையில் பேசுவார். தோற்றத்திலும் அண்ணாவைப் போல இருப்பார். எனவே 'சின்ன அண்ணா' என்றும் ‘தத்துவ மேதை தி.கோ.சீ’ என்றும் இவரை மக்கள் அழைத்தனர்.

தி. கோ. சீனிவாசன்
தி. கோ. சீனிவாசன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
தி. கோ. சீனிவாசன்
பிறந்ததிகதி (1922-11-14)நவம்பர் 14, 1922
பிறந்தஇடம் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
இறப்பு அக்டோபர் 9, 1989(1989-10-09) (அகவை 66)
பணி எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி, இதழாசிரியர்
தேசியம் இந்தியர்
பெற்றோர் கோதண்டபாணி, ஆனந்தவல்லி
துணைவர் சரஸ்வதி
பிள்ளைகள் டி. கே. எஸ். இளங்கோவன், டி. கே. எஸ். வில்லாளன்

பிறப்பும் கல்வியும் பணியும்

சீனிவாசன் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். தொடக்கக் கல்வியைத் திருச்சியிலும் பசுமலையிலும் படித்த இவர் பள்ளி இறுதிப் படிப்பை இராமநாதபுரத்தில் தொடர்ந்தார். பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே தொடர்வண்டித் துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். 1941 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த டீ.கே.சீ 18 ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்தார். பின்னர் அரசியல் உலகமும் எழுத்து உலகமும் இவரை ஆட்கொண்டது.

சென்னை வாழ்க்கை

1960 ஆம் ஆண்டில் சென்னைக்குக் குடியேறிய சீனிவாசன் கதைகளும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார். 11959 செப்டம்பர் 17ஆம் நாள் முதல் சென்னையிலிருந்து வெளிவந்த "தாய்நாடு" என்னும் வார இதழில் ஆசிரியராகப் பணிசெய்தார். [1] இருப்பினும் பொருளியல் நலிவும் குடும்பச்சுமையும் தொடர்ந்தன. எழுத்துப்பணியோடு தி.மு.க கூட்டங்களுக்குச் சென்று கட்சிப் பரப்புரையும் ஆற்றினார்.

இலக்கிய ஈடுபாடும் படைப்புகளும்

இளமை முதலே தமிழின் மீதும் இலக்கியத்தின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்தார். திருக்குறள், பாரதிதாசன் பாடல்கள் ஆகியவற்றைப் படித்து அவற்றில் தோய்ந்தார். திருச்சியில் இருந்தபோது 'ஞாயிறு இலக்கியக் கழகம்' என்னும் பெயரில் ஓர் இலக்கிய அமைப்பை நடத்தி வந்தார். ‘ஞாயிறு’ என்னும் கையெழுத்து இதழையும் நடத்தினார்.

சிறுகதைகள்

சீனிவாசன் எழுதிய மூன்று சிறுகதைத் தொகுதிகளில் முப்பது சிறு கதைகள் உள்ளன. அவை எல்லாம் கணவன் மனைவி உறவு, பெண்ணுரிமை சாதி வேற்றுமை குருட்டு நம்பிக்கைகளைக் கண்டித்தல் தாய் மொழிப்பற்று போன்றவற்றைக் கருப் பொருள்களாகக் கொண்டவை. இவரது 'உதிர்ந்த இதழ்கள்" என்னும் படைப்பிலக்கியம் 1961இல் சென்னை காவியக் கழகத்தால் வெளியிடப்பட்டது.

புதினங்கள்

  1. ஆடும் மாடும்; 1952
  2. ஊர்ந்தது உயர்ந்தால்; 1975; டி.கே.எசு. சரசுவதி, பி-3 லாயிட்சுசாலை, சென்னை -14
  3. மலர்ச்சியும் வளர்ச்சியும்

கட்டுரைகள்

தாமரைச் செல்வன், தாமரை, தேவன் கண்ணாடி என்பன இவருடைய புனை பெயர்கள் ஆகும். அரசியல் குமுகாயம் ஆகிய தளங்களில் கட்டுரைகளை எழுதினார். ‘ஞாயிறு’ என்னும் இதழில் அரசியல் கட்டுரைகளை எழுதினார். திருக்குறள் பற்றி வானொலியில் உரையாற்றினார். அவ்வுரையை 'வாழ்வு உணர்த்துகிறது' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை ஆக்கினார். இவர் எழுதிய "குறள் கொடுத்த குரல்" என்னும் நூல் சென்னை சாந்தி நிலையத்தால் 1957ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[2]

இதழ்

1959 ஆம் ஆண்டில் ‘தாய் நாடு’ என்னும் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். ஆனால் பொருளாதாரச் சிக்கலால் அதனைத் தொடர்ந்து நடத்த இயலவில்லை.

கட்சிப் பணி

திராவிட இயக்கத்திற்கு முன்னோடியாக விளங்கிய நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டிருந்தார். 1960 முதல் தி.மு.க வின் பொதுக் குழு, செயற்குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். திருச்சியில் நிகழ்ந்த தி.மு.க இரண்டாம் மாநில மாநாட்டில் 'தத்துவ வரலாறு' என்னும் தலைப்பில் பேசினார். அது முதல் அவரை 'தத்துவ மேதை' என்று அழைக்கலாயினர். 1962 இல் அகவிலை உயர்வை எதிர்த்து தி.மு.க நடத்திய மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டார். அதன் காரணமாக கைது செய்யப் பட்டு சிறை வைக்கப் பட்டார். தஞ்சையில் எசு.எம்.டி பேருந்து நிறுவனத்திற்கு எதிராக நடந்த மறியலை முன்னிருந்து நடத்தினார்.

பதவிகள்

தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினராகவும், மாநிலங்களவை கட்சித் தலைவராகவும் பணியாற்றினார். தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் தமிழகத் திட்டக்குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார். சீனிவாசன் தம் இறுதி நாள்களில் அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார். அவருக்கு ஆண் மக்கள் இருவர். அவர்களில் டி. கே. எஸ். இளங்கோவன் என்பவர் திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கிறார்.

மேற்கோள் நூல்

தி.கோ. சீனிவாசன் (ஆசிரியர் இராம.குருநாதன் சாகித்திய அகாதமி வெளியீடு,முதல் பதிப்பு 2005)

உசாத்துணை

  1. தென்னகம்; 7-8-1959; பக்.6
  2. திராவிடநாடு (இதழ்), 13-10-1957, பக்.12
"https://tamilar.wiki/index.php?title=தி._கோ._சீனிவாசன்&oldid=4477" இருந்து மீள்விக்கப்பட்டது