தருமபுரி கோட்டை காமாட்சியம்மன் கோயில்

தருமபுரி கோட்டை காமாட்சியம்மன் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தர்மபுரியில் கோட்டைக் கோயில்கள் என அழைக்கப்படும் மூன்று கோயில்களில் ஒரு கோயிலான அம்மன் கோயிலாகும்.[1]

கோயிலின் வரலாறு

நுளம்பர் கட்டிய பல கோயில்களில் இக்கோயில் குறிப்பிடத்தக்கது. இவர்கள் கி.பி. எட்டு - ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இக்கோயிலை கட்டியுள்ளனர். இக்கோயில் தற்போது காமாட்சியம்மன் கோயிலாக இருந்தாலும், ஒரு காலத்தில் சிவன் கோயிலாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சோழர் காலக் கல்வெட்டுகள் இக்கோயில் ஈசனை முழமாயிரமுடையார் அல்லது திருவேளாலீசுவரமுடையார் எனக் குறிப்பிடுகின்றன. இக்கோயில் நல்ல சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இராமாயணக் காட்சிகளை விவரிக்கும் சிற்பங்கள் உள்ளது சிறப்பு. நுளம்பரது காலத்திற்குப் பிறகு இக்கோயில் பராமரிப்பின்றி பாழ்பட்டுப் போனது. இந்நிலையில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருக்காளத்தியில் இருந்து தகடூருக்கு வந்த வண்ணானைக் கும்பிட்டார் என்னும் சிவனடியார் இந்தக் கோட்டை சிவாலயங்கள் பாழ்பட்டு இருப்பதைக் கண்டு வருந்தி அவற்றை புதுப்பிக்க எண்ணி, அப்போது சோழர்களின் கீழ் தகடூரை ஆண்டுவந்த அதியமான் மரபினனான இராசராச அதியமானிடம் சென்று இம்மூன்று கோயில்களையும் தகுந்த சிவப்பிராமணர்களைக் கொண்டு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென வேண்டினார். அதியமானோ தகுந்த சிவப்பிராமணர்களை அழைத்து வரும் பொறுப்பை அவரிடமே வழங்கினார். தகுந்த சிவப்பிராமணர்களை மன்னனிடம் அழைத்து வர, கோயில்களில் இரண்டு ஆண்டுகள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வழிபாடுகள் தொடங்கின என கல்வெட்டுகள் குறிக்கின்றன.[2] இந்தக் கோயில் விசயநகரப் பேரரசர் மல்லிகார்ஜுன ராயன் காலத்துக்குப் பிறகு காமாட்சி அம்மன் கோயிலாக மாற்றப்பட்டிருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.

அமைப்பு

அகன்ற திருவுண்ணாழியில் பெரிய பீடமும் அதில் நான்கடி உயரத்தில் நின்ற கோலத்தில் காமாட்சியம்மன் உள்ளார். தலையில் பொன்மணி மகுடத்துடனும், கழுத்தில் முத்துவடம், மலர் மாலை, எலுமிச்சம்பழ மாலை ஆகியவற்றுடன், கைகளில் பாராங்குசம், அபய முத்திரை கொண்டு விளங்குகிறார்.

இதையும் காண்க

மேற்கோள்கள்

  1. "அருள்மிகு கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோயில்". அறிமுகம். தினமலர். பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2016.
  2. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். p. 89.