ஜான் திவி
ஜான் திவி (John Aloysius Thivy, 1904 - 4 சூன் 1959) மலேசிய இந்திய காங்கிரசின் முதல் தலைவர். ம.இ.கா வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். மலேசிய இந்தியர்களுக்கு ஓர் அரசியல் கட்சியை உருவாக்கிக் கொடுத்தவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவர். மலேசிய இந்தியர்களின் அரசியலில் முன்னோடியாக வாழ்ந்தவர்.
ஜான் திவி John Thivy 约翰电视 | |
---|---|
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர் | |
பதவியில் 1946–1947 | |
பின்வந்தவர் | பூத் சிங் |
பதவியில் 1946–1947 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1904 கோலாகங்சார், பேராக் |
இறப்பு | சூன் 4, 1959 கோலாலம்பூர் |
அரசியல் கட்சி | மலேசிய இந்திய காங்கிரஸ், பாரிசான் நேசனல் |
சமயம் | கிறித்தவர் |
இந்திய தேசிய இராணுவத்தில் தீவிரமாக ஈடுபட்டு பர்மா முன்னணியில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியுடன் இணைந்து பிரித்தானியர்களுக்கு எதிராகச் செயல்பட்டார். 1945 செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் சாங்கி சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். இந்தியா விடுதலை அடைந்த பிறகே அவர் விடுதலையானார். அவர் விடுதலைக்கு இந்தியப் பிரதமர் நேரு முக்கிய பங்கு வகித்தார்.
வாழ்க்கைச் சுருக்கம்
லூயிஸ் திவ்வியநாதன்
ஜான் திவி 1904 ஆம் ஆண்டு மலேசியா, பேராக், கோலாகங்சாரில் பிறந்தார். அவருடைய முழுப்பெயர் ஜான் அலோசியஸ் திவி. இவருடைய தந்தையாரின் பெயர் லூயிஸ் திவ்வியநாதன். இவர் கோலாகங்சாரில் புகையிலை, சுருட்டுத் தொழில் வியாபரம் செய்து வந்தார்.
லூயிஸ் திவ்வியநாதனின் மூத்த புதல்வர் ஜான் திவி. தன் தகப்பனாரின் பெயரான திவ்வியநாதன் என்பதைச் சுருக்கி திவி என்று வைத்துக் கொண்டார். கோலாகங்சார் கிளிபோர்ட் ஆங்கிலப் பள்ளியில்தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பயின்றார்.
மகாத்மா காந்தியுடன் சந்திப்பு
பின்னர், தைப்பிங் செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் இடைநிலைப் பள்ளியில் தன் கல்வியைத் தொடர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை மேற்கொண்டார். அதன் பின்னர் லண்டனுக்குச் சென்று சட்டக் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினார்.
இந்தக் காலகட்டத்தில் தான் இவர் மோகன்தாஸ் காந்தியைச் சந்தித்தார்[1]. இந்திய விடுதலை இயக்கத்தில் ஜான் திவிக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.
மலாயா திரும்பியதும் ஈப்போவில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். கிந்தா இந்தியர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின் பொதுப் பணிகளில் தீவிரம் காட்டினார். 1940 ஆம் ஆண்டு வரையில் ஈப்போவில் வழக்கறிஞராகப் பணி புரிந்து வந்தார்.
இந்தியா தற்காலிக அரசாங்கத்தில் அமைச்சர் பதவி
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மலாயாவுக்கு வந்த போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பழக்கத்தின் மூலமாக நேதாஜியின் அன்பையும் ஆதரவையும் பெற்றார். பிரித்தானியாருக்கு எதிராக இயங்கிய இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார். நேதாஜியின் நம்பிக்கைக்கு உரியவராக வாழ்ந்தார்.
1943 அக்டோபர் 21 ஆம் தேதி சிங்கப்பூரில் சுதந்திர இந்தியா தற்காலிக அரசாங்கம் நேதாஜியினால் அமைக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜான் திவி இடம் பெற்றார். அதன் பின்னர் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை முழுமையாக மேற்கொள்ளாமல் சமூக, அரசியல், பொதுப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்டப் பணிகளிலும் நேதாஜிக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.
