இடையாறு மருந்தீசர் கோயில்

(டி. இடையாறு மருந்தீசர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இடையாறு மருந்தீசர் கோயில் சுந்தரர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]

தேவாரம் பாடல் பெற்ற
இடையாறு மருந்தீசர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருஇடையாறு, திருவிடையாறு
அமைவிடம்
ஊர்:டி இடையாறு
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மருந்தீசர்,கிருபாபுரீஸ்வரர்
தாயார்:ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி
தல விருட்சம்:மருதமரம்
தீர்த்தம்:சிற்றிடை தீர்த்தம் (கிணறு)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர், திருநாவுக்கரசர்

அமைவிடம்

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரத்திலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக திருக்கோவிலூர் செல்லும் பாதையில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்து [இடையாறு]] (T. எடையார்) உள்ளது. இவ்வூர் திருஇடையாறு, திருவிடையாறு என புராண காலங்களில் வழங்கப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் கரிகாலன் ஆட்சிக் காலத்தில் இடையாறு செல்வ வளம் மிக்க ஊராகத் திகழ்ந்தது.[2]

இறைவன், இறைவி

இத்தலத்தின் மூலவர் மருந்தீசர் ஆவார். இவர் கிருபாபுரீஸ்வரர் என்றும், இடையாற்றீசர் என்றும் அறியப்படுகிறார். அதனால் இக்கோயில் இடையாறு கிருபாபுரீஸ்வரர் கோயில் என்றும் அறியப்படுகிறது. கோயிலில் கிடைத்த கல்வெட்டில் இவ்விறைவன் 'மருதந்துறை உடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார். தாயார் ஞானாம்பிகை என்றும் சிற்றிடைநாயகி என்றும் வழங்கப்படுகிறார். சுகர் முனிவர், அகத்திய முனிவர் வழிபட்ட தலமாகும்.

அமைப்பு

மேற்கு நோக்கிய சந்நிதியுள்ள இக்கோயிலில் கொடிமரம் இல்லை. இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரினை 'கலியுகராமப் பிள்ளையார் ' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. கோயிலின் வாயிலை அடுத்து பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து கோபுரம் உள்ளது. அடுத்து மற்றொரு பலிபீடமும், நந்தியும் உள்ளன. மண்டபத்தில் நாகம், விநாயகர், மறைஞானசம்பந்தர், நால்வர், பைரவர் ஆகியோர் உள்ளனர். அருகில் நடராசர் சபை உள்ளது. கருவறைக்கு முன்பாக இடப்புறம் சூரியன், மற்றொரு பலி பீடம், நந்தியைக் காணலாம். திருச்சுற்றில் சண்டிகேசுவரர் சன்னதி, மருத மரம், வில்வ மரம், நவக்கிரக சன்னதி, அகத்தீசுவரர் சன்னதி, விநாயகர், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, பிராமி, இந்திராணி, சாமுண்டி, சரபேஸ்வரன் ஆகியோர் உள்ளனர். அடுத்து விநாயகர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதி வழியாக அம்மன் சன்னதிக்கு செல்லும் வகையில் உள்ளது. திருச்சுற்றில் இறைவி சன்னதியின் முகப்பு வாயில் பூட்டிய நிலையில் அதற்கு முன் நந்தி, பலிபீடத்துடன் உள்ளது.

சுந்தரர் தேவாரம் பாடல்

முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம்

சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர்

பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி

எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே.

சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர்

ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப்

பெற்றமேறிப் பெண்பாதி யிடம்பெண்ணைத் தெண்ணீர்

எற்றுமூர் எய்தமான் இடையா றிடைமருதே.

கடங்களூர் திருக்காரிக் கரைகயி லாயம்

விடங்களூர் திருவெண்ணி அண்ணா மலைவெய்ய

படங்களூர் கின்றபாம் பரையான் பரஞ்சோதி

இடங்கொளூர் எய்தமான் இடையா றிடைமருதே.

கச்சையூர் காவங் கழுக்குன்றங் காரோணம்

பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர்

கச்சியூர் கச்சிசிக்கல் நெய்த்தானம் மிழலை

இச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே.

நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த

பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர்

மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த

இறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே.

திங்களூர் திருவா திரையான் பட்டினமூர்

நங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர்

தங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்ல

எங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே.

கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன்

தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல்

எருக்கநாண் மலரிண்டை யும்மத்த முஞ்சூடி

இருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே.

தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர்

பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ

நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த

ஈசனூர் எய்தமான் இடையா றிடைமருதே.

பேறனூர் பிறைச்சென் னியினான் பெருவேளூர்

தேறனூர் திருமா மகள்கோன் றிருமாலோர்

கூறனூர் குரங்காடு துறைதிருக் கோவல்

ஏறனூர் எய்தமான் இடையா றிடைமருதே.

ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன்

தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளே

றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக்

கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே.

மேற் கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால் வெல்போர்ச் சோழன் இடையாறு அன்ன நல்லிசை வெறுக்கை தருமார் --- வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே - நக்கீரர் அகநானூறு 141

வெளி இணைப்புகள்