பவழ மல்லி
Flower & flower buds I IMG 2257.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: மூவடுக்கிதழிகள்
வரிசை: Lamiales
குடும்பம்: Oleaceae
பேரினம்: Nyctanthes
இனம்: N. arbor-tristis
இருசொற் பெயரீடு
Nyctanthes arbor-tristis
லின்னேயசு
அடுக்குப் பவளமல்லி

பவழமல்லி அல்லது பவளமல்லி அல்லது பாரிஜாதம் என்னும் இம்மரம் தென் - தென்கீழ் ஆசிய நாடுகளில் வளரும். பவழமல்லியின் அறிவியல் பெயர் Nyctanthes arbor-tristis ஆகும். இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக சிறப்பிடம் பெறுகின்றது். பவழ (பவள) நிறக் காம்பும் வெண்ணிறமான இதழ்களும் உடைய பூக்களைக் கொண்டது. இதற்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும். இம்மரம் இருக்கும் இடமே நறுமணம் வீசும். இந்த மலரைச் சேடல் என்றும் குறிப்பிடுவர்.[1]

சேடல்

சேடல் என்னும் மலர் மகளிர் தொகுத்து விளையாடிய மலர்களில் ஒன்று.[2] வைகையாற்றுப் படுகையில் இது பூத்துக் கிடந்தது என்றும்,[3], மதுரையைக் காவல் புரிந்துவந்த நாற்பெரும் பூதங்களில் ஒன்று சேடல் மலரை அணிந்திருந்தது என்றும்[4] இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.இதற்குப் பாரிஜாத மலர் என்ற பெயர் உண்டு

சேடல் மலரை அறிஞர்கள் இக்காலப் பவள-மல்லி எனக் குறிப்பிடுகின்றனர். சேடல் என்னும் சொல்லில் செந்நிறத்தைக் குறிக்கும் வேர்ச்சொல் உள்ளது. பவள நிறம் என்பது செந்நிறம். பவளமல்லிப் பூவின் புறவிதழில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூவின் காம்பு சிவப்பாக இருக்கும். எனவே இதனைச் சேடல் எனல் பொருத்தமானதே.

இயல்புகள்

இம்மரம் 3 - 4 மீட்டர் உயரத்திற்கு மிக விரைவாக வளரும். நேரடியாக வெயிலிலேயே அல்லாது கொஞ்சம் நிழலிலும் வளர்க்கப்பட வேண்டும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் கூரான முனைகளுடையவையாகக் காணப்படும். கிளை நுனிகளில் பூக்கும் இதன் பூக்கள் வெண்ணிறமாயும் பவள நிறத்திற் காம்பைக் கொண்டவையாயும் உள்ளன. இப்பூகள் 5-7 இதழ்களைக் கொண்டவை. இப்பூக்கள் இரவிற் பூத்து காலையில் உதிர்ந்து விடும். இதன் பழங்கள் தட்டையாக, வட்ட வடிவில் காணப்படும். இரு விதைகளைக் கொண்டிருக்கும். இம்மரத்தின் பூவின் வாசம் 100 அடி சுற்றளவுக்கு வீசும் தன்மை கொண்டது. இதன் பூ முன்னிரவில், அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் பூப்பதால் வடமொழியில் பிரம்மதர்ஷன் புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் கோடைகாலத்தில் உதிர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை வடிகட்டும் தன்மை கொண்டது.[5]

நீர்த் தேக்கம் அதிகமில்லாத இடங்களில் நன்கு வளரும். வட அத்த கோளத்தில் இம்மரம் செப்டெம்பர்-டிசம்பர் வரை பூக்கும்.

இதனைப்போலவே இரவில் பூக்கும் இன்னொரு தாவரம் மரமல்லிகை ஆகும். அதன் அறிவியற் பெயர்: Millingtonia hortensis

பயன்

இலைகள் தளவாடங்களை மெருகேற்றத் தேய்ப்பதற்காகப் பயன்படும்.

பூவின் காம்பிலிருந்து பெறப்படும் பவளநிறச் சாயம் டுசார்(Tussar/Tussore Silk) பட்டு எனப்படும் பட்டுத்துணிகளுக்கு நிறமேற்றப் பயன்படும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் பவளமல்லி விதைகளும் இலைகளும் பூக்களும் வயிற்றுத் தொந்தரவு, மூட்டு/என்பு வலி, காய்ச்சல், தலைவலி என்பவற்றிற்கும் இன்னும் பல விதங்களிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.

புராணக் கதைகளில்

பாரிஜாதம் என்றும் அறியப்படுகிற பவளமல்லியை தேவலோகத்திலிருந்து இருந்து பூமிக்கு கிருஷ்ணன் கொண்டு வந்ததாக இந்திய புராணக் கதையொன்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணனின் மனைவியரான சத்திய பாமைக்கும் ருக்மிணிக்கும் இம்மரத்தைக் குறித்துச் சண்டை எழுந்தததாயும், அதைத் தீர்க்கும் முகமாக மரம் பூக்கும் காலங்களில், பவளமல்லிப் பூக்கள் ருக்மிணியின் தோட்டத்தில் உதிரும் வகையில் மரத்தைச் சத்தியபாமையின் தோட்டத்தில் கிருஷ்ணர் நட்டு பிணக்கைத் தீர்த்ததாயும் மேலும் அக்கதையில் கூறப்படுகிறது.[சான்று தேவை]

இன்னுமொரு புராணக்கதையும் பவளமல்லி தொடர்பாகச் சொல்லப்படுகிறது. பாரிஜாதகா எனும் இளவரசி சூரியன் மேல் விருப்புற்றதாயும் சூரியன் அவளைக் கைவிட்டபோது தன்னை அழித்துக் கொண்டாள் எனவும் சொல்லப்படுகிறது. அவள் எரிந்த சாம்பலில் இருந்து தோன்றிய மரமே பவளமல்லி மரமெனவும், தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதைத் தாங்க முடியாமல் இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் எனவும் கருதப்படுகிறது.

அடிக்குறிப்பு

  1. விரியும் கிளைகள் 17: தேவலோக பவளமல்லி தி இந்து தமிழ் 15 பிப்ரவரி 2016
  2. குறிச்சிப்பாட்டு 82
  3. சிலப்பதிகாரம் 13-153
  4. சிலப்பதிகாரம் - 22-69
  5. விரியும் கிளைகள் 18: சூழல் மாசை வடிகட்டும் தாவரம்

வெளியிணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=சேடல்&oldid=11289" இருந்து மீள்விக்கப்பட்டது