இந்தக் காலகட்டத்தில் மலாயா, சிங்கப்பூர் இந்தியர்களிடையே அதிக செல்வாக்கு உள்ளவர்களாக நேதாஜி, ராஜ் பிகாரி போஸ், ஜான் திவி ஆகியோர் விளங்கினர். 1945 ஆகஸ்டு 21-இல் சிங்கப்பூரிலும் மலாயாவிலும் சப்பானியர்கள் சரணடைந்தனர். அவர்களுடைய ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. இந்திய தேசிய இராணுவத்தின் நடவடிக்கைகளும் நிலைகுத்திப் போயின. அதற்கு முன்னர், ஆகஸ்டு 18-இல் சிங்கப்பூரில் இருந்து டோக்கியோ செல்லும் வழியில் நிகழ்ந்த விமான விபத்தில் விடுதலை வீரர் நேதாஜி மரணம் அடைந்தார்[2].
சிங்கை சாங்கியில் சிறைவாசம்
அந்த விபத்திற்குப் பின்னர், தலைவர் இல்லாத நிலையில் இந்திய தேசிய இராணுவம் முடங்கிப் போனது. இந்திய தேசிய இராணுவத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த இந்திய அதிகாரிகளைப் பிரித்தானிய இராணுவம் கைது செய்து அவர்களை சிங்கப்பூர் சாங்கிச் சிறைச்சாலையில் அடைத்து வைத்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் ஜான் திவி விடுதலை செய்யப்பட்டார்.[3].
ஜான் திவியின் விடுதலையில் இந்தியப் பிரதமர் நேருவின் நேரடியான தொடர்பு இருந்தது. நேதாஜி வளர்த்துவிட்ட தேசப் பற்று ஜான் திவியின் உடலில் கொழுந்து விட்டு எரிந்தது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் மலாயாவுக்கும் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்கிற அவசியத்தை ஜான் திவி உணர்ந்தார்.
ம.இ.கா தோற்றம்
மலாயா இந்தியர்களுக்கு தேசிய அரசியல் அமைப்பு
மலாயாவுக்கு சுதந்திரம் கிடைக்க தன் நண்பர்களுடன் சேர்ந்து போராடுவது என்று ஜான் திவி முடிவு செய்தார். ஆகவே, மலாயா இந்தியர்களுக்கு தேசிய அளவில் ஓர் அரசியல் அமைப்பு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். அதன் விளைவாக 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெற்ற அகில மலாயா இந்தியர்கள் மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில் மலாயா இந்தியர் காங்கிரஸ் தோற்றம் கண்டது. மலேசியாவில் ம.இ.கா உருவாவதற்கு இந்திய தேசிய இராணுவத் தொண்டர்களே முக்கிய பங்கு வகித்தனர். அவர்களின் உத்வேகத்தினால் தான் மலேசிய இந்தியர்களுக்கு என்று ஒரு தனி அரசியல் கட்சி உருவானது.
இந்தச் சமயத்தில் மலாய்க்காரர்களுக்கு இந்தியர்களின் மலாயா நாட்டு விசுவாசத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. மலாயா இந்தியர்கள் முழு விசுவாசத்துடன் நாட்டின் விடுதலைக்காகப் போராடுவார்கள் என்று ஜான் திவி உறுதி அளித்தார்
ஜான் திவியின் முதல் பேருரை
நேதாஜியின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிய இந்தியச் சுதந்திரக் கழகம், இந்திய தேசிய இராணுவம் போன்ற இயக்கங்களுடன் தீவிரமான தொடர்புகளைக் கொண்டிருந்த மலேசிய இந்தியவாதிகளே ம.இ.காவின் முதல் நிர்வாகக் குழுவில் பொறுப்புகளை வகித்தனர்.
