ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம்
ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம் (Joshua Benjamin Jeyaretnam, ஜனவரி 5, 1926 - செப்டம்பர் 30, 2008) சிங்கப்பூரின் அரசியல்வாதி. இவரே சிங்கப்பூர் விடுதலை அடைந்த பின்னர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முதலாவது எதிர்க்கட்சி உறுப்பினர் ஆவார்.
ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம் Joshua Benjamin Jeyaretnam | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for எதுவுமில்லை | |
பதவியில் 1997–2001 | |
முன்னையவர் | லீ சியூ சோ |
பின்னவர் | ஸ்டீவ் சியா |
நாடாளுமன்ற உறுப்பினர் for ஆன்சன் | |
பதவியில் 1981–1986 | |
முன்னையவர் | தேவன் நாயர் |
பின்னவர் | அழிக்கப்பட்டது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜனவரி 5, 1926 யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | செப்டம்பர் 30, 2008 சிங்கப்பூர் | (அகவை 82)
தேசியம் | சிங்கப்பூரியர் |
அரசியல் கட்சி | சிங்கப்பூர் தொழிலாளர் கட்சி, சீர்திருத்தக் கட்சி |
துணைவர் | மார்கரெட் ஜெயரத்தினம் |
பிள்ளைகள் | கென்னத், பிலிப் |
1981-86 காலப்பகுதியிலும், பின்னர் 1997-2001 காலப்பகுதியிலும் சிங்கப்பூர் தொழிலாளர் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். தொழிலாளர் கட்சியை விட்டு விலகிய இவர் இறப்பதற்குச் சில காலத்திற்கு முன்னர் சீர்திருத்தக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்திருந்தார்[1].
வாழ்க்கைச் சுருக்கம்
ஆங்கிலிக்க கிறிஸ்தவரான ஜெயரத்தினம் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார்[2]. சிங்கப்பூர் புனித அண்ட்ரூஸ் பாடசாலையில் கல்வி கற்ற லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் சட்டத் துறையில் இளமானிப் பட்டம் பெற்றார்.
1981 இல் இடம்பெற்ற ஆன்சன் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை 51.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில், ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) அனுபவித்து வந்த ஏகபோகத்தை உடைத்தெறிந்தார்.
சிங்கப்பூரின் முதலாவது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் 1984 இல் இடம்பெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
ஆனாலும், அரசியல் பின்னணியுடன் இவர் மேல் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு எதிர்காலத்தில் தேர்தல்களில் பங்குபற்ற முடியாதவாறு தடுக்கப்பட்டார். 1984 தேர்தலின் பின்னர் இரு மாதங்களில் கட்சி நிதி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
1986 ஆம் ஆண்டில் ஒரு குற்றச்சாட்டு தவிர அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து இவரை மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது. ஆனாலும் மேன்முறையீட்டை அடுத்து இவர் அனைத்துக் குற்றங்களிலும் குற்றவாளியாகக் காணப்பட்டு 3 மாத சிறைத்தண்டனையும், 5,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனை பின்னர் ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டது. இது அவரை மேலும் தேர்தல்களில் பங்குபர்ற்ற முடியாதவாறு தடுத்தது.
சிங்கப்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிரித்தானியாவின் பிரிவி கவுன்சிலுக்கு விண்ணப்பித்தார். அங்கு அவர் குற்றமற்றவர் எனத் தீர்ப்பாகியது. ஆனாலும் சிங்கப்பூர் அரசு இவர் குற்றமற்றவர் என ஏற்க மறுத்து விட்டது.
1997 இல் தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். 2001 இல், அவதூறு வழக்குகளில் ஆளும் பிஏபி கட்சி உறுப்பினர்களுக்கு இழப்பீடுகள் வழங்கத் தவறியதற்காக அவர் திவாலாகிப் போனதாக அறிவிக்கப்பட்டு அதன் விளைவாக நாடாளுமன்ற இடத்தை இழந்தார். வழக்குரைஞர் தொழிலும் செய்ய முடியாமல் போய்விட்டது.
சீர்திருத்தக் கட்சி
1971 இலிருந்து வழிநடத்தி வந்த தொழிலாளர் கட்சியில் இருந்து 2001 அக்டோபரில் ஜெயரத்தினம் வெளியேறி ஜூன் 18, 2008 இல் சீர்திருத்தக் கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைப் பதிவு செய்து இடைக்கால செயலாளரானார்[3]. த ஹெட்சட் மேன் அப் சிங்கப்பூர் (The Hatchet Man of Singapore) என்று ஜெயரத்தினம் ஒரு நூல் எழுதியுள்ளார். அந்நூலில், சிங்கப்பூரின் தலைவரும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ, ஜெயரத்தினம் உள்ளிட்ட எதிரணித் தலைவர்களை ஒழித்துக்கட்ட மேற்கொண்ட முயற்சிகளை விவரித்துள்ளார்.
மறைவு
2008, செப்டம்பர் 30 இல் மாரடைப்பு காரணமாக ஜெயரத்தினம் தனது 82வது அகவையில் காலமானார்[4].
மேற்கோள்கள்
- ↑ [1]
- ↑ "Still standing" இம் மூலத்தில் இருந்து 2007-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071109093104/http://www.singapore-window.org/sw03/030907st.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2008-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081004045507/http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/354833/1/.html.
- ↑ "ஜேபி ஜெயரத்னம் காலமானார்" இம் மூலத்தில் இருந்து 2008-10-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081002211113/http://www.malaysiaindru.com/?p=4781.
வெளி இணைப்புகள்
- ஜேபியின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2006-04-02 at the வந்தவழி இயந்திரம்
- ஜேபியின் வலைப்பதிவு பரணிடப்பட்டது 2008-10-30 at the வந்தவழி இயந்திரம்
- Jeyaretnam's trials and tribulations பரணிடப்பட்டது 2008-10-30 at the வந்தவழி இயந்திரம்
- Review of 'Lee's Law: How Singapore crushes dissent' பரணிடப்பட்டது 2006-06-27 at the வந்தவழி இயந்திரம்
- Amnesty International- background of defamation cases பரணிடப்பட்டது 2006-06-02 at the வந்தவழி இயந்திரம்
- சிங்கப்பூரின் சிரேஷ்ட அரசியல்வாதி ஜெயரெட்ணம் காலமானார் பரணிடப்பட்டது 2008-10-04 at the வந்தவழி இயந்திரம்
- எதிர்த்தரப்பு அரசியல்வாதி ஜேபிஜெ மறைவு பரணிடப்பட்டது 2008-10-08 at the வந்தவழி இயந்திரம்
- JB Jeyaratnam passes away
- ஜெயரத்தினத்திற்கு இறுதி மரியாதை பரணிடப்பட்டது 2008-10-05 at the வந்தவழி இயந்திரம்