சௌந்தரிய லகரி

சௌந்தரிய லஹரி (சௌந்தர்ய லஹரி) (Saundarya Lahari) என்பது புஷ்பதந்தர் என்ற சிவ பக்தன், கந்தர்வ ராஜன் செய்யப்பட்டு, ஆதிசங்கர பகவத்பாதரால் 8 அல்லது 9-ம் நூற்றாண்டில் வடமொழியில் தொகுக்கப்பட்டது.தேவி மஹா திரிபுரசுந்தரி மீது செய்யப்பட்ட புராதன புண்ணிய நூலாகும். அம்பிகையைப் புகழ்ந்து எழுதப்பட்ட இந்நூல் மொத்தம்103 ஸ்லோகங்களைக் கொண்டது, எனினும் வழக்கில் 100 ஸ்லோகங்கள் உள்ளது. முதல் 40 சுலோகங்கள் அம்பிகையின் அருளைப் புகழ்கின்றன. இது ஆனந்த லஹரி (ஆனந்த வெள்ளம்). அடுத்த 60 ஸ்லோகங்கள் அம்பிகையின் அழகைப் புகழ்கின்றன. அது சௌந்தரிய லஹரி (அழகு வெள்ளம் / அம்பிகை அழகின் அலை).

செளந்தரிய லகரியினை இயற்றிய ஆதி சங்கரர் (ஓவியம்: ராஜா ரவிவர்மா, 1904)

தமிழ் மொழிபெயர்ப்பு

சௌந்தரிய லகரியினை 12-ம் நூற்றாண்டில் வீரை கவிராச பண்டிதர் "அம்பிகைப் பாடல்" என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார்.[1] அழகின் அலை என்பது இதில் 100 பாடல்களுள்ளன. பொதுவாக சவுந்தர்ய லஹரி - அழகின் அலை என்று அழைக்கப்பட்டாலும், இது இரு பகுதிகளைக் கொண்டது. முதல் 41 பாடல்களும் ஆனந்த லஹரி - ஆனந்த அலை என்றும் மற்றவை சவுந்தர்ய லஹரி அல்லது அழகின் அலை என்றும் தமிழில் அறியப்படும்.[2]

முழுமுதல் தெய்வமாகிய அம்பாளை மனமுருகி துதிப்பவர்களுக்கு, அலைபோல் தொடர்ந்து ஆனந்தத்தை அளிப்பதால் இது ஆனந்த அலை என்றும் இரண்டாவது பகுதி அம்பாளின் திருமேனியழகை வருணிப்பதால் அது சவுந்தர்ய லஹரி - அழகின் அலை - என்றும் ஆனது.

வடமொழி நூலிலுள்ள பகுப்பைப் போலவே 40, 60 என்னும் பகுப்பு தமிழ்நூலிலும் உள்ளது.

  • ’ஆனந்த லஹரி, சௌந்தரிய லஹரி, அலங்கார லஹரி முற்றும்’ என நூலின் முடிவில் வரும் தொடர் [3] இந்த நூலமைப்பை விளக்கும் தொடர்.

நூலின் பாங்கைக் காட்டும் பாடல் ஒன்று எடுத்துக்காட்டுக்குத் தரப்படுகிறது.

சிவமெனும் பொருளும் ஆதி சத்தியொடு

சேரின் எத் தொழிலும் வல்லதாம்

இவள் பிரிந்திடில் இயங்குதற்கும் அரிது

அரிதெனா மறை இசைக்குமால்

தவபெரும் புவனம் எவ் வகைத் தொழில்

நடத்தி யாவரும் வழுத்து தாள்

அவனியின் கண் ஒரு தவமிலார் பணியல்

ஆவதோ பரவல் ஆவதோ [4]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005

அடிக்குறிப்பு

  1. Nagaswamy, R. (n.d.). "Saundarya Lahari in Tamil (Volume 19)". Tamil Arts Academy. பார்க்கப்பட்ட நாள் 26 September 2020.
  2. "Saundarya lahari in Tamil". Archived from the original on 2021-02-10. பார்க்கப்பட்ட நாள் 2016-11-18.
  3. புலவர் புராணம்
  4. பாடல் 1
"https://tamilar.wiki/index.php?title=சௌந்தரிய_லகரி&oldid=17292" இருந்து மீள்விக்கப்பட்டது