ஜான் திவி ம.இ.கா தலைவர் பொறுப்பை ஏற்று முதல் பேருரை ஆற்றும் போது நேதாஜியை நினைவு கூறும் வகையில் அவருடைய உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
“ | தென்கிழக்கு ஆசியாவில் வாழும் இந்தியர்கள் போர்க் காலத்தில் பல தியாகங்களைச் செய்துள்ளனர். தங்களின் வீரத்தையும் தீரத்தையும் வெளி உலகிற்கு உணர்த்திக் காட்டி உள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட இராணுவப் பயிற்சிகளும் ஒழுங்குமுறைகளும் அவர்களைத் துணிச்சல்காரர்களாகவும் நம்பிக்கை உடையவர்களாகவும் மாற்றிக் காட்டியுள்ளன. அவற்றினால் நம் இந்தியர்கள் ஒற்றுமை எனும் ஓர் உயர்ந்த தத்துவப் பொக்கிஷத்தைப் பெற்றுள்ளனர். | ” |
இந்திய அரசாங்கம் வழங்கிய பதவி
ம.இ.கா தோற்றம் கண்ட மறு ஆண்டான 1947-இல் அதன் முதல் பேராளர் மாநாடு ஜான் திவியின் தலைமையிலேயே நடைபெற்றது. அதே ஆண்டு ஜூலை மாதம் இந்திய அரசாங்கம் அவரை மலாயா, சிங்கப்பூர் நாடுகளின் பிரதிநிதியாக நியமனம் செய்தது. அந்தப் பதவி ஒரு தூதர் அந்தஸ்தைக் கொண்டதாகும். அந்தப் புதிய பொறுப்பை ஏற்க ஜான் திவி முதலில் தயக்கம் காட்டினார்.
இருப்பினும் ஜான் திவியின் நலன்களில் அக்கறை கொண்ட நண்பர்கள் சிலர் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டனர். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே 1947 ஆகஸ்டு மாதம் 3-இல் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஜான் திவி பொறுப்பேற்றார். மலாயா, சிங்கப்பூர் நாடுகளின் இந்திய அரசாங்கப் பிரதிநிதியானதும் ம.இ.கா தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாய நிலைமையும் ஏற்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் அமைச்சர் தகுதிக்கு உயர்வு
இந்தக் கட்டத்தில் ஜான் திவி இந்தியாவின் அரசாங்கப் பிரதிநிதியாக ஹாங்காங், வடபோர்னியோ, சரவாக், புருணை போன்ற நாடுகளுக்கும் பொறுப்பு வகித்தார். 1950-இல் மொரிசியஸ் நாட்டிற்கு இந்தியாவின் அரசாங்க ஆணையராக அனுப்பப்பட்டார். 1952-இல் நெதர்லாந்து நாட்டின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார்.
1953-இல் இந்திய அரசாங்கத்தின் அமைச்சர் தகுதிக்கு உயர்த்தப்பட்டு, சிரியா நாட்டிற்கு இந்தியத் தூதராக அனுப்பப்பட்டார். 1955-இல் இத்தாலி நாட்டின் தூதராகப் பொறுப்பேற்றார். ஜான் திவி 1959 ஜூன் மாதம் 4 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
வெளி இணைப்புகள்
- Biographies of INA freedom Fighter National Archives of Singapore பரணிடப்பட்டது 2012-02-05 at the வந்தவழி இயந்திரம்
- Times of India
- Malayasian Indian Congress. History பரணிடப்பட்டது 2006-02-20 at the வந்தவழி இயந்திரம்
- Subhas Chandra Bose and the Indian National Army. Asian Journal, Radio Singapore International பரணிடப்பட்டது 2007-07-17 at the வந்தவழி இயந்திரம்.
- Reference to the "late John Thivy" பரணிடப்பட்டது 2012-11-04 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ John Aloysius Thivy was a lawyer who studied in London. When he was studying in London he met Mohandas Karamchand Gandhi and was inspired by Gandhi's determination to fight for India's Independence.
- ↑ The alleged death of Subhas Chandra Bose, the supreme commander of Azad Hind Fauj and Free India Legion in a plane crash in Taiwan on August 18, 1945, has long been the subject of dispute.
- ↑ "The British imprisoned John Thivy after World War Two at Changi Prison for his involvement in anti-colonial activities. He was released after India achieved Independence." இம் மூலத்தில் இருந்து 2011-11-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111101021945/http://www.s1942.org.sg/s1942/indian_national_army/freedom.htm.