திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில்
திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. நந்தனார் வணங்குவதற்காக இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 20வது தலம் ஆகும்.
அமைவிடம்
வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. சென்றால் ஒருபுறம் திப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது; அதனுள் - அச்சாலையில் 1 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம். கோயில் வரை வாகனம் செல்லும்.
நந்தி விலகிய கதை
சோழ நாட்டிலே ஆதனூர் என்ற ஒரு சிறிய ஊர். (இன்று மேல ஆதனூர் என்று வழங்குகிறது. திருப்புன் கூருக்கும் மேற்கே இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது) அங்கு ஒரு புலைப்பாடியில் பிறந்த நந்தன் ஓர் அந்தணரிடம் பண்ணையாளாக வேலை பார்க்கிறான். ஒரு சமயம் பக்கத்திலிருக்கும் திருப்புன்கூரில் உள்ள சிவலோக நாதனைத் தரிசிக்கப் புறப்பட்டு வருகிறான். கோயிலுக்குள் நுழைய முடியாத நந்தன் தேரடியில் நின்று இருந்தே இறைவனை தரிசிக்க முற்படுகிறான். ஆனால் கோயில் வாயிலில் பெரிய நந்தி உள்ளது. இறைவனைக் காணமுடியாத ஏக்கத்தில் 'உற்றுப் பார்க்கச் சற்றே இந்த நந்தி விலகாதா' என்று எண்ணுகிறான். அப்போது சிவலோக நாதன் தன் நந்தியைப் பார்த்து, சற்றே விலகியிரும் பிள்ளாய், நம் சந்நிதானம் மறைக்குதாம் என்று நந்திக்கு கூறுகிறார். நந்தியும் அப்படியே விலகிக் கொள்கிறது. நந்தனுக்கு சிவதரிசனம் கிடைக்கிறது. இதன்படி சிவலோகநாதன் சந்நிதிக்கு சென்று பார்க்கும்போது நந்தி வடபக்கம் விலகி வழி மறையாதிருப்பதைக் காண இயலும்.
கோயில் அமைப்பு
இக்கோயில் நிரம்பப் பெரிய கோயிலும் இல்லாமல், சின்னஞ் சிறிய கோயிலாக இல்லாமல் நடுத்தர அளவில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து நந்தி மண்டபம் வந்து, நந்தியெம்பெருமானை கடந்து கோயில் குரவறையில் இறைவனை தரிச்சிக்கவேண்டும். மகா மண்டபத்திலே தெற்கு நோக்கி சிவகாமிநாதன் சிவகாமியோடு நடம் ஆடிய கோலத்தில் நிற்கிறார் நடராசர். அவரது திருவடியில் குடமுழாவையும், பஞ்சமுக வாத்தியத்தையும் முழக்கும் பூதகணங்கள் உள்ளளன. அம்மனான சௌந்திரநாயகி தனி கோயிலில் உள்ளார். இத்தலத்தில் திருநாளைப் போவாராம் நந்தன் செப்புச் சிலை வடிவில் காண இயலும்.
திருத்தலப் பாடல்கள்
- இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருஞான சம்பந்தர் பாடிய பதிகம்
முந்தி நின்ற வினைக ளவைபோகச் சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தம் இல்லா அடிக ளவர்போலுங் கந்த மல்கு கமழ்புன் சடையாரே.
மூவ ராய முதல்வர் முறையாலே தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்
ஆவ ரென்னும் அடிக ளவர்போலும் ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே.
திருநாவுக்கரசர் பாடிய பதிகம்
பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப் பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்
துறவாதே கட்டறுத்த சோதி யானைத் தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத்
திறமாய எத்திசையுந் தானே யாகித் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிறமா மொளியானை நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே..
சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய பதிகம்
அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்தன் ஆருயி ரதனை வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீஎனை நமன்றமர் நலியில் இவன்மற் றென்னடி யானென விலக்கும்
சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே..
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புக்கள்
- வேங்கடம் முதல் குமரி வரை 2/திருப்புன்கூர் சிவலோகன்
- தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பரணிடப்பட்டது 2013-01-19 at the வந்தவழி இயந்திரம்
- தலவரலாறு, சிறப்புக்கள், அமைவிடம் பரணிடப்பட்டது 2013-01-19 at the வந்தவழி இயந்திரம்
- சம்பந்தர் பாடிய பதிகம் பரணிடப்பட்டது 2013-03-14 at the வந்தவழி இயந்திரம்
- அப்பர் பாடிய பதிகம் பரணிடப்பட்டது 2013-03-14 at the வந்தவழி இயந்திரம்
- சுந்தரர் பாடிய பதிகம் பரணிடப்பட்டது 2014-06-04 at the வந்தவழி இயந்திரம்