திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில்
திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர்ஆகிய மூவரதும் தேவாரப் பாடலும் அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்றது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.[1]
தேவாரம் பாடல் பெற்ற திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | கோமாதுபுரம், திருஆமாத்தூர் |
அமைவிடம் | |
ஊர்: | திருவாமாத்தூர் |
மாவட்டம்: | விழுப்புரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அபிராமேஸ்வரர் |
தாயார்: | முத்தாம்பிகை |
தல விருட்சம்: | வன்னி, கொன்றை |
தீர்த்தம்: | ஆம்பலம்பூம்பொய்கை(குளம்), தண்ட தீர்த்தம்(கிணறு), பம்பை( ஆறு) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர் |
தல வரலாறு
பசுக்களுக்கு தாயகமான தலம்.லிங்கத்தில் பசுவின் குளம்பு வடு உள்ளது. அன்னையால் வன்னிமரமாக மாற்றப்பட்ட பிருங்கி முனிவர் சாப விமோசனம் அடைந்த தலம் . இதனால் வண்ணி மரம் தல விருட்சம் ஆகியது .கொன்றை மரமும் உள்ளது. இராமரும் பூஜித்த வரலாறு உண்டு . நந்தி, காமதேனு தவமிருந்து கொம்பு பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).வ
அமைவிடம்
இத்தலம் இந்தியாவில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் அமைந்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது திருஆமாத்தூர். சென்னையில் இருந்து வரும் போது (சென்னை-திருச்சி) நெடுஞ்சாலையில் விழுப்புரம் அடையும் முன் விழுப்புரம்-செஞ்சி சாலை சந்திப்புக்கு அடுத்து வலப்பக்கம் வரும் சிறய சாலையில் 2.2 கி.மீ செல்ல கோயிலை அடையலாம்.அல்லது விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் ஆமாத்தூர் பிரிவு சாலையில் 2.5 கி.மீ செல்லவேண்டும்.
கோயில் அமைப்பு
இத்தலத்தில் கோயில்களை அமைத்திருப்பதில் ஒரு புதுமை உள்ளது. இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் தனித்தனியாக ஒன்றை ஒன்று எதிர் நோக்கிய வண்ணம் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன இங்கே. இறைவன் கிழக்கு நோக்கியவராகவும் இறைவி மேற்கு நோக்கிய வண்ணமும் இருக்கிறார்கள். இறைவன் கோயில் வாயிலில் கோபுரம் இல்லை. அடிப்படை போட்டது போட்டபடியே நிற்கிறது. இறைவன் திருப்பெயர் அபிராமேசுவரர். அழகியநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரையே ஆமாத்தூர் அம்மான் என்று பாடிப் பரவுகிறார் திருஞான சம்பந்தர். இந்த ஆமாத்தூர் அம்மான் சுயம்பு மூர்த்தி. பசுக்கள் வழிபாடு செய்த அடையாளமாகக் குளம்புச் சுவடு லிங்கத்தின் தலையில் உள்ளது.
இந்தக் கோவிலுக்கு இரண்டு பிரகாரங்கள் உள்ளன. முதல் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் இக்கோயில் கட்டிய அச்சுத தேவராயனுக்கு சிலை இருக்கிறது. இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர், இராமர், காசி விசுவநாதர், சுப்பிரமணியர் எல்லாம் தனித் தனி சந்நிதிகளில் உள்ளனர்.
வழிபட்டவர்கள்
முருகன், திருமகள் எல்லாம் இத்தலத்தில் வழிபட்டு அருள் பெற்றவர் என்பது புராண வரலாறு. இவரை இராமன் இலங்கையிலிருந்து திரும்பும்போது வழிபாடு செய்திருக்கிறான். அதனால் 'இராமனும் வழிபாடு செய்யும் ஈசன் இவர்' என்பது அப்பர் பாடியுள்ளார். ஞானசம்பந்தர், அப்பர் இருவரையும் தவிர சுந்தரராலும் பாடப் பெற்றவர் இவர்.
மேற்கோள்கள்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
வெளி இணைப்புகள்
- வேங்கடம் முதல் குமரி வரை 2/ஆமாத்தூர் அம்மான்
- தல வரலாறு பரணிடப்பட்டது 2008-04-10 at the வந்தவழி இயந்திரம்
- கோயில் வரலாறும் கல்வெட்டு விபரமும்
- தலவரலாறு, அமைவிடம் பரணிடப்பட்டது 2008-03-31 at the வந்தவழி இயந்திரம்