ஜெ. சி. திசைநாயகம்

ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் (Jayaprakash Sittampalam Tissainayagam) என்பவர் இலங்கையின் ஒரு ஊடகவியலாளர். 2006, 2007 ஆம் ஆண்டுகளில் இலங்கைப் படைத்துறையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளின் போது படையினரால் குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக "நோர்த் ஈஸ்ட் மந்திலி" (North East Monthly) என்ற இதழில் பத்தி எழுதியிருந்தமை தொடர்பில் இவர் மார்ச் 7, 2008 இல் கொழும்பில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் எதுவுமின்றி மொத்தம் 426 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு, 2009, ஆகஸ்ட் 31 இல் கொழும்பு உயர் நீதிமன்றம் இவருக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தது[1]. 2010, ஜனவரி 11 ஆம் நாள் இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்[2].

ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம்
JS Tissainayagam
இனம் இலங்கைத் தமிழர்
குறிப்பிடத்தக்க மதிப்பு(கள்) ஊடகவியலாளர்

2008 கைது

2008, மார்ச் 7 இல் திசைநாயகம் தனது சக ஊடகவியலாளர்களான ஜசிகரன், வளர்மதி ஆகியோரைத் பயங்கரவாதப் புலன் விசாரணைப் பிரிவிற்குச் (TID) பார்க்கச் சென்றபோது கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளும் இன்றி ஆறு மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டட்து. 2006, 2007 ஆம் ஆண்டுகளில் தனது தனது நோர்த் ஈஸ்டர்ன் மந்திலி என்ற இதழில் எழுதிய கட்டுரைகளில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை குலைப்பதாக இருந்தததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செய்திகள் சேகரித்தமை, தனது பத்திரிகை மூலம் பெறப்பட்ட பணத்தை பயங்கரவாதிகளுக்கு அளித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அவரது பத்திரிகையும் அத்துடன் மூடப்பட்டது[3].

வழக்கு விசாரணைகளின் போது, தடுப்புக் காவலில் இருந்தபோது தாம் இரகசியக் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டதாகவும், பயமுறுத்தப்பட்டதாகாவும் தெரிவித்தார்[4]. இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அவர் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். திசைநாயகத்தின் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை பயங்கரவாதப் புலன் விசாரணைப் பிரிவு நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தது. அவ்வாக்குமூலம் தன்னை பயமுறுத்திப் பெற்றுக் கொண்டதாக திசைநாயகம் தெரிவித்திருந்தார்[5].

20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

2006 சூன் முதலாம் திகதிக்கும் 2007 சூன் முதலாம் திகதிக்கும் கிடைக்கப்பட்ட காலப் பகுதியில் நோர்த் ஈஸ்டர்ன் மன்த்லி சஞ்சிகையை வெளியிட்டமை, குறித்த சஞ்சிகையை அச்சிட்டு வெளியிட்டமை, மற்றும் சஞ்சிகையை வெளியிட நிதி திரட்டியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் ஜே. எஸ். திஸ்ஸநாயகத்துக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன. 2009, ஆகஸ்ட் 31 இல் கொழும்பு உயர் நீதிமன்றம் முதலாவது குற்றச்சாட்டுக்கு 5 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 5 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 10 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது[6].

மேற்கோள்கள்


விக்கி செய்திகளில்

வேறு

"https://tamilar.wiki/index.php?title=ஜெ._சி._திசைநாயகம்&oldid=10192" இருந்து மீள்விக்கப்பட்டது