ஜே. ஆர். ரங்கராஜு
ஜே. ஆர். ரங்கராஜு (1875 - 1959[1]) ஒரு தமிழ்ப் புதின எழுத்தாளர். தமிழ் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். பல புகழ்பெற்ற துப்பறியும் புதினங்களை எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவரது முழுப்பெயர் ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு. தமிழ்நாடு, பாளையங்கோட்டையில் 1875 இல் பிறந்தார். 1908 முதல் புதினங்கள் எழுதத் தொடங்கினார். திருவல்லிக்கேணி துப்பறியும் கோவிந்தன், இவர் உருவாக்கிய புகழ்பெற்ற துப்பறிவாளர் பாத்திரம். சவுக்கடி சந்திரகாந்தா எனும் புரட்சிப்பெண் பாத்திரத்தையும் உருவாக்கினார். இவரது புதினங்களில் கோயில்களில் நடக்கும் முறைகேடுகள், பெண் விடுதலை போன்ற சமூக சீர்திருத்தக் கருத்துகள் காணக் கிடைக்கின்றன. மொத்தம் எட்டு துப்பறியும் புதினங்கள் எழுதியுள்ளார். அவை பலமுறை மறுபதிப்பு கண்டுள்ளன. இராஜாம்பாள் 23 பதிப்புகள், சந்திரகாந்தா 13 பதிப்புகள், மோஹனசுந்தரம் 12 பதிப்புகள், ஆனந்தகிருஷ்ணன் 10 பதிப்புகள், ராஜேந்திரன் 9 பதிப்புகள், வரதராஜன் 2 பதிப்புகள் வெளிவந்தன. மொத்தம் 70,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகின. இராஜாம்பாள் புதினம் மேடை நாடகமாக்கப்பட்டது. வரதராஜன் புதினத்தின் பல பகுதிகள் இலக்கியத் திருட்டு என ரங்கராஜு மீது வழக்குப் போடப்பட்டது. இவ்வழக்கில் அவருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட்டது. இவரது நூல்களை 2009 இல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது.
இவர் 1910களில் வெளியான “கிரிஷிகன்” என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். ரங்கராஜூ ஒரு வேளாண்மைக்காரரும் வர்த்தகரும் கூட. சென்னை கிண்டி, ராஜ் பவன் மாளிகைக்கு எதிரில் அமைந்திருந்த அவரது “ராஜூ தோட்டம்” புகழ் பெற்றது.
திரைப்படங்கள்
ஜேயார் ரங்கராசுவின் இராஜாம்பாள் புதினம் 1935 இலும், 1951 இலும் இருமுறை திரைப்படமாக்கப்பட்டது. சந்திரகாந்தா புதினம் 1936 இல் திரைப்படமாக்கப்பட்டது.
புதினங்கள்
- ராஜேந்திரன்
- இராஜாம்பாள்
- மோஹனசுந்தரம்
- ஆனந்தகிருஷ்ணன்
- சந்திரகாந்தா
- வரதராஜன்
- விஜயராகவன்
- ஜெயரங்கன்
மேலும் காண்க
குறிப்புகள்
- ↑ சில தரவுகளில் இறப்பு ஆண்டு 1956 எனவும் குறிப்ப்டப்பட்டுள்ளது
மேற்கோள்கள்
- தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்
- Rajambal 1951, Blast From the Past, Randor Guy
- Indian Review, Volume 74
- மோஹனசுந்தரம் திறனாய்வு
- Early novels in India, Meenakshi Mukherjee
- துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? ம.ஜோசப், உயிரோசை இதழ் பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- இலக்கியச் சாதனையாளர்கள் – க.நா.சுப்பிரமணியம்
- 2009 தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம்
- இராஜாம்பாள்: கல்கியின் மதிப்புரை