திருவொற்றியூர்ப் புராணம்

திரு ஒற்றியூர்ப் புராணம் (திருவொற்றியூர்ப் புராணம்) [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் திருவொற்றியூரில் வாழ்ந்த ஞானப்பிரகாசரால் கமலை ஞானப்பிரகாசர் என்பவர் வேறு செய்யப்பட்டது. சிவஞான சித்தியார் பரபக்க உரை, சங்கற்ப நிராகரண உரை ஆகியனவும் இவரால் செய்யப்பட்ட நூல்கள்.

வடமொழியிலுள்ள பதுமம், பிரமாண்டம் ஆகிய புராணங்களை இவர் தமது திருவாரூர்க் குருநாதரிடம் கற்று, அவர் சொன்னபடி திருவொற்றியூர்ப் புராணத்தைத் தமிழில் இயற்றியுள்ளார். இந்த நூல் பாயிரத்துடன் 16 சருக்கங்களாகப் பகுக்கப்பட்டு 599 விருத்தப் பாடல்களைக் கொண்டுள்ளது.

இதில் சொல்லப்படும் செய்திகளில் சில

  • பிரளயத்தை ஒற்றிய காரணத்தால் இவ்வூர் ‘ஒற்றியூர்’ எனப்பட்டது.
  • இவ்வூரில் சிவபெருமான் பலகையில் நடனமாடியதால் ‘பலகநாதர்’ என்னும் பெயர் பெற்றுள்ளார்.
  • பாணினி இவ்வூரைப் பூசித்த பின்னர் வியாகரணம் [2] செய்தார்.
  • வேதங்கள் இவ்வூரைப் பூசித்தன.

பாடல் – எடுத்துக்காட்டு [3]

கண்ணுறு தத்த்துவங்கள் கடந்த அன்புருவாய் போற்றி
எண்ணுறு வேள்விக்கு எல்லாம் இறையுமாய் இருந்தாய் போற்றி
உள் நிறை உயிர்க்கு எல்லாம் உயிருமாய் உறைவாய் போற்றி
நண்ணியே போற்றித் தொண்டர் இதயத்தில் நடிப்பாய் போற்றி

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  2. வடமொழி இலக்கணம்
  3. பொருள் விளங்குமாறு சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது.